Last Updated : 13 May, 2018 11:01 AM

 

Published : 13 May 2018 11:01 AM
Last Updated : 13 May 2018 11:01 AM

பக்கத்து வீடு: துணிப்பையைத் தூக்கிச் செல்லுங்கள்

ல்ல சம்பளம் அளிக்கும் வேலையைத் துறந்து தங்கள் கிராமத்துக்குத் திரும்பி விவசாயம் போன்ற அடிப்படைத் தொழில்களில் ஈடுபடும் போக்கு இன்றைய தலைமுறையினரிடம் அதிகரித்துள்ளது. இவர்கள் ஆரோக்கிய சமூக மாற்றத்துக்கான விதைகள்.

பிளாஸ்டிக் கழிவுப் பைகளிலிருந்து பயன்படுத்தத்தக்க பொருட்களைத் தயாரிக்கும் ‘ஆரோகனா ஈகோசோஷியல் டெவலப்மெண்ட்ஸ்’ எனும் நிறுவனத்தை நடத்தும் இளம் பெண் தொழிலதிபர் அமிதா தேஷ்பாண்டேயும் அத்தகைய விதைகளில் ஒருவர்தான்.

சுற்றுச்சூழல் அக்கறை

அமிதா சிறு வயதிலிருந்தே சுற்றுச்சூழலின்மீது அக்கறைகொண்டிருந்தார். பள்ளியில் படித்தபோதே பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை குறித்து கருத்தரங்கமும் நடத்தியுள்ளார். அதன்பின் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை இவர் அறவே தவிர்த்துள்ளார். தான் மட்டுமின்றி வீட்டிலுள்ள மற்றவர்களையும் பிளாஸ்டிக் பயன்படுத்தாதவர்களாக மாற்றியிருக்கிறார்.

சுற்றுச்சூழலைப் பேணும் துறையிலிருக்கும் வேலைவாய்ப்பு குறித்த தெளிவின்மையால், கல்லூரியில் பொறியியல் படித்தார். பொறியியல் பட்டம் பெற்றபின் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வர்த்தக ஆய்வாளராக நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது அந்த நிறுவனத்தின் சி.எஸ்.ஆர். (கார்பரேட் சமூகப் பொறுப்புணர்வு) திட்டப்பணிகளில் தன்னார்வத்துடன் பங்கேற்றுள்ளார்.

நான்கு வருடங்களுக்குப் பிறகு வேலையைத் துறந்து அமெரிக்காவில் புர்டூ பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழலியலில் பட்ட மேற்படிப்பு படிக்கச் சென்றார். அதற்குப்பின் சிகாகோவில் அதே துறையில் சிறிது காலம் ஆலோசகராகப் பணிபுரிந்துள்ளார். தாயகம் திரும்பியபின், பெரும் வணிக நிறுவனங்களின் சி.எஸ்.ஆர். திட்டப்பணிகளை நிறைவேற்றும் மும்பை தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். அந்தப் பணி அவருக்குக் கழிவு மேலாண்மை குறித்த நேரடி அனுபவத்தை அளித்துள்ளது.

ஆரோகனாவின் தோற்றம்

2013-ம் வருடம் தன் நண்பர் நந்தன் பட் உடன் இவர் கேதார்நாத் சென்றார். அங்கு அவர்கள் நிலச்சரிவில் சிக்கிக்கொண்டனர். அந்த நிலச்சரிவு இயற்கையாக நடந்தது அல்ல. சுற்றுச்சூழல் சீரழிவால் ஏற்பட்ட விபத்து. அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம், சுற்றுச்சூழலைப் புனரமைப்பதற்காக இருவரும் அங்கேயே சில மாதங்கள் தங்கினார்கள். பல்வேறு உதவிப் பணிகளை செய்தார்கள். அவர்களுக்கு அங்கு நேர்ந்த அனுபவம்தான் ஆரோகனாவுக்கு வித்திட்டிருக்கிறது.

2013-ல் உத்தரகண்டில் தங்களது ‘ஆரோகனா ஈகோசோஷியல் டெவலப்மெண்ட்ஸ்’ நிறுவனத்தைத் தொடங்கினார்கள். முதல் இரண்டு வருடங்கள் பெரும் நிறுவனங்களின் சுற்றுச்சூழல் செயல்திட்டங்களுக்கு ஆலோசனை மட்டுமே வழங்கியுள்ளனர். வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் குறித்துப் புரிந்துகொள்வதற்காக நாடெங்கும் பயணித்தனர். ஏனென்றால், ஆரோகனாவின் நோக்கமே அந்த இரண்டு அம்சங்களின் மேம்பாடுதானே.

ஆரோகனா ஒரு சமூக நிறுவனம். அது தொண்டு நிறுவனமல்ல. அன்பளிப்பையும் நன்கொடையையும் சார்ந்திருக்காதபடி நிறுவனத்தை வளர்க்க வேண்டுமென்பதில் அமிதா உறுதியாக இருந்தார். இந்த உறுதியான நிலைப்பாட்டால்தான் ஆரோகனாவில் பொருட்களைத் தயாரித்து நாடெங்கும் மட்டுமில்லாமல் அயல்நாட்டிலும் விற்க முடிந்திருக்கிறது.

ஆரோகனாவின் பணிகள்

சமூகம், சுற்றுச்சூழல் மேம்பாடே அமிதாவின் லட்சியம். கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு அதிக எண்ணிக்கையில் மக்கள் இடப்பெயர்கிறார்கள். இந்தக் கூடுதல் எண்ணிக்கையைச் சமாளிக்க முடியாமல் நகரங்கள் ஏற்கெனவே திணறிக்கொண்டிருக்கின்றன. இதனால் நகரங்களின் உள்கட்டமைப்பு வசதிகளும் சரிய ஆரம்பித்துவிட்டன.

aarohona2

அதனால் கிராமப்புறங்களிலும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளிலும் பணியாற்ற அமிதா விரும்பினார். கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக்கொண்டிருந்தாலும், ஆரம்ப காலத்தில் அதற்குத் தகுந்த கிராமங்களைக் கண்டறிய அமிதா மிகவும் சிரமப்பட்டிருக்கிறார்.

அமிதா வசிக்கும் புனே நகருக்கு அருகிலிருக்கும் கிராம மக்கள் வசதிபடைத்தவர்களாக இருந்ததால், அமிதாவின் திட்டத்துக்கு அங்கே தகுந்த ஆதரவில்லை. ஒரு கட்டத்தில் அந்த மக்கள் முடியாது என்றே மறுத்துவிட்டனர். எனவே, புனே நகருக்கு அப்பாலிருக்கும் தன் பெற்றோரின் பூர்விகக் கிராமத்துக்கு அமிதா சென்றுள்ளார்.

அந்த மக்கள் அமிதாவையும் அவர் நோக்கத்தையும் இரு கரம் நீட்டி அணைத்துக்கொண்டனர். அங்கிருந்து நகரத்துக்கு இடம்பெயர வாய்ப்புள்ள இளம் தலைமுறையினரை இனம்கண்டு, அவர்களுக்கு அங்கேயே தொழில் செய்வதற்கான பயிற்சியை அமிதா முதலில் வழங்கியுள்ளார்.

நுகர்வோருடனான சிக்கல்கள்

சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து ஆரோகனா தயாரித்து விற்கும் பொருட்களைப் பார்த்து மக்கள் சந்தோஷப்பட்டனர். தயாரிப்புச் சிக்கல்கள் காரணமாக அதன் விலை சற்று அதிகமாகவே இருந்துள்ளது. ஆனால், இவையெல்லாம் கழிவிலிருந்து தயாரிக்கும் பொருட்கள்தானே? அதற்கு ஏன் இவ்வளவு அதிகமான விலை என்று மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

amith1,jpgright

அதற்குப் பின் அந்தப் பொருட்களை விற்கும் இடங்களில், அவை எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பதையும் அதில் உள்ள சிக்கல்களையும் நுகர்வோரிடம் விளக்கி அதிருப்தியை அமிதா களைந்துள்ளார்.

வளர்ந்து நிற்கும் சிறு விதை

“சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் எவை என்பதை அறியும் அறிவை இன்றைய கல்வி நம் அனைவருக்கும் வழங்கியுள்ளது. எல்லாக் கணங்களிலும் நமக்கு வேண்டியது என்ன என்பதைத் தேர்வுசெய்யும் வாய்ப்பு நமக்கு உள்ளது. ஆனால், பிரச்சினை நம் தேர்வுகளில்தான் உள்ளது. எனவே, உங்கள் வசதியை மட்டும் கருத்தில்கொண்டு வெறுங்கையுடன் கடைக்குச் சென்று அவர்கள் தரும் பிளாஸ்டிக் பைகளில் பொருட்களை வாங்கிவராமல், சுற்றுச்சூழலையும் சேர்த்து யோசித்து கடைக்குச் செல்லும்போது துணிப்பைகளை எடுத்துச் செல்லுங்கள்” என வேண்டுகோள் விடுக்கிறார் அமிதா. சிறுவயதில் அவர் மனதில் விதைக்கப்பட்ட அந்த விதை, இன்று உயர்ந்தோங்கி வளர்ந்து விண்ணை முட்டி நிற்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x