

இணையத்தில் உருவாகும் ‘சைபர் திரில்லர்’ படங்கள் தற்காலத்தில் கூடுதல் கவன ஈர்ப்பைப் பெறுகின்றன. அந்த வரிசையில் பி. பிரவீன்குமார் எழுதி, இயக்கியிருக்கும் புதிய படம் ‘அமீகோ’. படத்தின் முன்னோட்டம் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் இயக்குநருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
சைபர் குற்றங்களைக் களமாகக் கொள்ளும் முந்தைய படங்களிலிருந்து ‘அமீகோ’ எப்படி மாறுபடுகிறது?
ஊடக நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் 7 பேர் கொண்ட நண்பர்கள் குழு மிகவும் அன்யோன்யம் மிக்கவர்கள். அவர்களில் 3 ஆண்கள், 4 பெண்கள். பணிச் சூழலை எளிதாக்கவும் இனிமையாக்கவும் ஊழியர்கள் நட்பை வளர்த்துக்கொள்ளவும் நிறுவனம் அமீகோ (நண்பன்) என்கிற பிரத்யேகச் செயலியை அறிமுகப்படுத்துகிறது. எல்லா ஊழியர்களையும்போல் அமீகோ பயன்படுத்தும் 7 பேரும் அந்தச் செயலியால் ஒரு ‘வெர்ச்சுவல் ரியாலிட்டி’ ஆபத்தில் சிக்குகிறார்கள். அது என்ன? அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா என்பதுதான் கதை. சைபர் ஃபேண்டஸி ஹாரர் திரில்லர் ஜானரில் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறேன். தட்டையான திரையில் வெர்ச்சுவல் ரியாலிட்டி தன்மையை உணர வைக்கும் விஷுவல் எஃபெக்ட் காட்சிகள் ரசிகர்களுக்கு முற்றிலும் புதிய காட்சி அனுபவமாக இருக்கும். இன்று செயலிகள் இல்லாமல் டிஜிட்டல் உலகம் இல்லை. இந்தப் படத்துக்குப் பின், செயலிகள் பற்றிய பயமும் தெளிவும் ஏற்படும்.
யாரெல்லாம் நடித்திருக்கிறார்கள்?
சாந்தினி தமிழரசன், அர்ஜுன் சோமையாஜுலா, சுவிதா ராஜேந்திரன், பிரவீன் இளங்கோ, வத்சன் சக்கரவர்த்தி, வெக்கே, மனிஷா ஜஷ்னானி, பிரக்யா ஆகிய எட்டு பேருக்கும் சரி சமமான முக்கியத்துவம் கதையில் இருக்கிறது. அனைவரும் மிரட்டியிருக்கிறார்கள். ‘அயலி’ வெப் சீரீஸுக்கு இசையமைத்துப் புகழ்பெற்ற ரேவா இந்தப் படத்துக்கு அட்டகாசமான இசையைத் தந்திருக்கிறார்.
உங்களைப் பற்றி…
நான் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. சயின்ஸ் டெக்னாலஜி அண்ட் கம்யூனிகேஷன் படித்து முடித்துவிட்டு விளம்பரத் துறையில் பணியாற்றி வந்தேன். இந்தக் கதையைப் படமாக்க வேண்டும் என்பதற்காகவே விஷுவல் எஃபெக்ட்ஸ் படித்தேன். என்னைப் போலவே இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் வாஞ்சிநாதன் முருகேசன், எடிட்டர் பிரதீப் சந்திரகாந்த் ஆகியோரும் இந்தப் படத்துக்காக விஷுவல் எஃபெக்ட்ஸ் கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் உருவானது. அதை அவர்களும் கற்றுக்கொண்டு சிறந்த பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். ‘அமீகோ’ படத்தை பிரத்யாக்ரா மோசன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பி.கிரிஜா தயாரித்திருக்கிறார். அவருடன் தயாரிப்பில் ஜீத்து பிரபாகரன் இணைந்திருக்கிறார். இவர்கள் அனைவருமே கதையையும் அதிலிருக்கும் ஐடியாவையும் நம்பி முதலீடு செய்திருக்கிறார்கள்.