Published : 07 May 2018 11:34 AM
Last Updated : 07 May 2018 11:34 AM

கார்ப்பரேட் வசமாகும் ஆர்கானிக் சந்தை

ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு ஆசைப்படுபவர்கள்தான் எல்லோரும். ஆனால் அது ஆசை என்கிற அளவிலேயே நிற்கிறது. குறிப்பாக ஆரோக்கியம் என்பது இன்று மருந்துகளால் மட்டுமே ஆளப்படுகிறது. உணவே மருந்து என்று நல்ல உணவுப் பழக்கத்தை கடைபிடிப்பவர்கள் மட்டுமே ஆரோக்கியம் என்பது தங்கள் உணவில் உள்ளது என்ற பலத்துடன் வாழ்கிறார்கள். அந்த ஆரோக்கிய உணவுகளும் இப்போது எட்டாத தூரத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது.

ஆரோக்கியமான உணவு என்றால் பூச்சிக் கொல்லிகள் போன்ற ரசாயனங்கள் கலக்காத இயற்கை உணவு - `ஆர்கானிக்’ என்கிற அடையாளத்தைத் தேடுகிறார்கள். இதனால் மிகப் பெரிய சந்தையாக உருவாகியுள்ளது ஆர்கானிக். பல கோடி வர்த்தகத்தையும், கோடிக்கணக்கான முதலீடு, பெரு நிறுவனங்கள் ஆதிக்கமும் வளர்ந்து கொண்டிருக்கிறது. இதற்காகவே நமது வழக்கமான உணவைவிட ஆர்கானிக் உணவு சிறந்தது என்ற கருத்தும், மோகமும் உருவாக்கப்பட்டுள்ளதோ என சந்தேகம் எழுகிறது. ஏனென்றால். உணவுப்பொருட்களில் மட்டுமல்ல, அழகு சாதனப் பொருட்களிலும் ஆர்கானிக் தேடத் தொடங்கியுள்ளனர் நம் மக்கள்.

எது ஆர்கானிக்

ஆர்கானிக் என்கிற வார்த்தை இயற்கையானது, ரசாயன கலப்பு இல்லாதது என்பதற்காக குறிப்பிடப்படுகிறது. குறிப்பாக இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்தி விளைவிக்கப்படும் உணவுப் பொருட்கள் இவ்விதம் குறிப்பிடப்படுகிறது. இந்த வகையில் காய், பழம், இறைச்சி, பால், முட்டை என அனைத்தும் உற்பத்தி செய்யலாம். ஆர்கானிக் உணவு பொருட்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் மூலகூறுகள் அதிகமாக இருப்பதால் மருத்துவர்களும் பரிந்துரை செய்கின்றனர். ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி விளைவிக்கப்படும் உணவுப் பொருட்கள் இதற்கு நேரெதிரானவை.

ஆனால் ஆர்கானிக் உணவுப்பொருளின் தேவை என்பதைத் தாண்டி, மிகப் பெரிய வர்த்தகப் போக்கு ஏற்பட்டுள்ளதை மறுக்க முடியாது. ஆர்கானிக் உணவு நேர்மையாக இருந்தாலும், மிகப் பெரிய சந்தையாக அதை சந்தேகம் கொள்ள வைக்கிறது. வர்த்தகத்தின் இடையில் பலரைக் கடந்து வர வேண்டிய தேவை உள்ளது. அதனால் ஆர்கானிக் என்கிற பெயரில் விற்பனை செய்யப்படுபவை அனைத்தும் உண்மையிலேயே இயற்கையாக விளைவிக்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்துவதும் அவசியமாகிறது.

சந்தை

உலகம் முழுவதும் ஆர்கானிக் சந்தையின் ஆண்டு வளர்ச்சி 20 முதல் 25 சதவீதமாக இருக்கிறது. குறிப்பாக 1999-ம் ஆண்டில் இதன் சந்தை மதிப்பு 1,500 கோடி டாலராக இருந்தது. 2016-ம் ஆண்டில் 9,000 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இந்தியாவில் 2016-ம் ஆண்டில் ஆர்கானிக் சந்தை மதிப்பு ரூ.3,350 கோடி. சர்வதேச அளவில் 2025-ம் ஆண்டில் 32,000 கோடி டாலராக இதன் சந்தை இருக்கும் என்கின்றன கணிப்புகள். அமெரிக்காவில் இதன் ஆண்டு வளர்ச்சி 35 சதவீதமாக உள்ளது. நுகர்வு விஷயத்தில் அமெரிக்க மிகப் பெரிய சந்தையாக இருந்தாலும், ஆசிய பசிபிக் நாடுகள்தான் உற்பத்தியில் முன்னிலையில் உள்ளன.

குறிப்பாக ஆர்கானிக் உணவுப்பொருட்களில் பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கான சந்தை வளர்ச்சி 37 சதவீதமாக உள்ளது. இறைச்சி வகைகளின் வளர்ச்சி 13 சதவீதமாக உள்ளது. அரிசி, சோயா, கோதுமை போன்ற பண்ணையல்லாத உணவுப் பொருட்களின் சந்தை 33 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என்றும் ஆய்வுகள் சொல்கின்றன. ``இந்தியாவில் ஒட்டுமொத்தமாக வரும் ஆண்டுகளில் 20 முதல் 25 சதவீத வளர்ச்சி எட்டும்`` என்கிறார் 24 மந்த்ரா ஆர்கானிக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி என்.பாலசுப்ரமணியன்.

பெரு நிறுவனங்கள்

பொதுவாக ஆர்கானிக் பொருட்கள் என்கிற வரையறைக்குள் அனைத்து வகையான உணவுகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதிலும் குறிப்பாக பாரம்பரியமான சில தானிய வகைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன. பேரளவு உற்பத்தியிலிருந்து குறைந்த பல தானியங்கள் மீண்டும் சந்தைக்குள் வருகின்றன. இதில் பல கோடி முதலீடு புழங்குகிறது. பெப்சிகோ நிறுவனத்தில் துணை நிறுவனமான ஃபிரிட்டோ லே நிறுவனம்கூட ஆர்கானிக் சந்தையில் முதலீடு செய்துள்ளது. ஹோல் புட் மார்க்கெட், ஆர்கானிக் வேலி, டீன் புட்ஸ், நியூமேன்ஸ் ஓன், டோலி புட்ஸ் போன்ற அமெரிக்க நிறுவனங்கள் சர்வதேச அளவில் ஆர்கானிக் சந்தையை கையில் வைத்துள்ளன.

இந்தியாவில் 12 மாநிலங்களில் 47 லட்சம் ஹெக்டேர் அளவில் ஆர்கானிக் விவசாயம் நடைபெறுவதாக அரசின் புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன். சரோனா கேபிடல், நெக்ஸஸ் கேபிடல், பேப் இந்தியா இன்வெஸ்ட்மென்ட், சம்ருதி பண்ட் போன்ற துணிகர முதலீட்டு நிறுவனங்கள் ஆர்கானிக் சந்தையில் முதலீடு செய்துள்ளன. குறிப்பாக ஒவ்வொரு நிறுவனமும் 50 லட்சம் டாலர் முதல் 1 கோடி டாலர் வரை முதலீடு செய்துள்ளன. இப்படியான முதலீடுகளின் காரணமாக இப்போது மிக லாபகரமான தொழிலாகவும் ஆர்கானிக் உருமாற்றம் பெற்றுள்ளது.

சில்லரை வர்த்தக சந்தையில் குறைந்தபட்சம் 15 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை லாப வரம்புகளை நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. 2020-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 30 கோடி டாலர் வரையில் பெரு நிறுவனங்கள் முதலீடு செய்யும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்ட மன்னா புட்ஸ் நிறுவனம்கூட முதலீட்டாளர்களிடமிருந்து சமீபத்தில் 152 கோடி ரூபாய் நிதி திரட்டியதை இதனுடன் ஒப்பிடலாம். இண்டெக்ரா தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீராம் சுப்ரமண்யாவின் முயற்சியில் `ஃபார்மரி’ போன்ற இயற்கை விவசாய பண்ணை உருவாக்கமும் இதன் தொடர்ச்சிதான்.

ஆர்கானிக் விழிப்புணர்வும், தேவை உருவாக்கத்துக்கும் பின்னால் சந்தை வலைப்பின்னல்தான் அடிப்படை காரணமாக உள்ளதை இதிலிருந்தே புரிந்து கொள்ள முடியும். ஆனால் தற்போதுவரை முறைப்படுத்தப்படாத சந்தையாக இயங்கி வருவதால் பலருக்கும் வேலைவாய்ப்புகளை வழங்கிக் கொண்டிருக்கிறது. 60 சதவீதம் ஏற்றுமதி வாய்ப்புகளை வழங்கிக் கொண்டிருக்கிறது. பல தன்னிச்சை அமைப்புகள் இதற்கான சான்றிதழை அளித்துக் கொண்டிருக்கின்றன.

ஆர்கானிக் பொருட்களை வாங்கும்போது அந்த பொருட்கள் எந்த ஊரில் இருந்து வருகிறது? எந்த விவசாயியிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது? அந்த விவசாயி ஆர்கானிக் சான்றிதழ் பெற்றவரா? என்பதை ஆராய வேண்டும் என்கிறார்கள் அனுபவசாலிகள். முடிந்தவரை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யலாம் என்பவர்களும் உண்டு. ஆனால் இந்த ஆரோக்கிய அணுகுமுறைகளைத் தாண்டி, இதன் சந்தையைத்தான் இப்போது எச்சரிக்கையாக அணுக வேண்டியுள்ளது. நாம் சுவாசிக்கும் காற்று, குடிக்கும் நீர், பயன்படுத்தும் பொருட்கள் அனைத்திலும் ரசாயனம் கலந்துவிட்ட காலத்தில் உணவை மட்டும் இயற்கையானதாக எடுத்துக்கொள்வது எந்த அளவுக்குப் பயன் தரும் என்பது நம் முன் உள்ள மிகப் பெரிய கேள்வி ?.

-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x