Published : 22 May 2018 11:10 am

Updated : 22 May 2018 11:10 am

 

Published : 22 May 2018 11:10 AM
Last Updated : 22 May 2018 11:10 AM

இயற்பியலுக்குப் பேரிழப்பு!

பேராசிரியர் சுதர்சனுக்கு அஞ்சலி

அறிவியலை நேசிக்கும் அனைவரையும் மீளாத் துயரில் ஆழ்த்தியது, இயற்பியல் அறிஞர் பேராசிரியர் சுதர்சனின் மரணம். கடந்த வாரம் (மே 13) டெக்சாஸ் நகரில் 86-வது வயதில் அவர் காலமானார். நோபல் பரிசுக்குப் பலமுறை பரிந்துரைக்கப்பட்டவர் சுதர்சன். ஆனால், கடைசிவரை அவரை அடைவதற்கு நோபலுக்குக்கொடுத்து வைக்கவில்லை

சென்னை வளர்த்தெடுத்த விஞ்ஞானி

கேரளத்தின் கோட்டயத்திலுள்ள பள்ளம் என்னும் கிராமத்தில் பிறந்தவர் இ.சி.ஜி. சுதர்சன் (எண்ணக்கல் சாண்டி ஜார்ஜ் சுதர்சன்). மதநம்பிக்கையும் சம்பிரதாயங்களும் நிறைந்த குடும்பத்தில் பிறந்தாலும், அறிவியலைக் கற்றறிந்த பின்பு மத நம்பிக்கைகளுடன் முரண்பட்டு மதத்தில் இருந்து வெளியேறினார். தம்முடன் படித்த லலிதா என்ற பெண்ணைக் காதலித்து மணந்தார்.

தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியிலும் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் இயற்பியல் படித்தார். 1980-களில் சென்னையில் உள்ள கணித அறிவியல் கழகத்தின் (Institute of Mathematical Sciences) இயக்குநராகப் பணிபுரிந்தார். புகழ்பெற்ற அணு இயற்பியலாளரான ஹோமி ஜஹாங்கீர் பாபாவுடன் சிறிது காலம் பணியாற்றிய பின்னர், நியூயார்க் சென்று முனைவர் பட்டம் பெற்றார். தமது மறைவுவரை டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். 2011-ல் சுதர்சனின் 80-வது பிறந்தநாள் சென்னை கணித அறிவியல் கழகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

தொடர் புறக்கணிப்பு

சுதர்சனின் மகத்தான பங்களிப்பு ‘மூலைவிட்டக் குறியீடு’ (diagonal representation). குவான்டம் ஒளியியலில், ஒளியியல் புலங்களின் (optical fields) ஒத்திசைவான நிலைகளை (coherent states) வர்ணிக்க சுதர்சன் கண்டுபிடித்த ‘மூலைவிட்டக் குறியீடு’தான் (diagonal representation) இன்றுவரை அனைத்து இயற்பியலாளர்களாலும் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இதை 1963-ல் கண்டுபிடித்த சுதர்சன் அப்போதே அதைப் பிரசுரித்தார்.

2005-ம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு மொத்தம் மூவருக்குப் பகிர்ந்து வழங்கப்பட்டது. இதில் அமெரிக்கர் ராய் ஜே கிளாபருக்கு (Roy J Glauber) வழங்கப்பட்ட பரிசானது, நியாயமாக சுதர்சன், கிளாபர் இருவருக்கும் பகிர்ந்து வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால், ஒளியியல் ஒத்திசைவு பற்றிய குவான்டம் கோட்பாட்டுக்குத்தான் (quantum theory of optical coherence) பரிசு வழங்கப்பட்டது. ஆனால், அக்கோட்பாட்டின் முக்கிய அம்சமான ‘மூலைவிட்டக் குறியீட்டை’ (diagonal representation) உருவாக்கிய சுதர்சனை ஒதுக்கிவிட்டு, அவரின் குறியீட்டைப் பயன்படுத்திக்கொண்ட கிளாபருக்கு மட்டும் பரிசளித்துவிட்டது நோபல் குழு.

சுதர்சனுக்கு உரிய பரிசையும் கிளாபருக்கே வழங்கிவிட்டு, சுதர்சனைக் கைவிட்டதைக் கண்டித்து இயற்பியலாளர்கள் பலர் ராயல் சுவீடிஷ் அகாடெமிக்கு கடிதங்கள் எழுதினர். தன்னுடைய பங்களிப்பை கிளாபரின் கணக்கில் சேர்ப்பதா என்று கொதித்த சுதர்சனும் ராயல் சுவீடிஷ் அகாடெமிக்குக் கண்டனக் கடிதம் எழுதினார். “சுதர்சன் ஒரு இந்தியர் என்பதால்தான் அவர் புறக்கணிக்கப்பட்டார். ஒரு வெள்ளையருக்குச் சமமாகவோ அவரைவிட உயர்ந்தவராகவோ ஒரு இந்தியர் இருப்பதை ஏற்க மறுக்கும் உளவியல் சிக்கல் இருபத்தோராம் நூற்றாண்டிலும் நீடிப்பதையே இது காட்டுகிறது” என்பது போன்ற விமர்சனங்கள் அப்போது எழுந்தன.

அளப்பரிய பங்களிப்பு

2005-ல் மட்டுமல்ல; 1979-லேயே சுதர்சனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்க வேண்டும். சுதர்சனும் அவருடைய ஆசிரியர் ராபர்ட் மார்ஷும் இணைந்து ‘வெக்டர் மைனஸ் ஆக்சியல் வெக்டர் கோட்பாட்டை’ (V-A theory) உருவாக்கினர். இக்கோட்பாட்டை மேலும் வளர்த்தெடுத்து முன்வைக்கப்பட்ட ஒன்றிணைப்புக் கொள்கைக்கு (unification theory) சலாம், வெயின்பெர்க், கிளாஷோ ஆகிய மூவருக்கு 1979-ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால், மூலக் கதையின் நாயகன் சுதர்சன் அங்கீகரிக்கப்படவில்லை.

‘குவான்டம் ஜீனோ விளைவு’ (quantum Zeno effect) என்பது 1977-ல் சுதர்சன் முன்மொழிந்த மற்றுமோர் அரிய கோட்பாடு. ‘The more watch, less work, என்பது ஓர் ஆங்கிலப் பழமொழி.மேலதிகாரி உற்று உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தால், பணியாளர்களால் சிறப்பாக வேலை செய்ய முடியாது அல்லவா! அதைப் போல, அதிகமாக அளக்க அளக்க, புறச்சூழலுடன் அதிகமாக வினை புரிய புரிய ஒரு குவான்டம் சிஸ்டம் பாதிப்படையும் என்பதே சுதர்சனின் ‘குவான்டம் ஜீனோ விளைவு’ தரும் விளக்கம்.

இத்தகைய கண்டுபிடிப்புகளுக்காக நோபல் பரிசைத் தவிர உலக அளவில் பல்வேறு விருதுகளையும் கவுரவத்தையும் சுதர்சன் பெற்றுள்ளார். 2007-ல் அவருக்கு பத்ம விபூஷண் வழங்கித் தன்னைப் பெருமைப்படுத்திக்கொண்டது இந்திய அரசு. எல்லாவற்றையும் கடந்து இயற்பியல் துறைக்கு ஆற்றிய அளப்பரிய பங்களிப்புகளுக்காக என்றென்றும் அவர் நினைவுகூரப்படுவார்.

கட்டுரையாளர்: தலைவர், நியூட்டன் அறிவியல் மன்றம், சென்னை.
தொடர்புக்கு: ilangophysics@gmail.com

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

there-is-currently-no-vaccine-to-prevent-corona

இனிமே இப்படித்தான்!

இணைப்பிதழ்கள்

More From this Author