மனக்குறைகள் நீக்கும் அரியலூர் கோதண்ட ராமர்

மனக்குறைகள் நீக்கும் அரியலூர் கோதண்ட ராமர்
Updated on
2 min read

அரியலூர் மாவட்டம் அரியலூர் நகரத்தில் உள்ள கோதண்டராமர் கோயில் எதிரிகளை வெல்ல சக்தி அளிக்கும் தலமாகப் போற்றப்படுகிறது. திருமாலின் பத்து அவதாரங்களையும் ஒரு சேர, இக்கோயிலின் மண்டபத் தூண்களில் சிற்பங்களாக காணமுடியும். முன்பொரு காலத்தில் ஒரு பல்லவ மன்னர் அனைத்து போரிலும் வெற்றி பெற்றார்.

அதனால் அவர் இறுமாப்புடன் இருந்தார். அப்போது ஒருவர், போர்க்களத்தில் வெற்றி பெற்றிருந்தாலும் அப்போரால் ஏற்பட்ட துயரங்களை அவருக்கு எடுத்து உரைத்தார். மேலும் போரால் அவருக்கு ஏற்பட்ட களங்கத்தையும் விளக்கமாகக் கூறினார். தனது பாவங்கள் அனைத்தும் தீர ராமபிரானை சேவிக்கும்படி கூறினார்.

உண்மையையும் தனது தவறையும் உணர்ந்த மன்னர், தனது பாவங்கள் தீர ராமபிரானுக்கு கோயில் எழுப்பினார். அப்படி எழுப்பிய கோயில்தான் இத்தலம் என்று கூறப்படுகிறது. அரி இல் ஊர் என்பதன் மூலம் அரியாகிய திருமாலின் இருப்பிடம் என்பது புலனாகிறது. பல்லவ மன்னர்களால் கிபி 6-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு சோழர் காலத்தில் புதுப்பிக்கப்பட்ட கோயில் இது.

தூணில் இருந்து தோன்றிய நரசிம்மரின் வடிவம் மற்றும் ஏனைய ஒன்பது வடிவங்களை (மச்ச, கூர்ம, வராக, வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண, கல்கி) இங்கு ஒரு சேர தூண்களில் காணமுடிகிறது. நரசிம்ம அவதார கோலத்தை தரிசனம் செய்து வழிபடுவோருக்கு எதிரிகளை வெல்லும் சக்தியும், செய்யும் செயல்களில் வெற்றியும் கிடைக்கிறது. மனக்குறைகள் நீங்குவதோடு திருமண வாழ்வும் அமைகிறது.

ஒருசமயம் அம்பரீஷ முனிவர் துர்வாச முனிவரால் சபிக்கப்பட்டார். சாப விமோசனமாக திருமாலின் பத்து அவதாரங்களையும் ஒரு சேரக் கண்டாலே தனது சாபம் நீங்கும் என்று அம்பரீஷ முனிவருக்கு, துர்வாச முனிவர் அருளினார். சாப விமோசனம் பெற வேண்டி அம்பரீஷ முனிவர் அரியலூர் வந்து கடும் தவம் புரிந்தார். முனிவரின் தவத்தை மெச்சிய திருமால் அவருக்கு தசாவதாரக் கோலத்தில் காட்சி அருளினார். அதனால் சாப விமோசனம் பெற்றார் அம்பரீஷ முனிவர்.

அம்பரீஷி என்ற மன்னருக்கு திருமால் அருள்பாலித்த தலம் இது. அம்பரீஷி மன்னர் திருமாலின் தசாவதாரங்களை ஒரு சேர தரிசிக்க விரும்பியதால், அவருக்கு திருமால் தரிசனம் கொடுத்தார். இன்றும் அம்பரீஷி மன்னர் பறவை வடிவில் இக்கோயில் கோபுரத்தில் அமர்ந்து திரு மாலை தரிசித்து மகிழ்கிறார் என்பதால், மண்டபத்தின் எதிர்புறம் உள்ள கோபுர உள்வாயிலின் மேல் பறவையின் சிலை நிறுவப்பட்டுள்ளது.

பல்லவர் கால பாணியில் அமைந்த சிங்கமுகத் தூண்கள், கோயிலின் காலத்தை உணர்த்துகிறது. கருவறை மண்டபம் தேர் போன்ற அமைப்பில் இரு குதிரைகள் இழுப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. இது முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கோயில் திருப்பணிகள் மேற் கொள்ளப்பட்டிருப்பதை உணர்த்துகிறது.

(1995-ம் ஆண்டுக்குப் பிறகு 28-6-2017 அன்று குடமுழுக்கு நடைபெற்றது) பூமிக்கடியில் புதையுண்ட இக்கோயிலை பெருமாள் தூக்கி நிறுத்தினார் என்று கூறுவர். ஒரே பீடத்தில் அமைந்த கோதண்டராமர், சீதாதேவி, லட்சுமணன், அனுமன் சிலைகள் விக்கிரமங்கலம் என்ற ஊரில் கண்டெடுக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டன என்று கூறப்படுகிறது.

கோயிலின் நுழைவாயிலைக் கடந்தால் பலிபீடம், கொடி மரத்தை தரிசிக்கலாம். பின்னர் 5 நிலை கோபுரத்தை அடைந்ததும் கருட பகவான் தரிசனம் தருகிறார். மண்டபத்துள் நுழைந்தால் மண்டபத் தூண்களில் தசாவதார சிற்பங்களைக் காணலாம். கோதண்டராமர் கோயில் என்று கூறப்பட்டாலும் கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வேங்கடாஜலபதி அருள்பாலிக்கிறார்.

அலமேலு மங்கை தாயார் தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறார். கோதண்ட ராமர், சீதா பிராட்டி, லட்சுமணருடன் அனுமன் திருப்பாதம் பணிய அருள்பாலிக்கிறார். ஆண்டாள், ஆழ்வார்கள், தும்பிக்கை ஆழ்வார், ருக்மிணி, சத்யபாமாவுடன் கிருஷ்ணர், அனுமன் சந்நிதிகளும் அமைந்துள்ளன. வைகுண்ட ஏகாதசி விழாவில் நாச்சியார் திருக்கோலத்துக்குப் பின் கோதண்டராமர் மோகினி அலங்காரத்துடன் அருள்பாலித்து வீதியுலா செல்கிறார்.

பரமபதவாசல் திறப்பின்போது கருவறையில் இருந்து புறப்படும் கோதண்ட ராமர் முன்பகுதி மண்டபத்துக்கு எழுந்தருள்கிறார். இதைத் தொடர்ந்து நம்மாழ்வார் பரமபதவாசல் எதிரே எழுந்தருளிய பின்னர் பரமபதவாசல் திறக்கப்படுகிறது. திருமணத் தடை நீங்க பிரார்த்தனை செய்வது வழக்கம்.

பிரார்த்தனைகள் நிறைவேறியதும், பக்தர்கள், பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து துளசி மாலை அணிவித்து நேர்த்திக் கடன் செலுத்து கின்றனர். தமிழ்த் தாத்தா உ.வே. சுவாமிநாத ஐயர் சிறுவயதில் வாழ்ந்ததும் தமிழ் கற்றதும், அதில் ஆர்வம் பெற்றதும் இந்த ஊரில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in