

கிராம தேவதையாக கருதப்படும் இசக்கி அம்மன், கிராமப் புறங்களில் காக்கும் தெய்வமாக வழிபடப்படுகிறார். மாரியம்மனின் அம்சமாகவும், பார்வதி தேவியின் அம்சமாகவும் கருதப்படும் இசக்கி அம்மன், குழந்தை வரம் அருள்பவராகவும், பெண் குலத்தைக் காப்பவராகவும் போற்றப்படுகிறார்.
இந்து சமய பெண் தெய்வக் கோயில்களில் இசக்கி அம்மனுக்கு தனிசந்நிதி அமைந்திருக்கும். தென் தமிழகத்தில் மட்டுமே இருந்த இசக்கியம்மன் வழிபாடு, தற்போது தமிழகம் முழுவதும் காணப்படுகிறது. இசக்கி என்ற சொல்லானது இயக்கி என்ற சொல்லில் இருந்து மருவியதாகக் கூறப்படுகிறது. இயக்குபவள் என்ற பொருளில் பெண் தெய்வங்களை அழைக்கின்றனர். சமண சமயத்தில் தீர்த்தங்கரர்களின் காவல் தெய்வங்களாக இயக்கிகள் இருந்துள்ளனர்.
தென் மாவட்டங்களில், குறிப்பாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் சிறப்பு நிலை தெய்வமாக, இசக்கி அம்மன் வழிபடப்படுகிறார். சிவப்பு உடை அணிந்து இடது கையில் குழந்தை, வலது கையில் சூலத்தை ஏந்தி, சாந்த ரூபமாக, இசக்கி அம்மன் அருள்பாலிக்கிறார்.
கிராம தேவதைகள், கிராம மக்களின் கனவில் தோன்றி, தாம் இந்த இடத்தில் புதைந்து இருப்பதாகவும், தம்மை எடுத்து வழிபட்டால், ஊரையும் ஊர் மக்களையும் காத்தருள்வதாக உறுதி அளிப்பது உண்டு. அதன்படி மக்கள் கிராம தேவதையை கண்டறிந்து, சிறிய கோயில் அமைத்து வழிபடுவார்கள். அந்த தேவதையும் ஊர் எல்லையில் அமர்ந்து மக்களை பல இன்னல்களில் இருந்து காத்தருள்வது வழக்கம். தமக்கு வேண்டியதை கிராம தேவதைகள் அவர்களாகவே பக்தர்களிடம் இருந்து கேட்டுப் பெறுவது உண்டு.
ஒரு கிராமத்தில் அம்பிகை என்ற பெண்மணி வாழ்ந்து வந்தார். அவரது கணவர் சோமசர்மன். இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உண்டு. ஒருசமயம் சோமசர்மன் இல்லத்தில் மூதாதையருக்கான சடங்கு நடந்து கொண்டிருந்தது. அதற்கான சமையல் பணிகளில் அம்பிகை ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது வயதான துறவி ஒருவர் பசியுடன் வந்து உணவு கேட்டதால், கருணை உள்ளம் கொண்ட அம்பிகை, சடங்குக் காக சமைத்த உணவில் ஒரு சிறு பகுதியை எடுத்து அவருக்கு அளித்து விடுகிறார்.
இதைக் கண்ட சோமசர்மன், கோபமுற்று மனைவி மற்றும் குழந்தைகளை வீட்டை விட்டு அனுப்பி விடுகிறார். குழந்தையுடன் கிளம்பிய அம்பிகை, ஊரைவிட்டு வெளியேறி காட்டில் தஞ்சம் புகுகிறார். குழந்தைகளை யாவது நன்குகாப்பாற்ற வேண்டும் என்று அம்பிகை நினைத்துக் கொள்கிறார். சிறிது நேரம் கழித்து தனது தவறை உணர்ந்த சோமசர்மன், மனைவியைத் தேடி காட்டுக்குள் வருகிறார். கணவர் வருவதை அறிந்த அம்பிகை, தன்னைக் கொல்வதற்காகவே கணவர் வருவதாக நினைத்து தனது உயிரை மாய்த்துக் கொள்கிறார்.
குழந்தைகளை காக்க வேண்டும் என்ற எண்ணத்துடனேயே இவ்வுலகை விட்டு நீங்கியதால், சிவ பெருமான் அருளால், மறுபிறப்பு எடுத்து குழந்தைகளைக் காக்கும் தேவதையாக அவதரித்தார். இவரே குடும்பத்தை இயக்குபவர் என்ற பொருளில், இயக்கி என்ற திருப்பெயரைத் தாங்கிக் கொண்டார். காலப்போக்கில் இயக்கி என்ற பெயர் இசக்கி என்று மாறியதாக கூறப்படுகிறது.
சென்னை அம்பத்தூர் ஓம்சக்தி இசக்கி அம்மன் கோயிலில் திருவள்ளூவர், முருகப் பெருமான், ஔவையார் ஆகியோர் விக்கிரகங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ் மந்திரங்கள் படித்து, தினசரி வழிபாடு நடைபெறுகிறது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
பௌர்ணமி தினத்தில் சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. தினசரி திருக்குறள் வகுப்புகள், சிறப்பு யோகா பயிற்சி, சிலம்பாட்டம், ஆன்மிக வகுப்புகள், பன்னிரு திருமுறை வகுப்புகள் நடைபெறுகின்றன. இக்கோயிலில் வெற்றி விநாயகர் ஆன்மிக அறக்கட்டளை சார்பில் ஜூலை 26, 27, 28-ம் தேதிகளில் ஆடித் திருவிழா நடைபெறுகிறது. கூடுதல் தகவல்களை அறிய 9840736575 என்ற அலைபேசியை தொடர்பு கொள்ளலாம்.