Published : 03 Aug 2014 10:00 AM
Last Updated : 03 Aug 2014 10:00 AM

முதல் குடிமகள்: சாதித்ததும் சர்ச்சைகளும்

பிரணாப் முகர்ஜிக்கு முன் இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்த பிரதிபா தேவிசிங் பாட்டீல், அந்தப் பதவியை வகித்த முதல் பெண். முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்திக்கும் ராஜீவ் காந்திக்கும் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர்.

மகாராஷ்டிராவிலுள்ள ஜல்காம் மாவட்டத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்த அவர், தேசிய, மாநில அரசியலில் 40 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் பெற்று அமைச்சராகவும் ஆளுநராகவும் பல ஆண்டுக் காலம் பணியாற்றியுள்ளார்.

தற்போது, 80 வயதாகும் பிரதிபா பாட்டீல் தன் அரசியல் வாழ்க்கையில் கல்வி, சுற்றுலாத் துறை, சமூகநலத் துறை, வீட்டுவசதி- இப்படிப் பல அமைச்சகங்களைச் சிறப்பாகக் கையாண்டவர். ராஜஸ்தான் மாநிலத்தின் 24-வது ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார்.

அரசியல் அனுபவம்

எம்.ஏ. பட்டம் பெற்ற பிரதிபா பாட்டீல், மும்பை அரசு சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி. பட்டமும் பெற்றிருக்கிறார். தன் 27-வது வயதில் அரசியலில் பிரவேசித்தார். மூத்த காங்கிரஸ் தலைவரும், மகாராஷ்டிர முன்னாள் முதல்வருமான யஷ்வந்த்ராவ் சவானின் வழிகாட்டல் மூலம் பெற்ற அரசியல் விவேகமும் அறிவாற்றலும் புத்திசாலித்தனமும்தான் அவரைக் குடியரசுத் தலைவர் பதவிக்கு இட்டுச்சென்றதாக நம்பப்படுகிறது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரதிபா பாட்டீலுக்குக் கிடைத்த மகத்தான வெற்றி, ஆண்-பெண் சமத்துவம் நோக்கிய நடவடிக்கைகளில் முக்கியமானது என்று கருதப்பட்டது. இந்த வெற்றி வெறுமனே அடையாளச் செயல்பாடு மட்டுமே என்பது மற்றொரு பிரிவினரின் கருத்து. அதேநேரம், இந்திய மக்கள் கடைப்பிடிக்கும் கொள்கைகளுக்குக் கிடைத்துள்ள சிறப்பான வெற்றி இது என்று வர்ணித்தார் பிரதிபா பாட்டீல். ஆனால் ஒரு பெண், இந்த உயரத்தைத் தொட 60 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது என்பதை மறந்துவிட முடியாது.

சந்தித்த சர்ச்சைகள்

அவர் குடியரசுத் தலைவராக இருந்த காலகட்டத்தில், அவருக்கு எதிராகப் பல சர்ச்சைகள் தலைதூக்கின. மரண தண்டனை விதிக்கப்பட்ட 35 கைதிகளின் தண்டனைக் காலத்தை ஆயுட்காலத் தண்டனையாக அவர் குறைத்தார். இந்தத் தண்டனைக் கைதிகளில் கொலைக் குற்றவாளிகள், ஆள்கடத்தல் செய்தவர்கள், குழந்தைகளைப் படுகொலை செய்தது மற்றும் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்தது போன்ற கொடும் குற்றங்களை இழைத்த பலரும் இருந்தனர்.

இருந்தபோதும் உள்துறை அமைச்சகத்தின் கருத்துகளும் அறிவுரையும் ஆராயப்பட்டு, மனுதாரர்களின் மேல்முறையீட்டுக்கு உரிய கவனம் செலுத்தி ஆய்வு செய்த பிறகே, அந்தக் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டதாகக் குடியரசுத் தலைவர் அலுவலகம் கூறியது. மிக அதிக அளவில் அயல் நாட்டுப் பயணங்களுக்குச் செலவுசெய்தார் என்றும், வரலாற்றிலேயே அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்ட குடியரசுத் தலைவர் என்றும் சர்ச்சைகள் எழுந்தன.

சேவை அமைப்புகள்

கணவர் டாக்டர் தேவிசிங் ராம்சிங் ஷெகாவத்துடன் இணைந்து, மும்பையிலும் ஜல்காமிலும் பல பள்ளிக்கூடங்களையும், கல்லூரிகளையும் நடத்திவரும் வித்யாபாரதி சிக்ஷன் பிரசாரக் மண்டல் என்ற கல்விக் கழகத்தைப் பிரதிபா நிறுவியுள்ளார். புதுடெல்லி, மும்பை, புனே ஆகிய நகரங்களில் பணிக்குச் செல்லும் பெண்களின் வசதிக்காக, ஷ்ரம் சாதனா டிரஸ்ட் சார்பில் தங்கும் விடுதிகளையும் பிரதிபா நிறுவியுள்ளார். மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் ஜல்காமில் இன்ஜினீயரிங் கல்லூரி ஒன்றையும், சர்க்கரை ஆலையொன்றையும் அமைக்கக் காரணமாக இருந்திருக்கிறார்.

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகமும், புனேயில் உள்ள பாரதிய வித்யா பீடமும் பிரதிபா பாட்டீலுக்குக் கௌரவ டி.லிட். பட்டம் வழங்கியுள்ளன. திருப்பதி வெங்கடேஸ்வரா வைத்திய அறிவியல் கழகம், லக்னோ பல்கலைக்கழகம், சிலி நாட்டுப் பல்கலைக்கழகம் ஆகியன அவருக்குக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன.

1967-ம் ஆண்டில் தொடங்கி, 2012-ம் ஆண்டு குடியரசுத் தலைவர் பதவிக் காலத்தை நிறைவு செய்ததுவரை பொதுவாழ்வில் எண்ணற்ற பொறுப்புகளிலும் பதவிகளிலும் திறம்படச் செயலாற்றியவர் பிரதிபா. மகாராஷ்டிர மாநிலத்தின் மண்ணின் மகளான அவருக்குக் கோல்டன் மகாராஷ்டிரா என்ற பட்டம் சூட்டப்பட்டதில் வியப்பேதுமில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x