Published : 06 May 2018 11:22 AM
Last Updated : 06 May 2018 11:22 AM

எசப்பாட்டு 34: விளையாட்டு பொம்மையா பெண்?

னநாயகம் குறித்து ஆழ்ந்த நவீனமான புரிதலுடன் இயங்கிய அரசியல் தலைவர் பண்டித நேரு. “பெண்கள் ஒரு சமூகத்தில் ஆண்களின் விளையாட்டுப் பொம்மைகள்போல ஆட்டுவிக்கப்பட்டால் அங்கே ஜனநாயகம் முளைத்தெழாது. ஆண்களுக்குச் சமமான பங்கேற்பாளர்களாகப் பெண்களும் ஈடுபடும்போதுதான் ஜனநாயகம் முழுமைபெறும்” என்றார். மேலும், “ஒரு நாட்டின் தன்மையை, தகுதியை அந்நாடு பெண்களை எப்படி வைத்திருக்கிறது என்பதைக்கொண்டு தீர்மானிக்கலாம்” என்றார். அத்துடன் நில்லாமல், “சீதா பிராட்டியையும் சாவித்திரியையும் லட்சியப் பெண்கள் என்று நம் நாட்டுப் பெண்களுக்குப் பாடம் நடத்தும் இந்தியச் சமூகம், ஆண்கள் ராமனைப்போலவும் சத்தியவானைப்போலவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவதில்லை” என்றார். 70 ஆண்டு கால ‘ஜனநாயக வாழ்வு’க்குப் பிறகு இன்று நாம் எங்கே நிற்கிறோம்?

கணவனைத் தொழுவதே கடமை?

இவை, பெண் விடுதலையின் மீது கொண்ட அக்கறையால் கூறப்பட்டவை. அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால், ராமனைப் போலத்தானே இந்திய ஆண்கள் காலம் காலமாக இருந்துவருகிறார்கள். சீதையின் விருப்பத்தைக் கேட்கும் ஜனநாயகம் ராமனிடம் இருந்ததா?

வனவாசம் முடிந்து ராமன் பட்டாபிஷேகமும் முடிந்த பிறகு, ஒரு சலவைத் தொழிலாளி ராமனை இளக்காரமாகப் பேசிவிட்டார் என்பதற்காக ராமபிரானின் புனித பிம்பத்தைக் காப்பதற்காகவும் ராஜ்ய தர்மத்தைக் காப்பதற்காகவும் கர்ப்பிணியான சீதையை மீண்டும் காட்டுக்கு அனுப்புகிறான்.

இந்தியப் புராணங்கள் பலவற்றிலும் இது போல ஆண்கள் தங்கள் நோக்கத்துக்காக, தங்கள் லட்சியத்துக்காக, தங்கள் விருப்பப்படி வாழ்வதற்காக மனைவியைப் பிரிவது என்பது மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. அப்பெண்ணின் விருப்பம், அவளுடைய உணர்வுகள் ஒருபோதும் கேட்கப்பட்டதே இல்லை; கணக்கில் கொள்ளப்பட்டதே இல்லை. அவர் எடுக்கும் முடிவை அவள் ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்ற ஆணாதிக்கக் கருத்து இப்படித்தான் கேள்விக்கு அப்பாற்பட்ட விதியாக நம் தலைகளில் ஏற்றப்பட்டது.

யசோதராவைக் கைவிட்ட கௌதம சித்தார்த்தன், ரத்தினாவளியைக் கைவிட்ட துளசிதாசர், சகுந்தலையைக் கைவிட்ட துஷ்யந்தன், சுவர்ச்சலாவைக் கைவிட்ட ஹனுமன் என்று இந்தப் பட்டியல் நீள்கிறது. தங்கள் திருமண பந்தத்தைத் துச்சமாக மதித்துத் துறந்த இந்த ஆண்கள் ரிஷிகளாகவும் செங்கோல் மன்னர்களாகவும் கவிகளாகவும் போற்றப்படுகின்றனர். அவர்கள் மணந்த பெண்களுக்கு ஒரே கடமைதான் விதிக்கப்படுகிறது. தங்கள் ஆண்களை நினைத்துப் பெருமைப்படுவதும் அவர்களது லட்சியம் ஈடேறவும் அவர்கள் நலமாக வாழவும் அவர்களை நெஞ்சில் ஏந்திப் பூஜைகள் செய்து தொழுது கிடப்பதும்தான்.

கணவன் கௌதமனைப் போல மாறுவேடம் பூண்டுவந்த இந்திரனால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டார் அகலிகை - பாதிக்கப்பட்ட அகலிகையையே குற்றவாளியாக்கி கௌதம முனிவர் தன் புனிதம் காத்திடச் சாபமிட்டு கல்லாக்கிவிடுகிறார்.

பெண்ணை மிதித்து மேலெழும் மகாத்மாக்கள்

புராண காலத்தில் மட்டுமல்ல, நவீன காலத்திலும் ஒருவர் மகாத்மாவாகப் பொதுவெளியில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளத் தனது விருப்பங்களையும் உணர்வுகளையும் ஒரு கஸ்தூர்பாய் தியாகம் செய்துதான் ஆக வேண்டியிருக்கிறது.தேசத்தின் தந்தை தன் இணையரின் உணர்வுகளுக்கு நியாயம் வழங்கினாரா அல்லது ராமனைப் போலவே ராஜநீதிக்காகத் தன் சகியின் உரிமைகளை நிராகரித்தாரா?

“கஸ்தூருக்குள்ள ஒரு மிகச் சிறந்த குணாம்சம் பெரும்பான்மை இந்து மனைவிகளுக்கு ஓரளவு உள்ளது. விரும்பியோ விரும்பாமலோ, தெரிந்தோ தெரியாமலோ எனது காலடியைப் பின்பற்றுவதை, அவள் ஒரு தெய்வீகமான, புனிதமான, போற்றுதலுக்குரிய பணியாக நினைக்கிறாள். சில கட்டுப்பாடுகள் உடைய வாழ்க்கையை நான் நடத்துவதற்கு அவள் என்றுமே தடையாக இருந்ததில்லை. இதனால் அறிவுபூர்வமாக எங்களிடையே பெரும் வேறுபாடுகள் இருந்தபோதும், எங்கள் வாழ்க்கையில் திருப்தி, மகிழ்ச்சி, முன்னேற்றம் ஆகியவை இருந்ததாகத்தான் நான் நினைக்கிறேன்…” (David Hardiman: Gandhi in his time and Ours)

“காந்தியின் இந்தக் கருத்துக்களிலிருந்து பெண்கள்/மனைவிமார்களிடமிருந்து அவர் என்ன எதிர்பார்க்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்” என்ற கூர்மையான விமர்சனத்தைத் தன்னுடைய ‘கஸ்தூர்பா-மகாத்மாவின் மனைவி எழுப்பும் கேள்விகள்’ என்ற நூலில் முன்வைக்கிறார் மைதிலி சிவராமன். தன் குழந்தைகளை வளர்ப்பதில், குடும்பமாக வாழ்வதில், சத்தியாக்கிரகத்தில் பங்கேற்பதில் என ஒவ்வொரு விஷயத்திலும் கஸ்தூர்பா எவ்விதம் தன் சுயத்தை விட்டுக்கொடுத்தார் என்பதை இது போன்ற பல நூல்கள் இன்று ஆதாரங்களுடன் பேசுகின்றன. அவர் உண்மையில் ஒரு மகாத்மா என்பதால்தான் கஸ்தூர்பாய்க்கு இழைத்த அநீதிகள் பற்றியும் ‘சத்தியசோதனை’யில் திறந்த மனதுடன் எழுதியிருக்கிறார் என்பதையுச் சொல்லியாக வேண்டும். அதேநேரம் அவர் எழுதாமல் விட்டவைதான் அதிகம். அவற்றை அவருடைய பேரன் அருண் காந்தியும் அவருடைய கொள்ளுப்பேத்தி உமா துபேலியாவும் தங்கள் நூல்களில் எழுதியிருக்கின்றனர்.

பாட்டியைப் பற்றிய தன்னுடைய நூலின் சமர்ப்பணப் பகுதியில் அருண் காந்தி எழுதியிருப்பது கவனிக்கத்தக்கது: “தங்கள் துணைவர்கள் பெரும் தலைவர்கள் ஆவதற்கு வழிசெய்யும் வகையில் தன்னலமற்று சுய தியாகம் செய்துகொள்ளும் எல்லாப் பெயர் தெரியாத பெண்களுக்கும் இந்நூல் அர்ப்பணம்”.

தேசப்பிதாவின் புதல்வர்கள் அதே வழியில்தானே செல்வார்கள்?

ஆண்களின் ‘காந்திய வழி’

காந்தியத்துக்கு எதிரான வரிசையில் நிற்கும் தலைவர்களும் தங்கள் இணையர்களை காந்தியின் வழியில் அல்லது ராமனின் வழியில்தான் நடத்தினார்கள், நடத்துகிறார்கள் என்பதற்குச் சமீபத்திய உதாரணம் யசோதாபென் நரேந்திர மோடி என்ற பெண்.

எத்தனையோ இடதுசாரி இயக்கத் தோழர்கள் தீவிரமான பொதுவாழ்வில் தன்னலமற்று உழைக்கிறார்கள். தியாகம் செய்கிறார்கள். ஆனால், தங்கள் இணையரின் விருப்பங்களை நிறைவேற்றுவதிலும் அவர்களோடு அரசியல் விவாதம் நடத்தித் தம் வழிக்குக் கொண்டுவருவதிலும் அவர்களும் ‘காந்திய வழி’யைத்தான் பின்பற்றுகிறார்கள்.

ஆண் முடிவு செய்கிறான். பெண் பின்பற்றுகிறாள். ஆனால், வரலாறுகள் பேசாதவற்றை இலக்கியங்கள் பேசுகின்றன. அரசியல் எழுப்பாத கேள்விகளை இலக்கியங்கள் எழுப்புகின்றன. பிரிவின் துயரைச் சுமக்கும் பெண்களின் குரலைச் சங்க இலக்கியங்கள் விசும்பலாகவும் வெடிப்பாகவும் பேசியுள்ளன.

சாட்டையடி கேள்விகள்

புதுமைப்பித்தனின் ‘சாப விமோசனம்’ கதையில் அகலிகை, சீதை இருவரும் சந்திக்கிறார்கள். இலங்கையில் நடந்த சம்பவங்களைச் சீதை சொல்லிக்கொண்டிருந்தாள். பின்னர், அக்னிப் பிரவேசத்தைச் சொன்னாள். அகலிகை துடித்துவிட்டாள். “அவர் கேட்டாரா, நீ ஏன் செய்தாய்?” என்று கேட்டாள். “அவர் கேட்டார், நான் செய்தேன்” என்றாள் சீதை அமைதியாக. “அவன் கேட்டானா?” என்று கத்தினாள் அகலிகை. அவர் இப்போது அவன் ஆகிவிட்டான். கல்லான அகலிகையைத் தொட்டுச் சாப விமோசனம் தந்த ராமன், சீதையைத் தீக்குளிக்கச் செய்து, காட்டுக்குஅனுப்பிச் செய்த பாவத்துக்கான விமோசனத்துக்கு என்ன செய்யப்போகிறான் என்ற கேள்வியை தொடுக்கிறார் புதுமைப்பித்தன்.

தம் இணையரின் கருத்தையும் உணர்வையும் பற்றிக் கவலைப்படாமல் முடிவெடுத்துத் தன் வழியில் பயணிக்கும் ஒவ்வோர் ஆணின் முதுகிலும் இந்தக் கேள்வி சாட்டையடியாக விழுகிறது. நமக்கு உறைக்குமா? உறைத்தால் ஜனநாயகம் பிழைக்கும்.

(தொடர்ந்து பேசித்தான் ஆக வேண்டும்)

கட்டுரையாளர், எழுத்தாளர்.

தொடர்புக்கு: tamizh53@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x