Published : 06 May 2018 11:25 am

Updated : 06 May 2018 11:25 am

 

Published : 06 May 2018 11:25 AM
Last Updated : 06 May 2018 11:25 AM

கண்ணீரும் புன்னகையும்: தலித் பெண்களின் எதிர்நீச்சல்

லித் பெண்கள் தங்கள் 40 வயதுக்கு மேல் வாழ்வதில்லை என்று ‘இந்தியன் இன்ஸ்டிடியுட் ஆஃப் தலித் ஸ்டடீஸ்’ நடத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஒரு நாளில் மூன்று தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுவதாக என்.ஹெச்.ஆர்.சி. தெரிவிக்கிறது. இந்த நிலையில், ‘காபர் லஹரியா’வில் பெண் நிருபர் மீரா தொகுத்து வழங்கும் ‘சீஃப் ரிப்போர்டர் கீ டைரி சே’ நிகழ்ச்சியில் மூன்று தலித் பெண்கள் தங்கள் கதைகளைப் பகிர்ந்துகொண்டனர். முதல் பெண்ணான சஞ்சோ பிரதான், கிதுர்ஹா கிராமத்தின் தலைவியாக இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.


இரண்டாவது பெண்ணான கணவரற்ற, இரண்டு இளம் பெண் குழந்தைகளுக்குத் தாயான சப்ளா, சூழ்நிலை ஏற்படுத்திய நிர்ப்பந்தம் காரணமாக மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டவர். மூன்றாவது பெண்ணான, சமிளா தன் கிராமத்தில் கை பம்பு பழுதுபார்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருபவர். இந்த மூவரும் தங்கள் வாழ்வின் பிற்பகுதியில் கல்வியறிவு பெற்றனர். வன்முறையால் பாதிக்கப்பட்ட மூவரும், சமூகத்தாலும் வஞ்சிக்கப்பட்டவர்கள். மூவரும் தங்கள் பலவீனங்களையும் எதிர்ப்புகளையும் மீறி வாழ்வில் எதிர்நீச்சல் போட்டுவருகிறார்கள்.

பெண்களுக்கு உதவும் நிழல்

ஜப்பானில் தனியாக வசிக்கும் பெண்களின் பாதுகாப்பைக் கருதி புதுமையான செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ‘லியோபேளஸ்21’ என்ற நிறுவனம் உருவாக்கியுள்ள இந்தப் புது செயலியில் குத்துச்சண்டை வீரர், கராத்தே செய்யும் நபர், கிட்டார் வாசிக்கும் நபர் போன்ற உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அந்த உருவங்களை புரொஜெக்டர் உதவியுடன் தங்களுடைய வீட்டில் திரையிட முடியும்.

அந்தக் காட்சி வீட்டில் ஓர் ஆண் இருப்பது போன்று தத்ரூபமான தோற்றத்தை உருவாக்குகிறது. வீட்டில் அத்துமீறி நுழையும் ஆண்களுக்கு எச்சரிக்கை விடுப்பதாக இந்தச் செயலி உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் தனியாக உள்ள பெண்களுக்குப் பாதுகாப்பு தருவதற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்தச் செயலி அந்நாட்டில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

வீட்டுப் பணியாளர்களுக்கான தேசிய அறிக்கை

வீட்டு வேலைசெய்யும் தொழிலாளர்களுக்கான தேசிய வரைவு அறிக்கை இம்மாதம் இறுதிக்குள் அறிவிக்கப்படவுள்ளது. வீட்டு வேலைசெய்யும் தொழிலாளர் நலச் சங்கங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பத்தாண்டுகளுக்கு மேலாக வீட்டு வேலைசெய்யும் பணியாளர்களுக்காகக் குறைந்தபட்ச ஊதியம், மருத்துவ விடுப்பு, தொழிலாளர் நல வைப்புநிதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சகம் சார்பில் வீட்டு வேலைசெய்யும் தொழிலாளர்களுக்கான தேசிய வரைவு அறிக்கையை வெளியிடவுள்ளது.

இந்த வரைவு அறிக்கையில் மாநில அரசுகள் வீட்டு வேலைசெய்யும் தொழிலாளர்களுக்குத் தனி வாரியம் அமைத்து சமூக பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவர வேண்டும்; குறைந்தபட்ச ஊதியம், வேலை நேரம் ஆகியவற்றை முறைப்படுத்த வேண்டும் என இந்த வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மாநிலம், மாவட்டம், குடியிருப்போர் நலச்சங்கம் ஆகிய நிலைகளில் வீட்டு வேலைசெய்யும் தொழிலாளர்களுக்கான தனி வாரியம் அமைக்கப்படும் என இந்த வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேசிய அளவில் வீட்டு வேலைசெய்யும் தொழிலாளர்களுக்குத் தனி வாரியம் அமைக்கப்படாமல் இருப்பதற்குத் தொழிலாளர் நலச்சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

perundevi

இப்படிச் சொன்னாங்க

நீட் தேர்வுக்காக மொழி தெரியாத வெளி மாநிலம் ஒன்றுக்குச் செல்வது எல்லா மாணவர்களுக்கும் கஷ்டம் என்றாலும், குறிப்பாக மாணவிகள் குறித்து கூடுதல் கவலையாக உள்ளது. முப்பது வருடங்களுக்கு முன்பு, மத்திய அரசு வேலைக்கான தேர்வுக்கு, கடலூரிலிருந்து புதுச்சேரிக்கு வருவதுகூடப் பிரச்சினையாக இருந்தது. வீட்டில் கூட்டிப்போக யாரும் தயாராக இல்லை (ஏனெனில் அந்த நாள் தூமை நாள், தீட்டுப் பார்ப்பவர்கள் அல்லவா குடும்பத்தார்?).

ஒரு நண்பன் துணைக்கு வந்தான். (இல்லாவிட்டால், என் வாழ்க்கையின் பாதையே மாறியிருக்கும், அதுதான் நிஜம்!) இன்றைக்கு நிலைமை ஓரளவுக்கு மாறியிருக்கும்தான். ஆனால், வெளி மாநிலத்துக்குச் செல்ல வேண்டும் என்கிறபோது எந்த அளவுக்குப் பால் பாகுபாடு பார்க்கப்படாமல் இருக்கும் என்பது யோசனையாகவே இருக்கிறது. அதேபோல எங்கே போய்த் தங்குவார்கள் அங்கே? எத்தனைப் பேரால் இதற்கெல்லாம் செலவு செய்ய முடியும்? முக்கியமாகப் பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் உண்டா இந்தத் திருநாட்டில்?

- கவிஞர் பெருந்தேவி, முகநூல் பதிவிலிருந்து


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author