Published : 07 May 2018 11:33 AM
Last Updated : 07 May 2018 11:33 AM

மூடு விழாக்களுக்கு முடிவு எப்போது?

மூ

டு விழா என்பதே அபத்தமான சொற்பதம்தான். நிறுவனத்தை மூடுவதை எப்படி விழாவாகக் கொண்டாட முடியும்? இருந்தாலும் நிறுவனங்கள் மூடுவதை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். ஐஷர் - போலாரிஸ் நிறுவனங்கள் கூட்டாக நடத்தி வந்த மல்டிக்ஸ் ஆலை மூடப்பட்டது. ஜெய்ப்பூரில் இயங்கி வந்த இந்த ஆலைதான் ஆட்டோமொபைல் துறையில் சமீபத்தில் மூடுவிழா கண்ட நிறுவனமாகும்.

2015-ம் ஆண்டு மிகவும் எதிர்பார்ப்புடன் உருவான இந்த ஆலை தனி நபர் உபயோகத்துக்கான பன்முக வாகனமாக மல்டிக்ஸை அறிமுகப்படுத்தியது. விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு பல வகைகளில் பயன்படும் வகையில் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டிருந்தது. சரக்குகளை எடுத்துச் செல்லும் வசதி மற்றும் ஜெனரேட்டராக பயன்படுத்தும் வசதி இதில் உள்ளது. மேலும் விவசாய கிணறுகளில் தண்ணீர் இறைக்க மின்சாரத்துக்கு இதைப் பயன்படுத்த முடியும். இவ்வளவு வசதிகளோடு முதல் முறையாக அறிமுகமான இந்த வாகனம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. கடைசியில் இந்த ஆலையை மூடிவிடலாம் என இந்தியாவின் ஐஷர் நிறுவனமும் அமெரிக்காவின் போலாரிஸ் நிறுவனமும் ஒப்புக் கொண்டதன் அடிப்படையில் ஆலை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

எனது வாழ்க்கையிலேயே நிறுவனத்தை மூடுவதற்காக மேற்கொண்ட நடவடிக்கைதான் நெஞ்சை பிழிய வைத்த சோகமான பணி என்று ஐஷர்-போலாரிஸ் நிறுவன சிஇஓ பங்கஜ் துபே மிகுந்த கனத்த இதயத்துடன் குறிப்பிட்டுள்ளார். கூட்டு நிறுவனம் என்பதால் ஆலை மூடும் முடிவுக்கு வந்தவுடன், சில பணியாளர்களை தனது பிற ஆலைகளில் பணி மாற்றம் செய்து கொண்டது ஐஷர். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு வேலை பறி போனது.

ஆட்டோமொபைல் துறையில் பற்பல மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வரும் சூழலில் ஒரு நிறுவனம் தொடங்கி அது செயல்பட்டு பிறகு மூடப்படுவது என்பது மிகவும் வேதனையான விஷயம்தான்.

கடந்த ஆண்டு அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் தனது இந்திய செயல்பாட்டை நிறுத்தப் போவதாக அறிவித்தது. 20 ஆண்டுகளாக இந்தியாவில் செயல்பட்டு வந்த இந்நிறுவனம் குஜராத் மாநிலம் ஹலோலில் உள்ள ஆலையை சீனாவின் எஸ்ஏஐசி நிறுவனத்துக்கு விற்றுவிட்டது. ஆலை மூடப்பட்டதால் அதிலிருந்த பணியாளர்களில் சிலர் நிறுவனத்தின் மற்றொரு ஆலையான தலேகானுக்கு மாற்றப்பட்டனர். சிலர் அங்கு செல்ல மறுத்த நிலையில் வேலையை இழந்தனர். பலர் வேலையிழந்த சூழலும் உருவானது. தலேகான் ஆலையில் தயாராகும் கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் மட்டுமல்ல ஆஸ்திரேலியா, தாய்லாந்து, ரஷியா,தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் செயல்பட்ட ஆலைகளையும் மூடிவிட்டது.

தாராளமயமாக்கலுக்குப் பிறகு இந்தியாவில் முதலில் நுழைந்த மூன்று கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஜெனரல் மோட்டார்ஸும் ஒன்று ஆனால் அந்நிறுவனம் 20 ஆண்டுகளுக்குப் பிறகும் சந்தையைப் பிடிக்காமல் போனது துரதிருஷ்டமே.

முதன் முதலில்...

கெட்ட விஷயமாக இருந்தாலும் அதை தொடங்கி வைத்தது என்று ஒரு நிறுவனத்தையாவது குறிப்பிட்டாக வேண்டும். அந்த வகையில் இந்தியாவில் முதலில் செயல்பாட்டை மூடியது பிரான்ஸைச் சேர்ந்த பியூஜியாட்தான். மும்பையில் கல்யாண் பகுதியில் இந்நிறுவனம் 1996-ல் ஆலை அமைத்து தனது செயல்பாட்டை தொடங்கிய மூன்று ஆண்டுகளில் கடுமையான தொழிலாளர் பிரச்சினையால் மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. பியூஜியாட் 309 ரக மாடல் காரை அறிமுகப்படுத்தியதோடு சரி அதன் பிறகு இந்த ஆலையை செயல்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பயனளிக்கவில்லை. 1997-ல் இந்நிறுவனம் வெளியேறியபோது 1,500 பணியாளர்களுக்கு வேலை பறிபோனது.

அடுத்தது கொரியாவைச் சேர்ந்த தேவூ ஆலை. இந்தியாவில் இந்நிறுவனத்தின் மாடிஸ் சிறிய ரகக் கார் மிகவும் பிரபலம். அதேபோல சொகுசு கார்களில் இந்நிறுவனத்தின் சியெல்லோவை விரும்பாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இந்தியாவில் நிறுவனம் சிறப்பாக செயல்பட்ட போதிலும் கொரியாவில் உள்ள தாய் நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்த ஆலை மூடப்பட்டது.

டெல்லியில் அருகே சூரஜ்பூரில் செயல்பட்டு வந்த இந்த ஆலையை ஜெனரல் மோட்டார்ஸ், ஃபோர்டு ஆகிய நிறுவனங்கள் வாங்கி செயல்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காமல் போயின. இதனால் வேலையிழந்தோர் ஏராளம். இதைப் போல ஃபியட் கார்களும், ஹிந்துஸ்தான் மோட்டார்ஸின் கான்டெஸா கார் தொழிற்சாலைகளும் மூடப்பட்ட நிறுவனப் பட்டியலில் இணைந்தன.

ஹிந்துஸ்தான் மோட்டார்ஸின் அம்பாசிடர் கார் உற்பத்தி முற்றிலுமாக நின்று போனது. இந்த ஆலையை பியூஜியாட் நிறுவனம் வாங்கி செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

ஸ்கூட்டர்ஸ் இந்தியா லிமிடெட், ஹைதராபாதைச் சேர்ந்த ஆல்வின் புஷ்பக் ஸ்கூட்டர் நிறுவனம், ஐடியல் ஜாவா லிமிடெட் உள்ளிட்ட பல இரு சக்கர வாகன தயாரிப்பு ஆலைகளும் மூடப்பட்ட நிறுவனங்கள் பட்டியலில் சேரும். ஒரு ஆலை உருவாவதால் அதை சுற்றி அந்த ஆலைக்கு உதிரி பாகங்கள் சப்ளை செய்யும் பிற சிறு தொழில் நிறுவனங்கள் பலவும் உருவாகும். இதனால் தொழில் வளம் பெருகும், பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

அதேசமயம் ஒரு ஆலையை மூடுவது என்பது மிகவும் வேதனையான விஷயம். இது அந்த ஆலையில் பணிபுரியும் பணியாளர்களின் வாழ்க்கையை முற்றிலுமாக புரட்டிப்போடும் சம்பவமாகும். ஐஷர்-போலாரிஸ் நிறுவனம் மூடப்பட்டதே கடைசி நிகழ்வாக இருக்கட்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x