Published : 28 May 2018 11:38 AM
Last Updated : 28 May 2018 11:38 AM

அலசல்: குழந்தைகள் டூத்பேஸ்டில் புளோரைடு இருக்கா?

குழந்தைகளை கவர்வதற்காக பற்பசை தயாரிப்பு நிறுவனங்கள் பல்வேறு சுவைகளில் பற்பசைகளை தயாரிக்கின்றன. வேறுபட்ட சுவைகளின் காரணமாக பல் துலக்கும்போது மட்டும் பற்பசை பயன்படுத்துவதோடு நின்றுவிடாமல் பெற்றோருக்கு தெரியாமல் அவ்வப்பொழுது பற்பசையை குழந்தைகள் சாப்பிட்டு விடுகின்றன . பற்பசைதானே இதனால் என்ன வந்துவிடப் போகிறது என கவனக்குறைவாக இருந்துவிடுகிறார்கள் பெற்றோர்கள். ஆனால் இதில் மிகவும் கவனமாக இருக்கவேண்டிய நிறைய விஷயங்கள் உள்ளன.

மே 16 அன்று கூடியிருக்கிற இந்தியாவின் மருந்து தொழில்நுட்ப ஆலோசனை அமைப்பின் (டிடிஏபி) கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று குழந்தைகள் பயன்படுத்துகிற பற்பசைகளிலுள்ள புளோரைடின் அளவை ஒரு மில்லியனுக்கு ஆயிரம் என்ற அளவில் (1,000 பிபிஎம்)குறைக்கவேண்டும் என்பது.

பற்பசையில் எவ்வளவு புளோரைடு உள்ளது, பற்பசை என்று காலாவதியாகிறது என்பது போன்ற விவரங்களை பற்பசை அட்டையில் நிறுவனங்கள் தெளிவாக குறிப்பிடவேண்டும் என்ற விதிமுறையைக் கொண்டுவரவும் டிடிஏபி முடிவு செய்துள்ளது. இதற்காக 1945-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டத்தின் 149-ஏ பிரிவில் திருத்தம் கொண்டுவர முடிவு செய்துள்ளது டிடிஏபி.

வெறும் 0.1-ல் இருந்து 0.3 மில்லி கிராம் புளோரைடு கூட ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என சொல்கிறார்கள். இரைப்பை பகுதியில் வலி, வாந்தி, குமட்டல், தலைவலி போன்ற பல பிரச்சினைகள் இதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. புளோரைடு என்பது பல்லை உறுதியாக்குவதற்கான ஒரு பொருள். பெரியவர்களின் பற்பசையில் புளோரைடு அளவு 1000 பிபிஎம்மைவிட அதிகமாக இருக்கும். இதனால் பெரியவர்களுக்கு பாதிப்பு எதுவும் கிடையாது.

ஆனால் ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் பல், சில முறைகள் உதிர்ந்தபின் மீண்டும் முளைத்து அதன்பின் உறுதியாகும் வகையில் அமைந்துள்ளது. புளோரைடை அதிக அளவில் குழந்தைகள் எடுத்துக்கொள்ளும்போது அவர்களது பற்கள் சீக்கிரமாகவே உறுதியாகி விடுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இது குழந்தைகளின் பல் நலனுக்கும், வளர்ச்சிக்கும் ஏற்றதல்ல. புளோரைடு அதிகமுள்ள பற்பசையை அளவுக்கு அதிகமாக தொடர்ந்து பயன்படுத்துவதால் குழந்தைகளின் பல்லில் நிரந்தரமாக கறை படியும் வாய்ப்புள்ளது. குழந்தைகள் பல் துலக்கும்பொழுது பற்பசையை வெளியே துப்புகிறார்களா அல்லது அப்படியே விழுங்கிவிடுகிறார்களா என்பதை பெற்றோர்கள் கவனிக்கவேண்டியது மிகவும் அவசியமாகும்.

ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயன்படுத்தும் பற்பசையில் உள்ள புளோரைடு அளவு என்ன என்பதையும் பெற்றோர்கள் அறிந்துகொள்ள வேண்டும். ஆனால் பற்பசை நிறுவனங்கள் இந்தத் தகவல்களை பெரிதாக அச்சிடாமல் மிகச் சிறியதாக அச்சிட்டு வருகிறார்கள். இந்த செயல்பாட்டுக்கு எதிரான டிடிஏபியின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்க ஒன்று.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x