Published : 18 May 2018 10:44 AM
Last Updated : 18 May 2018 10:44 AM

கோடம்பாக்கம் சந்திப்பு: விஸ்வரூப விவகாரம்!

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவராக ஜெயித்தபிறகு விஷாலைச் செயல்படும் தலைவர் என்று பாராட்டினார்கள். டிஜிட்டல் நிறுவனங்கள் உடனான அவரது மோதலும் புதிய டிஜிட்டல் சேவை நிறுவனங்களுக்கு அவர் வழிவிட்டதும் சாதனை எனக் கூறிக்கொண்டாலும், அவரது சமீபகாலச் செயல்பாடுகளை எதிரணியில் நிற்பவர்கள் அனைவரும் கடுமையாக விமர்சித்துவருகிறார்கள்.

மிக முக்கியமாக லைக்கா நிறுவனம் மீதான குற்றச்சாட்டு விஸ்வரூபம் எடுத்துவருகிறது. ‘தமிழ் ராக்கர்ஸும் லைகாவும் ஒன்றுதான்’ என விஷால் கண்டுபிடித்துவிட்டதாகவும் அதை விஷால் மறைக்கிறார் என்றும் இணையதளப் பத்திரிகை ஒன்று பகிரங்கமாக எழுதியிருப்பதாகவும் அதுபற்றி விஷால் இதுவரை மறுப்பு தெரிவிக்காமல் இருப்பது ஏன், தமிழ் ராக்கர்ஸ் யார் என்பதை விஷால் கண்டுபிடித்திருந்தால் அதை வெளிப்படுத்த விஷால் ஏன் தயங்க வேண்டும்!” என்று எதிர்தரப்பிலிருந்து கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இந்த விவகாரம் இன்னும் சூடுபிடிக்கும் என்றுதான் தோன்றுகிறது.

விஷாலின் காக்கி

மிஷ்கின் இயக்கத்தில் ‘துப்பறிவாளன்’ விஷாலுக்கு நல்ல பெயர் பெற்றுத் தந்தாலும் முழுமையான வணிக வெற்றியைப் பெறவில்லை. ஆனால், மித்ரன் இயக்கத்தில் விஷால் நடித்து கடந்த வாரம் வெளியான ‘இரும்புத்திரை’ வசூல்ரீதியாக வெற்றிபெற்றிருக்கிறது. இந்த வெற்றியைத் தக்கவைத்துக்கொள்ளும்விதமாகத் தனது அடுத்து படத்தையும் முடிவு செய்திருக்கிறாராம் விஷால்!

பூரிஜெகன்நாத் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர். நடித்து கடந்த 2015-ல் வெளியான தெலுங்குப் படம் ஒன்றின் தமிழ் மறு ஆக்கத்தில் நடிக்க இருக்கிறார் விஷால். ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் வெங்கட் குமார் இயக்க, ஒரு இடைவெளிக்குப் பிறகு இதில் காவல் அதிகாரி வேடம் ஏற்க இருக்கிறார் விஷால். ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்கலாம் என்கிறது விஷால் வட்டாரம்.

மறக்கவே முடியாது!

மணிரத்னம் இயக்கிவரும் ‘செக்க சிவந்த வானம்’ இறுதி கட்டப் படப்பிடிப்பு நடந்துவருகிறது. விஜய்சேதுபதி, அருண் விஜய், சிம்பு, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளத்தை ஒரே நேரத்தில் நடிக்க வைத்துவருகிறார் இயக்குநர். இந்நிலையில் தனது காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்து விட்டதைத் தொடர்ந்து நடிகர் அருண் விஜய் ட்வீட் செய்திருக்கிறார்.

அதில் ‘‘ஜீனியஸ் மாஸ்டரிடம் ஒரு மாணவனாக நிறையப் பாடங்களை கற்றுக்கொண்டேன். மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று காத்திருந்த எனக்கு அதற்கான பலன் தற்போது கிடைத்துவிட்டது ‘செக்க சிவந்த வானம்’ மறக்கவே முடியாத அனுபவம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்

புறநகரில் விஜய்!

விஜய் தனது 62-வது படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிவரும் தலைப்பிடப்படாத இந்தப் படத்தின் இரண்டாம் கட்ட பாடல் காட்சி படப்பிடிப்பு சென்னைப் புறநகர்ப் பகுதியிலுள்ள கோகுலம் ஸ்டுடியோவில் நடந்துவருகிறது. டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் நடன அமைப்பில் விஜய், கீர்த்தி சுரேஷ் இருவரும் பங்குபெரும் பாடல் காட்சி இது. ‘பைரவா’ படத்தைத் தொடர்ந்து விஜய் - கீர்த்தி சுரேஷ் மீண்டும் இணைந்திருக்கும் இந்தப் படத்துக்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். படத்தைத் தயாரித்துவரும் ‘சன் பிக்சர்ஸ்’ வரும் தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

நட்சத்திர வேட்டை!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி அடுத்து நடிக்கவிருக்கும் படத்தில்‘கபாலி’யில் இடம்பெற்றதைப் போல ரஜினிக்கு மகள் கதாபாத்திரம் இடம்பெறுகிறது. இதற்காக ரஜினியின் மகள் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் நடிகைக்கான தேர்வு இயக்குநரின் அலுவலகத்தில் தற்போது நடந்துவருகிறது. முதல் கட்டப் படப்பிடிப்பை உத்ரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனில் ஜூன் மாதம் தொடங்கவிருப்பதாகத் தெரிவிக்கிறது இயக்குநர் வட்டாரத் தகவல்.

புதுமுகம் அறிமுகம்

கர்நாடகத்திலிருந்து காவிரி வருகிறதோ இல்லையோ கதாநாயகிகள் வந்துகொண்டே இருப்பார்கள். விஜய் ஆண்டனி நடிப்பில் இன்று வெளியாகும்‘காளி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கும் ஷில்பா மஞ்சுநாத் பெங்களூரு மாடல். பிஸு மேனனின் ‘ரோசாப்பூ’ மலையாளப் படத்தில் அறிமுகமாகிய பின்னரே தமிழுக்கு வந்திருக்கிறார். ‘காளி’ படத்தில் இவரைப் பார்த்து ‘அரும்பே’ என விஜய் ஆண்டனி உருகும் பாடல் இணையத்தில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

தமிழில் அறிமுகமாவது பற்றி ஷில்பா கூறும்போது, “நிஜ வாழ்வில் எப்படி இருப்பேனா, அதற்கு எதிர்மறையான கிராமத்துப் பெண்ணாக பார்வதி என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறேன். என்னைத் தேர்ந்தெடுத்த கிருத்திகா உதயநிதிக்கு என் நன்றி. தமிழ் ரசிகர்கள் கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று உருகுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x