Published : 14 May 2018 11:08 AM
Last Updated : 14 May 2018 11:08 AM

ரோல்ஸ் ராய்ஸின் முதலாவது எஸ்யுவி `கல்லினன்’

 

சொ

குசு கார் தயாரிப்பில் உலக அளவில் பிரபலமாக விளங்கும் பிரிட்டனின் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது 114 ஆண்டுக்கால வரலாற்றில் முதல் முறையாக எஸ்யுவி ரக மாடலை களமிறக்கியுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள பெரும் கோடீஸ்வரர்களின் முதலாவது தேர்வாக விளங்குவது ரோல்ஸ் ராய்ஸ் கார்தான். அந்தஸ்தின் அடையாளமாகத் திகழும் ரோல்ஸ் ராய்ஸ் காரில் ஒன்றாவது தங்களது வீட்டு காரேஜில் நிற்க வேண்டும் என்பதுதான் பெரும்பாலான கோடீஸ்வரர்களின் கனவு.

இத்தகையோரின் கோரிக்கையாக இருந்தது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனமும் ஸ்போர்ட்ஸ் யுடிலிடி வெகிக்கிள்ஸ் எனப்படும் எஸ்யுவி ரக மாடலை தயாரிக்க வேண்டும் என்பதுதான். சாலைப் பயணம் மற்றும் சாகச பயணத்துக்கு ஏற்ற வகையிலான மாடலை கடந்த வாரம் அறிமுகப்படுத்தியது ரோல்ஸ் ராய்ஸ். இதற்கு கல்லினன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

எஸ்யுவி மாடல் தயாரிப்பது என்ற முடிவை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இந்நிறுவனம் எடுத்துவிட்டது. கல்லினன் என்ற பெயரை தேர்வு செய்ததற்கு பின்னணியில் சுவாரஸ்யமும் உண்டு. அதாவது மிகப் பெரிய வைரத்தின் பெயர் கல்லினன். வைரத்தைப் போன்ற பொக்கிஷமான தனது தயாரிப்புக்கு இந்தப் பெயரே பொருத்தமானது என முடிவு செய்து கல்லினன் என்ற பெயரை இந்நிறுவனம் தேர்வு செய்தது. இதன் ஆரம்ப கட்ட விலை 3.35 லட்சம் டாலராகும். இந்தியாவில் இந்தக் காரின் விலை ரூ. 5 கோடியாகும்.

சொகுசு மற்றும் பிரம்மாண்டமானதாக இருக்கும் வகையில் இதில் 6.75 லிட்டர் ட்வின் டர்போ என்ஜின் பொறுத்தப்பட்டுள்ளது. இது 563 பிஹெச்பி மற்றும் 850 நியூட்டன் மீட்டர் டார்க் திறனை வெளிப்படுத்தக் கூடியது. அதுவும் மிகக் குறைந்த 1600 ஆர்பிஎம் வேகத்திலேயே இந்த சக்தி வெளிப்படும். நான்கு சக்கர சுழற்சி இருப்பதால் கரடு முரடான மலைப் பாதைகளிலும் சொகுசான பயணத்தை இது உறுதி செய்யும்.

இன்றைய தலைமுறையினர் அனைத்து விதமான பயணத் தேவைகளையும் பூர்த்தி செய்யக் கூடிய சொகுசு வாகனத்தை எதிர்பார்க்கின்றனர். சாலைப் பயணம் மட்டுமின்றி சாகச பயணத்துக்கு ஏற்ற வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளதாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி முல்லர் ஓட்வோஸ் தெரிவித்தார்.

பென்ட்லி, போர்ஷே, ஜாகுவார், ஆஸ்டன் மார்டின், லம்போர்கினி, மாஸரட்டி உள்ளிட்ட சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்கெனவே இதுபோன்ற எஸ்யுவி ரகங்களை தயாரித்து வருகின்றன. இந்நிறுவனங்களின் தயாரிப்புகளுக்குப் போட்டியாக கல்லினன் நிச்சயம் இருக்கும் என்று இத்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

சர்வதேச அளவில் இது போன்ற சூப்பர் சொகுசு வாகனங்களின் விற்பனை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. 2014-ம் ஆண்டு 14,903 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இது 2015-ம் ஆண்டில் 16,457 ஆகவும், 2016-ல் 26,768 ஆகவும், 2017-ல் 27,538 ஆகவும் உயர்ந்துள்ளது. நடப்பாண்டில் 32,300 வாகனங்கள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2020-ல் 40 ஆயிரம் வாகனங்கள் விற்பனையாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x