Published : 21 May 2018 10:12 AM
Last Updated : 21 May 2018 10:12 AM

விரிவாக்க நடவடிக்கையில் மாருதி சுஸுகி

ப்பானின் கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி மிகப் பெரிய விரிவாக்க நடவடிக்கையில் இறங்கியுள்ளது. தற்போது இந்தியாவில் விற்பனையாகும் இரண்டு கார்களில் ஒரு கார் மாருதி சுஸுகியாக உள்ளது. இந்நிலையில் தனது சந்தை முன்னிலையை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள பெரிய அளவிலான விரிவாக்க நடவடிக்கையை எடுத்துள்ளது.

2030-ம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 25 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த விரிவாக்க நடவடிக்கை அனைத்தையும் இந்தியாவில் உள்ள இரண்டு ஆலைகளிலும் மேற்கொள்ள சுஸுகி திட்டமிட்டுள்ளது.

முதல் கட்டமாக குஜராத்தில் உள்ள ஆலையின் உற்பத்தித் திறனை 2020-ம் ஆண்டு இறுதிக்குள் 7.5 லட்சமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக புதிதாக ஒரு ஆலையை அமைக்கவும் சுஸுகி திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே மாருதி சுஸுகி நிறுவனத்துக்கு குர்காவ்ன், மானேசர் மற்றும் குஜராத்திலும் ஆலைகள் உள்ளன. நான்காவதாக அமைக்க உள்ள ஆலைக்கான இடத்தை தேர்வு செய்யும் பணிகளை இந்நிறுவனம் முடுக்கி விட்டுள்ளது. இப்புதிய ஆலை ஆண்டுக்கு 15 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும் என்றும், இந்த ஆலை 2025-ல் உற்பத்தியைத் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு கட்ட நடவடிக்கைகளையும் பூர்த்தி செய்யும் போது நிறுவனத்தின் கார் உற்பத்தி 45 லட்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 17 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் குர்காவ்ன் மற்றும் மானேசர் ஆலையின் உற்பத்தி 15 லட்சமாகும். குஜராத் ஆலை 2.5 லட்சம் கார்களை உற்பத்தி செய்கிறது.

அபு தாபியில் சமீபத்தில் இந்நிறுவனத்துக்கான உதிரி பாக சப்ளையர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. அதில் விரிவாக்க நடவடிக்கைகள் குறித்து மாருதி சுஸுகி விரிவான அறிக்கையை வெளியிட்டதாகத் தெரிகிறது.

2030-ம் ஆண்டிலிருந்து ஆண்டுக்கு 50 லட்சம் கார்களை விற்பனை செய்ய நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளதாக மாருதி நிறுவனத்தின் தாய் நிறுவனமான சுஸுகியின் தலைவர் ஒஸாமு சுஸுகி தெரிவித்தார்.

2025-ம் ஆண்டில் மாருதி சுஸுகி ஆண்டுக்கு 30 லட்சம் கார்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை எட்டுவதற்கு உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது. இதனால் குஜராத் ஆலையை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது.

புதிய மாடல் சியாஸ் கார் 2020-ம் ஆண்டில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சுஸுகி நிறுவனம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவுக்கு 1,500 கோடி டாலரை செலவிடுகிறது. கொரிய கார் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க புதிய கார்களைத் தயாரித்து சந்தையை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் சுஸுகி உள்ளது. ஹைபிரிட் வாகனங்கள் மற்றும் காசோலினில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்தவும் சுஸுகி திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆராய்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x