Published : 02 May 2018 11:50 AM
Last Updated : 02 May 2018 11:50 AM

டிங்குவிடம் கேளுங்கள்: கண்ணைக் கொத்துமா பச்சைப் பாம்பு?

தேனீக்கள் எப்படிப் பூக்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கின்றன, டிங்கு?

– வி. திவ்யதர்ஷினி, 4-ம் வகுப்பு, ஸ்ரீ செளடாம்பிகா நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர்.

பொதுவாகப் பூச்சிகள் நறுமணத்தையும் நிறத்தையும் வைத்துப் பூக்களைக் கண்டுபிடிப்பதாகச் சொல்லப்பட்டு வந்தது. அதனால்தான் பகலில் மலரும் பூக்கள் கண்கவர் வண்ணங்களாகவும் இரவில் மலரும் மலர்கள் வெள்ளையாகவும் நறுமணத்துடனும் காணப்படுகின்றன. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் நிறமும் மணமும் மட்டுமின்றி, மின் சக்தியும் முக்கியப் பங்கு வகிப்பதாகக் கண்டறியப்பட்டிருக்கிறது. தேனீக்களின் உடலில் இருக்கும் முடிகளும் இறக்கைகளும் உடலிலிருந்து மின்சக்தியை வெளிவிடுகின்றன. தேனீக்கள் விடும் எதிர்மின்சாரத்துக்குப் பதில் தரும் விதத்தில் பூக்கள் நேர்மின்சாரத்தை வெளியிடுகின்றன. இதன் மூலம் பூக்கள் இருக்கும் இடத்தைத் தேனீக்கள் கண்டுகொள்கின்றன என்கிறார்கள், திவ்யதர்ஷினி.

பச்சைப் பாம்பு கண்களைக் கொத்திவிடும் என்கிறான் என் நண்பன். உண்மையா, டிங்கு?

– பாரதி சுந்தர், குறண்டி.

பெரும்பாலான பச்சைப் பாம்புகள் விஷமற்றவை. சில வகைப் பச்சைப் பாம்புகளுக்கு மட்டும் குறைந்த வீரியம் கொண்ட நச்சுப் பற்கள் இருக்கின்றன. தவளை, பல்லி போன்ற சிறிய உயிரினங்கள் மீது நஞ்சைச் செலுத்தி, இரையாக்கிக்கொள்கின்றன. பச்சைப் பாம்பு எதிரியைக் கண்டவுடன் தன் உடலை அகலமாக்கும். அப்போது பச்சை செதிள்களுக்கு இடையே இருக்கும் கறுப்பு, வெள்ளை வண்ணங்கள் தெரியும். தலையைப் பெரிதாக்கிக் காட்டும். இதைப் பார்த்தவுடன் எதிரி பயந்து ஓடும். மனிதர்கள் கூர்மையான பச்சைப் பாம்பின் தலையைப் பார்த்து, தங்கள் கண்களை கொத்தி விடுவதாக நம்புகிறார்கள். அதனால்தான் இதைக் ’கண் குத்திப் பாம்பு’ என்றும் அழைக்கிறார்கள். ஆனால் இதில் உண்மை இல்லை, பாரதி சுந்தர்.
 

dingu_17-11-17.jpgrightநாங்கள் விடுமுறைக்குப் பாஞ்சாலங்குறிச்சி சென்று வந்தோம். நீ சமீபத்தில் சென்ற சுற்றுலாத்தலம் எது, டிங்கு?

- கே. ராமலஷ்மி, 9-ம் வகுப்பு, அரசினர் மேல்நிலைப் பள்ளி, சிவகங்கை.

அடடே! வரலாற்றுப் புகழ் மிக்க ஊருக்குச் சென்று வந்திருக்கிறீர்கள். கட்டபொம்மன் வரலாறு எல்லாம் மனக்கண்ணில் வந்திருக்கும் இல்லையா, ராமலஷ்மி! நானும் வரலாற்றுப் புகழ் மிக்க கொல்லி மலைக்குச் சென்று வந்தேன், நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் கொல்லி மலை, தமிழ்நாட்டில் இருக்கும் மலைப் பிரதேசங்களில் வரலாற்று ரீதியாக முக்கியமானது. ஊட்டி, கொடைக்கானல்போல் இங்கே மக்கள் அதிகம் வருவதில்லை. 70 கொண்டை ஊசிகள் கொண்ட சாலைப் பயணம் கொஞ்சம் சவாலாக இருக்கும்.

மேலே சென்றுவிட்டால் மற்ற மலைப் பிரதேசங்களைபோல் ரம்மியமாக இருக்கிறது. சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு போன்ற பழந்தமிழ் காப்பியங்களிலேயே கொல்லி மலை பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி இந்தப் பகுதியை ஆண்டிருக்கிறார். 63 நாயன்மார்களில் இருவரான திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் இங்குள்ள அறப்பளீஸ்வரர் கோயிலை நினைத்துப் பாடியிருக்கிறார்கள். கொல்லி மலையில் சிறுதானியங்கள், மசாலாப் பொருட்கள், பழங்கள் போன்றவை விளைவிக்கப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x