

வெண்மணல் கடற்கரைக்கு கோவாவுக்கோ அந்தமானுக்கோ செல்ல வேண்டாம்; தியாகவல்லியிலேயே அழகிய வெண்மணல் கடற்கரை இருக்கிறது. சிதம்பரத்திலிருந்து கடலூருக்குச் செல்லும் வழியில் தியாகவல்லி எனும் சிறிய அழகிய கடற்கரை கிராமம் அமைந்திருக்கிறது. விவசாயமும் மீன் பிடிப்பதும் இங்குள்ள மக்களின் முக்கியத் தொழில்கள்.
கிராமத்துக்குள் நுழைவதற்கு முன்பு வலது பக்கத்தில் மண்ணில் கிளை பரப்பியிருக்கும் சில முந்திரி மரங்களைக் கடந்து சென்றால், சில நிமிடங்களில் காற்றின் திசைக்கு ஏற்ப உருவம் மாறும் மணல் குன்று காணப்படும்.
வெயில் குறைவாக இருக்கும்போது சென்றால் மணலில் நடப்பதும் சுற்றிப் பார்ப்பதும் நல்ல அனுபவத்தைத் தரும். மணல் குன்றுக்கு நடுவே இருக்கும் சிறு குட்டையில் வானின் நீலம் பிரதிபலித்து கண்களைக் கவரும். இது ஒளிப்படம் எடுப்பதற்குச் சிறந்த இடமாக இருக்கும்.
ஊருக்குள் பழங்காலக் கோயில் ஒன்றும் உள்ளது. அதைக் கடந்து சென்றால், சற்றுத் தொலைவில் அழகிய கடற்கரை நம்மை வரவேற்கும். கடற்கரையில் இருக்கும் மரங்களுக்கு அடியில் மீனவர்கள் வலைகளைப் பின்னிக்கொண்டிருப்பார்கள். ஒன்றிரண்டு படகுகள் கரையில் ஒதுங்கியிருக்கும். மற்றபடி மக்கள் கூட்டம் இருக்காது.
வெள்ளைக் குறுமணலில் நடப்பதும் மென்மையான அலைகள் கால்களை வருடுவதும் அற்புதமான அனுபவத்தைத் தரும். சிலர் கடலில் குளிப்பதும் ஒதுங்கியிருக்கும் படகுகளில் இளைப்பாறுவதும் மீண்டும் கடலில் குளிப்பதுமாக இருப்பார்கள்.
குளியலுக்குப் பிறகு பசியெடுக்கும். உணவைக் கொண்டு சென்றால், மரங்களுக்கு அடியில் அமர்ந்து அரட்டையடித்துக் கொண்டே சாப்பிடலாம். இல்லையென்றால் தியாகவல்லியைத் தாண்டி கடலூருக்குச் செல்லும் வழியில்தான் உணவகங்கள் இருக்கும்.
தியாகவல்லியில் முந்திரி மரங்கள் அதிகம் இருப்பதால், அங்கு வசிக்கும் மக்களின் உணவில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. முந்திரிக் கூட்டு, முந்திரி பெப்பர் மசாலா என்றெல்லாம் தொடு உணவாக முந்திரியைப் பரிமாறுவார்களாம்.
“விருந்தினர் வரும்போது சாம்பாரிலாவது நாலு முந்திரி போடலைன்னா கோவிச்சிட்டுப் போயிருவாங்க” என்றார் ஓர் அம்மா. வெயில் இல்லாத காலத்தில் உணவுடன் சென்றால், தியாகவல்லியில் ஒரு பகல் பொழுதை இனிமையாகக் கழித்துவிட்டு வரலாம்!