Published : 01 Apr 2018 11:20 AM
Last Updated : 01 Apr 2018 11:20 AM

எசப்பாட்டு 29: கேள்வி கேட்டு விஞ்ஞானியாவோம்

நிறைய கேள்வி கேட்கிற, நிறைய பேசுகிற பெண்களை ஆண்களுக்கும் இந்தச் சமூகத்துக்கும் பிடிக்காது. ஆனால், இந்த இரண்டும்தாம் அறிவியல் உலகத்தில் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தத் தேவைப்படும் அடிப்படையான குணங்கள். நம் கல்வி முறை ஆணோ பெண்ணோ இருவரையுமே கேள்வி கேட்கும் பண்பு நீக்கிச் சுத்திகரிக்கப்பட்டவர்களாகவே வெளியே அனுப்புகிறது. சதா கேள்வி கேட்கும் குழந்தைகளை, கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லும் மனப்பாட இயந்திரங்களாக மாற்றுவதுதானே இந்தக் கல்வி முறையின் நோக்கமாக இருக்கிறது. கல்விச் சாலைக்குள் இப்படியென்றால் வெளியுலகில் பெண் கேள்வி கேட்கத் தூண்டப்படுவதே இல்லை. கீழ்ப்படிதலுள்ள பெண்ணே எல்லோருக்கும் பிடித்த பெண்ணாகிறாள். கேள்விகளும் எதிர்க் கேள்விகளுமே பிரதானமாக இயங்கும் அறிவியல் புலத்துக்குள் பெண்கள் நுழைய இதுவே முதல் தடை.

காத்திருக்கும் சவால்கள்

ஒரு பெண், விஞ்ஞானி ஆக வேண்டுமானால் வளர்ப்பு முறை, உள் மன உந்துதல், ஆதரவான சூழல் ஆகிய மூன்றும் சரியாக அமைய வேண்டும். இம்மூன்றையும்விடப் பெரிதாகச் சமூக உளவியலும் சமூக அமைப்பும் ஆதரவாக அமைய வேண்டும்.

“முனைவர் பட்டம் முடித்த பிறகுதான் ஒரு பெண் மிக முக்கியமான முடிவெடுக்கும் கட்டத்தில் நுழைகிறாள். அப்போது அவளுக்குத் திருமண வயது வந்துவிட்டிருக்கும். வாழ்நாள் முழுதும் போராடுகிற விஞ்ஞானியாக வாழ்வதா அல்லது ‘தொந்தரவுகள் இல்லாத’ ஆசிரியை, பேராசிரியை, அலுவலகப் பணிகள் போன்றவற்றில் ஏதாவதொன்றைத் தேர்ந்தெடுப்பதா என்ற கேள்வி எப்போதும் காத்திருக்கும். விஞ்ஞானியாவது என முடிவெடுத்தால் ஆண் விஞ்ஞானிகளைவிட இரு மடங்கு அவள் உழைக்க வேண்டியிருக்கும். திருமணம், குழந்தைப்பேறு என ஆறு மாதம் தன் ஆய்வுப் பணியிலிருந்து அவள் விலகியிருக்க நேரிட்டால் துறையில் அவள் பின்தங்கிவிடுவது உறுதி. அந்த ஆறு மாதத்தில் அத்துறைக்குச் சம்பந்தமே இல்லாதவள்போல ஆகிவிடுவோம். அறிவியல் ஆய்வுப் பணி என்பது அத்தகைய தனிப்பண்புகள் கொண்டு இயங்குவதல்லவா?” என்கிறார் சென்னை மத்திய தோல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ‘உயிரி இயற்பியல்’, ‘உயிரி இயற்பியல் வேதியல்’ விஞ்ஞானி அருணா தத்தாத்ரேயன்.

‘தகுதி’யை நிரூபிக்கப் போராட்டம்

“திருமணமாகி இரண்டு ஆண்டுகள் கழித்து முனைவர் பட்டத்துக்குப் பிறகான ஆய்வுக்கு என் கணவர் ஆய்வு செய்துகொண்டிருந்த அதே நிறுவனத்துக்கு விண்ணப்பித்தேன். நேர்காணலுக்கு எப்போது அழைப்பார்கள் என்பதே தெரியாமல் காத்திருந்தேன். இதற்கிடையில் பிரசவத்துக்காக அம்மா வீட்டுக்குப் போய்விட்டேன். அந்த நேரத்தில் நேர்காணலுக்கான அழைப்பை அனுப்பினார்கள். அதில் கலந்துகொள்ள இயலவில்லை. பிரசவமாகி ஓரிரு நாளில் இரண்டாவது நேர்கணலுக்கான அழைப்பு வந்தது. ஒருவாறு சமாளித்து வந்து பங்கேற்றேன், தேர்வானேன்.

ஆறு மாதங்கள் கழித்து, கையில் குழந்தையோடு இயற்பியலுக்குள் நுழைவது அத்தனை எளிதாக இல்லை. ஜனவரி 98-ல் பணியைத் தொடங்கினேன். ஓராண்டு முடிந்ததும் ஆய்வுப் பணி நீட்சிக்காக ஆய்வுத்தாள் சமர்ப்பிக்க வேண்டும். என் ஆய்வுத்தாள், ஆய்வுக் குழுவினரின் ஒருமித்த பாராட்டைப் பெற்றது. எனினும், குழுத் தலைவர் நான் ஆய்வகத்துக்கு உரிய நேரத்துக்கு வருவதில்லை, பணிகளில் ஒழுங்கின்மை எனச் சில காரணங்களை எழுதி இவருக்கு ஆய்வுப் பணி நீட்சி வழங்க முடியாது எனக் குறிப்பெழுதிவிட்டார். மீண்டும் போராட்டம். என் ‘தகுதி’யைக் கேள்விக்குள்ளாக்கிய அந்த நாட்களைக் கடக்க நான் கடுமையாக உழைத்தேன். விடுமுறை நாட்கள் உட்பட எல்லா நாளும் ஆய்வகத்துக்குச் சென்றேன்.

2002-ல் அலகாபாத் ஹரிச்சந்திரா ஆய்வு நிறுவனத்தில் இணைந்தேன். அதன் பிறகு என் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கவே இல்லை. மகளும் நானும் ஆய்வு நிறுவன வளாகத்துக்குள்ளேயே வாழ்ந்தோம். கணவரோடு சேர்ந்து வாழ முடியவில்லை. ஆனாலும் மகிழ்ச்சியாக இருந்தோம். கணவன்- மனைவியாகச் சேர்ந்து வாழ்ந்து ஒருவருக்காக இன்னொருவர் தன் ஆய்வுப் பணியை விட்டுக் கொடுக்க அவசியமின்றி இருவருமே சாதிக்க முடிகிறதே என்ற மகிழ்ச்சி” என்று குறிப்பிடுகிறார் நியூட்ரினோ இயற்பியல் விஞ்ஞான ஸ்வரூபவதி கோஸ்வாமி.

வழிவிட்ட குடும்பம்

நாம் இன்று சாப்பிடும் கரும்பு வகைகளைப் படைத்தளித்த உயிரியல் விஞ்ஞானி இ.கே.ஜானகியம்மாள், செடிகள், பயிர்கள் போன்றவை குறித்த ஆய்வில் பெரும் சாதனைகளை நிகழ்த்தியவர். லண்டனில் பணியாற்றியபோது, “உங்கள் சேவை நாட்டுக்குத் தேவை” என ஜவாஹர்லால் நேருவால் அழைக்கப்பட்டு இந்திய தாவிரவியல் ஆய்வு நிறுவனத்தைச் (Botanical Survey Of India) சிறப்பாக மறுசீரமைத்தவர்.

பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரு கேரளக் குடும்பத்தில் பிறந்ததாலும் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்ததாலும்தான் இத்தனை சாதனைகளை அவரால் நிகழ்த்த முடிந்தது.

அதிர்ஷ்டம் வேண்டுமா?

இதுபோல ‘லீலாவதியின் மகள்கள்’ என்ற புத்தகத்தில் 98 பெண் விஞ்ஞானிகளின் கதைகள் பேசப்பட்டுள்ளன. இந்த 98 பேரும் தவறாமல் ஏதேனும் ஒரு இடத்திலாவது பயன்படுத்தும் வார்த்தை ‘அதிர்ஷ்டவசமாக’.

ஒரு பெண் நினைத்தால் விஞ்ஞானியாக முடியும் என்ற உறுதியான சமூக ஏற்பாடு இன்றும் இல்லை. தற்செயலாகவும் அதிர்ஷ்டவசமாகவும் நல்ல குடும்பம், நல்ல கணவர், நல்ல சக விஞ்ஞானிகள் என்று அமைந்தால் மட்டுமே விஞ்ஞான உலகத்தில் ஒரு பெண் மேலெழுந்து வர முடிகிறது.

டெல்லி ஐஐடி-ல் பேராசிரியராகப் பணியாற்றும் சாருசீத்தா சக்கரவர்த்தி, “அறிவியல் உலக ஆண்கள் எப்போதும் எங்களிடம் கேட்கிற ஒரு கேள்வி உண்டு. ‘சரி, ஆய்வுலகத்துக்குள் பெண்களும் வர வேண்டும் என்கிறீர்கள், வந்துவிட்டீர்கள். சமத்துவம் நிலை நாட்டப்படுகிறது. எல்லாம் சரிதான். ஆனால், நீங்கள் உள்ளே வந்துவிட்டதால் அறிவியலில் என்ன மாற்றம் வந்துவிடப்போகிறது’ என்பதுதான் அந்தக் கேள்வி” என்கிறார்.

(தொடர்ந்து பேசித்தான் ஆக வேண்டும்)

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: tamizh53@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x