Published : 23 Apr 2018 10:10 AM
Last Updated : 23 Apr 2018 10:10 AM

லேண்ட் ரோவர் விற்பனை சரிவு: தொடர் நெருக்கடியில் டாடா மோட்டார்ஸ்!

டா

டா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு நெருக்கடிக்கு பஞ்சமே இருக்காது. நீண்ட காலமாக நானோ கார் உற்பத்தியில் சிக்கலை சந்தித்து வந்தது. அதிலிருந்து மீண்டு ஒரு வழியாக டியாகோ என புதிய கார் உருவாக்கத்தை நோக்கி சென்று கொண்டிருக்கையில் நிறுவனத்தின் துணை நிறுவனமான லேண்ட் ரோவர் விற்பனை சரிவு மீண்டும் பிரச்சினையை உருவாக்கியிருக்கிறது.

இங்கிலாந்தின் லேண்ட் ரோவர் நிறுவனம், டாடா மோட்டார்ஸின் துணை நிறுவனமாகும். லேண்ட் ரோவர் துணை நிறுவனம் என்ற போதிலும் டாடா மோட்டார்ஸை பொறுத்த மட்டில் தங்க முட்டையிடும் வாத்து என்றால் அது மிகையல்ல. இப்போது லேண்ட் ரோவர் விற்பனை சரியத் தொடங்கியுள்ளது. இதன் தாக்கம் டாடா மோட்டார்ஸின் பங்குகளிலும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. தொடர்ந்து டாடா மோட்டார்ஸ் பங்குகள் சரிவை சந்தித்து வருகின்றன.

இங்கிலாந்தின் மிகப் பெரிய கார் உற்பத்தி நிறுவனமாக ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் திகழ்கிறது. இந்நிறுவனத்துக்கு இங்கு இரண்டு பெரிய உற்பத்தி ஆலைகள் உள்ளன.

ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் ஜாகுவார் விற்பனை சரியத் தொடங்கியுள்ளது. கடந்த நிதி ஆண்டில் ஜாகுவார் விற்பனை 26 சதவீதமும், லேண்ட் ரோவர் விற்பனை 20 சதவீதமும் சரிந்தது. இதனால் ஒரு ஆலையில் 1,000 ஊழியர்களை பணிக் குறைப்பு செய்வதாக நிறுவனம் அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான உடனேயே இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட டாடா மோட்டார்ஸ் பங்கு விலைகள் 5 சதவீத அளவுக்கு சரிந்தன.

ஜாகுவார் நிறுவனத்தில் 40 ஆயிரம் பணியாளர்கள் உள்ளனர். இந்நிறுவனம் ஆண்டுக்கு 5 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகத் திகழ்கிறது.

நிறுவனத்தின் சோலிஹுல் ஆலையில் ஆயிரம் தற்காலிக பணியாளர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப் போவதில்லை என அறிவித்தது. அதேபோல இந்த ஆலையில் பணியாற்றிய 362 நிரந்தர பணியாளர்களை வெஸ்ட் மிட்லேண்டில் உள்ள ஆலைக்கு மாற்றியுள்ளது.

டீசல் புகையளவு மாசைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை காரணமாக ஐரோப்பிய நாடுகளில் ஜாகுவார் விற்பனை சரிந்து வருகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் டீசல் கார் விற்பனை 37 சதவீத அளவுக்கு சரிந்துள்ளதாக நிறுவனம் தெரிவிக்கிறது.

ஜாகுவார் நிறுவனத் தயாரிப்பில் 90 சதவீதம் டீசல் வாகனங்களாகும். ஐரோப்பிய நாடுகளில் டீசல் கார்களுக்கான விற்பனை சரிந்து வரும் நிலையில் இந்நிறுவனத்தின் விற்பனை வரும் நாள்களில் மேலும் சரியும் என்றே வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தற்போது இங்கிலாந்தில் கார் நுகர்வு குறைந்துள்ளது. ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறியதால் ஏற்றுமதி வாய்ப்புகளும் குறையும்.

தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக வாகன விற்பனை அதிகரித்து வந்த நிலையில் கடந்த நிதி ஆண்டில் முதல் முறையாக ஜாகுவார் விற்பனை சரிவைச் சந்தித்துள்ளது. மூன்று ஆண்டுகளாக இரட்டை இலக்க வளர்ச்சியை சந்தித்து வந்த இந்நிறுவனத்துக்கு இப்போது ஏற்பட்டுள்ள சரிவானது, எதிர்வரும் நாட்களில் கடுமையான சவாலை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் விற்பனை 5 சதவீத அளவுக்கு குறைந்துள்ளது. வட அமெரிக்காவில் 24 சதவீதமாக இருந்த விற்பனை 5 சதவீத அளவுக்கு சரிந்துள்ளது. முந்தைய ஆண்டுகளில் வட அமெரிக்காவில் விற்பனை அதிகபட்சமாக 27 சதவீத அளவுக்கு உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் தற்காப்புக் கொள்கை காரணமாக இறக்குமதியாகும் கார்கள் மீது அதிக வரி விதிக்கப்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்நிலையில் ஜாகுவார் கார்களும் வரி விதிப்புக்குள்ளாகும் நிலையில் விற்பனை பாதிக்கப்படும்.

இப்போதைக்கு ஜாகுவார் விற்பனை வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள ஒரே நாடு சீனாதான். அங்கு வாய்ப்பு பிரகாசமாக இருந்தாலும், ஜாகுவார் காரை விரும்புவோர் அதிகமிருந்தாலும் அந்நாட்டு வளர்ச்சி விகிதம் குறைவாக இருப்பதால் விற்பனை அதிகரிப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளது.

ஆள்குறைப்பு நடவடிக்கை எடுத்ததன் மூலம் நிறுவனம் மிகப் பெரிய நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதை உணர்த்துகிறது. ஆட்டோமொபைல் துறையில் மிகப் பெரிய மாற்றம் நிகழ்ந்து வருகிறது. பெரும்பாலான நிறுவனங்கள் தற்போது பேட்டரி வாகன உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளன. அவ்வித மாற்றத்தை எதிர்கொள்ள இந்நிறுவனம் ஆராய்ச்சி திட்டங்களில் அதிக முதலீடு செய்ய வேண்டியிருக்கும். ஆனால் நிதி நிலை அதற்கு இடம் தருவதாக இல்லை என்றே தோன்றுகிறது.

ஒரு காலத்தில் நிறுவனத்தின் விற்பனை லாபம் 16 சதவீத அளவுக்கு இருந்தது. தற்போது 10 சதவீத அளவுக்கு குறைந்துவிட்டது. பிரெக்ஸிட்டால் அந்நியச் செலாவணி பரிவர்த்தனை இழப்பும் நிறுவனத்துக்கு மிகப் பெரிய நெருக்குதலை ஏற்படுத்தும். இதுவும் நிறுவன லாபத்தை வெகுவாக பாதிக்கிறது.

டாடா மோட்டார்ஸைப் பொறுத்தமட்டில் வர்த்தக வாகன விற்பனை வலுவாக உள்ளது. ஆனாலும் நிறுவனத்தின் ஒட்டுமொத்த லாபத்தில் 90 சதவீத பங்களிப்பு ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தினுடையது என்பதை மறுக்க முடியாது. இதனால் ஜாகுவார் நிறுவனத்தில் ஏற்படும் சிறு சரிவும் டாடா மோட்டார்ஸில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x