Published : 06 Apr 2018 12:17 PM
Last Updated : 06 Apr 2018 12:17 PM

குரு - சிஷ்யன்: அன்பானவர், அசராதவர்!

 

“ஐ

யா, நான் தமிழ் முதுகலை முடித்துள்ளேன். முனைவர் பட்டத்துக்கு நான் ஆராய்ச்சி செய்ய வேண்டும். தாங்கள் எனக்கு வழிகாட்ட முடியுமா?” என்று கேட்டுக்கொண்டு மெலிந்த உடல்வாகுள்ள இளைஞர் ஒருவர் பணிவாக என் முன் வந்து நின்றார். 1977-ல் திருவனந்தபுரம் கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் நான் தமிழ் விரிவுரையாளராக இருந்தபோது நடந்த நிகழ்வு இது.

“ஓ அப்படியா? நல்லது. உங்கள் பெயர் என்ன, உங்கள் படிப்புப் பின்னணி என்ன, உங்கள் ஆர்வம் எப்படிப்பட்டது? கொஞ்சம் சொல்லுங்கள்” என்று அந்த மாணவரிடம் நான் கேட்டேன்.

“என் பெயர் சுந்தர சோபிதராஜ். சொந்த ஊர் நாகர்கோவில். நான் பட்ட வகுப்பில் கற்ற தாவரவியல் அறிவைக் கொண்டு தமிழ் இலக்கியங்களை என் தமிழ் முனைவர் பட்டத்துக்கு ஆராய விரும்புகிறேன்...” என்று சொன்னார் அவர்.

“அண்மைக்காலமாகச் சங்க காலத் தாவரச் செய்திகள் பற்றிப் பலரும் எழுதி வருகிறார்கள். ஆனால் அதற்குப் பிந்தைய காலமாகிய பக்திக் கால இலக்கியச் செய்திகளையும் கல்வெட்டுச் செய்திகளையும் ஆதாரமாக்கித் தல விருட்சம் பற்றிய செய்திகளையும் சேர்த்து ஆராய்ந்தால், அக்கால கட்டத்தில் நிலவிய மரம், செடி, கொடி பற்றிய சுற்றுச்சூழல் செய்திகளையும் ஆழ்வார், நாயன்மார் பாடல்களில் அவை இடம்பெற்ற தன்மையையும் தாவரவியல் வரலாற்றையும் அறிந்துகொள்ள இயலும். நீங்கள் தாவரவியல் அறிவுள்ளதால் அதை அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்து சொல்ல முடியும். ஆனால், ஏட்டாய்வோடு கள ஆய்வும் செய்ய வேண்டியிருக்கும். உங்களால் அது இயலுமா?” என்றேன்.

முக மலர்ச்சியோடு,“நீங்கள் சொன்னவாறு செய்ய முடியும். இடம் தாருங்கள்” என்றார் அவர். உடனே எனக்கொரு சந்தேகம். “நீங்கள் கிறிஸ்தவர் போலத் தோன்றுகிறீர்கள். சைவ, வைணவக் கோயில்களுக்கெல்லாம் போக வேண்டியிருக்குமே” என்றேன்.

“அதற்கென்ன? நான் குறுகிய நோக்கம் உடையவன் அல்ல. தமிழ் இலக்கிய ஆராய்ச்சி என்பது இவற்றுக்கெல்லாம் தாண்டி நிற்கிற அறிவியல் துறைகள் தானே” என்று முதிர்ச்சியோடு பேசினார்.

அதன் பிறகு, ஆய்வு செய்ய வேண்டிய முறைகளுக்குத் தக்க அறிவுரைகளையும் செய்திகள் திரட்டும் செயல்திட்டத்தையும் அவரிடம் விளக்கிச் சொன்னேன். அவரும் அப்படியே செய்தார். தமிழ்த் துறை மரபுப்படி சோபிதராஜ் தன் ஆய்வுப் பணிகளை இரவு, பகலாக மேற்கொண்டார். ஒரு வினாநிரல் தயாரித்து ஏறத்தாழ 500-க்கும் மேற்பட்ட பாடல் பெற்ற தலங்களுக்கு நேரில் சென்று செய்திகள் சேகரித்தார். இந்த நேரத்தில் நான் மேற்கு ஜெர்மனி கொலோன் பல்கலைக்கழகத்துக்கு இரண்டாண்டுகள் செல்ல நேர்ந்தது. அக்கால இடைவேளைகளில் சோபிதராஜ் தன் ஆய்வுப் பணிகளைச் செய்து, எனக்கு அனுப்பித் திருத்தச் செய்து, ஆய்வை முழுமையாக்கிக் கொண்டிருந்தார். ஆய்வில் நன்கு முன்னேற்றமும் அடைந்திருந்தார்.

அமைதியான சுபாவம் கொண்டவர் சோபிதராஜ். தான் செய்யும் பணியில் அவர் காட்டும் ஆர்வம் மற்ற ஆய்வு மாணவர்களும் பின்பற்ற வைக்கும். எந்தப் பணியையும் முழு நிறைவோடும் சிறப்பான வெளிப்பாட்டோடும் செய்வார்.

நான் 1981-ல் மேற்கு ஜெர்மனியிலிருந்து திரும்பி வந்ததும், அவர் பணிகளைப் பார்த்து அவர் வரைவுகளைத் திருத்தினேன். அப்போது எனக்குள் தோன்றிய ஒரு எண்ணத்தை அவரிடம் பகிர்ந்துகொண்டேன்.

“தலவிருட்சங்கள் பற்றிய தல புராணச் செய்திகள், உள்ளூர் நாட்டார் வழக்காற்றியல் செய்திகள் போன்றவற்றையும் திரட்டி, அங்கு தொடர்புடையவர்களை நேர்காணல் செய்து இணைத்திருந்தால், இந்த ஆய்வு இன்னும் நன்றாக இருந்திருக்கும். ஆனால், நீங்கள் முன்பே கள ஆய்வை முடித்துப் பல செய்திகளைத் திரட்டியிருக்கிறீர்கள். மேலும், உங்களுக்குச் சுமையை ஏற்படுத்த விரும்பவில்லை. இதை ஒருவாறு வகைசெய்து கொடுப்போம். நான் சொல்பவற்றை அடுத்த நிலை ஆய்வுக்கு வைத்துக் கொள்ளலாம்” என்று சொன்னேன்.

உடனே சோபிதராஜ், “நீங்கள் சொல்லும் ஆலோசனைப்படியே செய்கிறேன்” என்று கிளம்பிவிட்டார். அப்படியே சென்று மீளாய்வு செய்து, அரும் பாடுபட்டு நல்லதோர் ஆய்வேட்டை உருவாக்கி, அனைவரும் பாராட்டும் படியாக முனைவர் பட்டமும் பெற்றார் சோபிதராஜ்.

அவர் கிறிஸ்தவராக இருந்தபோதும் சைவ, வைணவ பக்தி இலக்கியங்களை ஆழ்ந்து கற்று, அறிவியல் முறையில் அவர் ஆய்வை மேற்கொண்டார். பின்னர் ‘சோபிதம் பதிப்பகம்’ என்ற வெளியீட்டகம் வைத்து நடத்தினார். அதன் வழி என் நூல்களையும் வெளியிட்டார். பின் அவர் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் விரிவுரையாளராகச் சேர்ந்து பணியாற்றினார். தொடர்ந்து அத்துறை சார்ந்த அரிய நூல்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டுவந்தார்.

Nachimuthu Photo 2018 நாச்சிமுத்து

அவரது ஆய்வுக்கான ஆசிரியர் நான் என்பதையும் தாண்டி, நல்ல சகோதரனாக என்னிடம் பழகினார். ஆய்வுப் பணி முடிந்த பிறகும் என்னோடு தொடர்பில் இருந்தார். சிலர் அவர் திரட்டித் தந்த செய்திகளை அவர் பெயர் குறிப்பிடாமல் பயன்படுத்தினர். அப்போது அவர் அது மற்றவர்க்குப் பயன்படுகிறதே என்று மகிழ்ந்தாரே அன்றி, அது பற்றி வழக்குப் போட வேண்டும் என்று ஒரு நாளும் நினைக்கவில்லை.

மேலும், அவர் பணியாற்றிய கிறிஸ்தவக் கல்லூரியிலும் மாணவர்களுக்கு உதவும் ஆசிரியராக விளங்கினார். ஆசிரியர்களிடம் பணிவையும் மாணவர்களிடம் அன்பையும் காட்டிய அவர், உழைப்புக்கும் அலைச்சலுக்கும் அஞ்சாமல் அறிவைத் தேடினார். அவருடைய ஆராய்ச்சிகள் மூலம் பல பலன்கள் கிடைத்தன. ஆராய்ச்சியைப் பட்டம் வாங்குவதற்காகச் செய்யாமல் அறிவைத் தேடுவதற்காக சோபிதராஜ் செய்தார் என்பதே ஆசிரியனாகிய நான், மாணவராகிய அவர் மேல் பெருமிதம் கொள்ளக் காரணம். அவர் போன்ற ஆராய்ச்சியாளர்களை நாம் போற்ற வேண்டும்.

கட்டுரையாளர்: முதுநிலை ஆய்வர், பிரெஞ்சு ஆசியவியல் நிறுவனம், புதுச்சேரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x