Published : 23 May 2024 01:38 PM
Last Updated : 23 May 2024 01:38 PM

ராம்ப் வாக் சாயும் நண்பன் பார்த்தாவும்

(இன்ஸ்டகிராம் இன்ஃப்ளூயன்ஸர்)

சென்னையைச் சேர்ந்த சாய் சரண், இன்ஸ்டகிராம் பிரபலமாக இருக்கிறார். சாயும் அவரின் நண்பன் பார்த்தாவும் சேர்ந்து அடிக்கும் ஜாலியான லூட்டிக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். சாதாரணமாக வீடுகளில் செய்யக்கூடிய சமையல், வீட்டைச் சுத்தம் செய்தல், துணிகளை மடித்து வைத்தல், செடி வளர்த்தல், சைக்கிள் ஓட்டுதல் போன்ற வேலைகளைத்தான் சாயும் செய்கிறார். ஆனால், அதை சுவாரசியமாகப் பேசிக்கொண்டே, செய்வதுதான் சாய் சரணின் ஸ்பெஷல்.
பால்ட்வின் எஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்துவரும் சாய் சரணையும் பார்த்தாவையும் அவரது வீட்டில் சந்தித்தோம்.

பெரும்பாலும் பூனை, நாய் போன்றவற்றைத்தான் செல்லப் பிராணியாக வளர்ப்பார்கள். நீங்கள் ஏன் கோழிக்குஞ்சைத் தேர்ந்தெடுத்தீர்கள்?

ஒரு நாள் பள்ளியிலிருந்து வீட்டுக்கு வரும் வழியில் கோழிக் குஞ்சுகள் விற்பதைப் பார்த்தேன். உடனே எனக்கும் வளர்க்க வேண்டும் என்கிற ஆசை வந்துவிட்டது. வீட்டில் கேட்டேன், வாங்கிக் கொடுத்துவிட்டார்கள். நான் சொல்வதைப் புரிந்துகொள்ளும் வகையில் பார்த்தாவைப் பழக்கப்படுத்தி வைத்திருக்கிறேன். நான் சமைக்கும்போது, வேலை செய்யும்போது என் தோளில், தலையில் ஏறி அமர்ந்துகொள்வான். அவனுடன் பேசிக்கொண்டே வேலைகளைச் செய்வதுதான் எனக்கும் பிடித்திருக்கிறது. பார்ப்பவர்களுக்கும் சுவாரசியமாக இருக்கிறது.

சமைக்கும் ஆர்வம் எப்படி வந்தது சாய்?

என் அண்ணனும் அண்ணியும் பாஸ்தா தயாரிப்பதை வீடியோவாக எடுத்து, இன்ஸ்டகிராமில் வெளியிட்டனர். அந்த வீடியோ வைரலானது. என் அம்மாவும் அண்ணனும் நன்றாகச் சமைப்பார்கள். அதனால் எனக்கும் சமையலில் ஆர்வம் வந்துவிட்டது. முதல் முறை உருளைக்கிழங்கு பொரியல் செய்து கொடுத்தேன். அது சுவையாக இருப்பதாகச் சொன்னதால், சமையலைத் தொடர்ந்தேன். சில உணவு வகைகளுக்குத் தயாரிக்கும் முறையைச் சொல்வேன். சில உணவு வகைகளைச் சமைத்து மட்டும் காட்டுவேன். எதையும் இயல்பாகச் செய்வதுதான் என் பாணி. வெயிலில் வெளியே சென்றுவிட்டுத் திரும்பும் அம்மாவுக்கு ஜூஸ் செய்து கொடுப்பேன். வயிற்றுவலியால் அவதிப்படும் அண்ணிக்கு மோரும் பெருங்காயமும் கலந்து கொடுப்பேன். எனக்குப் பிடித்த உணவு வகை என்றால், அது அப்பள சமோசாதான். ஏனென்றால் அதை நானே உருவாக்கினேன்.

‘முந்திரி எந்திரி’ என்றெல்லாம் பேசுவதற்கு யார் கற்றுக்கொடுக்கிறார்கள் சாய்?

நான் பேசுவது எல்லாமே என் அண்ணன் பிரவீன் குமார்தான் எழுதிக் கொடுத்த ஸ்கிரிப்ட்தான். ஆனால், அதை எனக்கு ஏற்ற மாதிரி இயல்பாகவும் அதற்கேற்ற உடல்மொழியுடனும் பேசிவிடுவேன். நான் ஒன்றும் யாரும் செய்யாததைச் செய்யவில்லை. இயல்பாகவும் நகைச்சுவையுடனும் பேசுவது பலருக்கும் பிடித்திருக்கிறது. வீடியோ எடுப்பது, எடிட் செய்வது, இன்ஸ்டகிராமில் போடுவது எல்லாம் அண்ணன்தான். விழிப்புணர்வு வீடியோக்களையும் போடுகிறோம். புரொமோஷன் வீடியோக்களையும் போடுகிறோம்.

பார்த்தாவைப் பற்றிச் சொல்லுங்கள்.

என் வீடியோக்கள் வைரலாவதில் பார்த்தாவின் பங்கும் முக்கியமானது. அவனுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். நான் சொல்வதையும் குச்சியால் ஒலி எழுப்புவதையும் புரிந்துகொண்டு நடந்துகொள்வதில் அவனுக்கு இணை யாரும் இல்லை.

சாய் சரணின் பொழுதுபோக்கு என்ன?

ஓய்வு நேரத்தில் வீடியோ எடுப்பது மட்டுமன்றி குங்ஃபூ வகுப்புக்குச் செல்வேன். யூடியூப் பார்த்து வரைவதற்குக் கற்றுக்கொண்டிருக்கிறேன். பேட்மிண்டன், கேரம், கால்பந்து போன்ற விளையாட்டுகளின் மீதும் எனக்கு ஆர்வம் உண்டு.

உங்கள் வீடியோக்கள் மூலம் பார்ப்பவர்களுக்கு ஏதாவது பலன் உண்டா?

எல்லாரிடமும் அன்பாக இருக்க வேண்டும். ஆண் வேலை, பெண் வேலை என்று எதுவும் கிடையாது. எல்லாரும் எல்லாவற்றையும் செய்ய வேண்டும். சின்ன சின்ன பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். பெண்களின் கஷ்டத்தைப் புரிந்து நடந்துகொள்ள வேண்டும். வீட்டைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதை என் வீடியோக்களைப் பார்த்து உணர்ந்துகொள்ள முடியும். என்னைப் போல் சிறுவர்கள் இப்படி வீட்டில் வேலைகளைப் பகிர்ந்துகொண்டால் அதுவே எனக்கு வெற்றி.

- த. சந்தியா, மு. ரஷீதா சபுரா, ரா. நதியா
பயிற்சி இதழாளர்கள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x