

கோடைக்காலம் முடிந்தது. பாதை ஓரத்தில் நின்று கொண்டிருந்த மரங்களின் இலைகளில் செம்மண்புழுதி படிந்திருந்தது. கிராமத்திலிருந்து நகரத்தை நோக்கிப் பதினாறு காளை மாட்டு வண்டிகள் போய்க் கொண்டிருந்தன.
தூரத்திலிருந்து பார்க்கும்போது ஒரு ரயில் ஊர்ந்து போவதைப் போலத் தெரிந்தது. அனைத்து வண்டிகளிலும் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட தண்ணீர்ப்பழங்கள் (தர்பூசணி) நிறைந்திருந்தன.
வண்டிக்காரர்கள் உறங்கிக் கொண்டிருந்தார்கள். காளை மாடுகள் பழக்கம் காரணமாகப் பாதையிலேயே போய்க் கொண்டிருந்தன.
உச்சிப்பொழுது வந்தது. பாதைக்கு அருகில் நிழல் தரும் மரங்கள் இருந்தன. ஒரு கிணறும் ஒரு சுமை தாங்கியும் இருந்தன. வண்டிகள் தானாகவே நின்றுவிட்டன. வண்டிக்காரர்கள் மாட்டு வண்டியின் நுகத்தடியைக் கழற்றினார்கள்.
மாடுகளை அவிழ்த்து விட்டார்கள். அவை சற்று இளைப்பாறட்டும். கல் தொட்டியில் நீர் நிரம்பியிருந்தது. சில காளைகள் அந்தத் தண்ணீரைக் குடித்தன. சில காளைகள் பச்சைப் புற்களைக் கடித்துப் பார்த்தன. வேறு சில காளைகள் சும்மா நின்று கொண்டிருந்தன.
வண்டிக்காரர்கள் வேடிக்கைப் பேச்சுகளைப் பேசிக்கொண்டு ஓய்வெடுத்தனர். சற்று நேரம் கழிந்த பிறகு, இரண்டோ மூன்றோ தண்ணீர்ப்பழங்களை வெட்டி அவர்கள் பங்கு பிரித்துச் சாப்பிட்டனர். தாகமும் களைப்பும் தீர்ந்துவிட்டன.
அப்போது அங்கே வயதான ஒரு வழிப்போக்கர் வந்தார். அவர் புழுதி படிந்த பழைய ஆடையை உடுத்தியிருந்தார். கம்பை ஊன்றி நடந்துவந்தார். பாவம். மிகவும் களைத்துப் போயிருந்தார்.
“மக்களே, ஒரு துண்டு தண்ணீர்ப் பழத்தை இந்தத் தாத்தாவுக்குக் கொடுங்களேன். நாக்கும் தொண்டையும் வறண்டு போய் விட்டது. நீண்ட பயணம் செய்து வந்திருக்கிறேன்” என்று சொன்ன தாத்தா, எல்லாரையும் மாறி மாறிப் பார்த்தார்.
“இது எங்களுக்கே போதவில்லை. அப்புறம் எப்படி உங்களுக்குக் கொடுக்க முடியும்? எங்களுடைய முதலாளி கணக்காக எண்ணிக் கொடுத்து அனுப்பியிருக்கிறார். ஒன்று குறைந்தாலும் பதில் சொல்ல வேண்டும். வழியில் சாப்பிடுவதற்குக் கொடுத்தது நான்கு மட்டும்தான். உங்க ளுக்கு எப்படிக் கொடுக்க முடியும்?“
“ஒரு சிறிய துண்டு போதும்.”
“இல்லை” என்று ஒருவர் கோபமாகக் கத்தினார்.
எதுவும் பேசாமல் தாத்தா தன் கையிலிருந்த கம்பை வைத்து ஒரு குழி தோண்டினார். கல் தொட்டியி லிருந்து தண்ணீரை எடுத்து ஊற்றி னார். வண்டிக்காரர்கள் தூக்கி எறிந்த தண்ணீர்ப்பழத்தின் விதைகளை நட்டு வைத்தார். இதை எல்லாம் வண்டிக் காரர்கள் கேலியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“இப்போது பாருங்கள்“ என்றார் தாத்தா.
என்ன அற்புதம்!
ஊன்றி வைத்த விதையிலிருந்து முளை எட்டிப் பார்த்தது. கொடி படர்ந்தது. இலைகள் விரிந்தன. கொடி முழுவதும் பூக்களால் நிறைந்தது. காய் களும் உருவாகின. தண்ணீர்ப்பழம் பக்குவமாகப் பழுத்தது. தாத்தா அதில் ஒன்றைப் பறித்துச் சாப்பிட்டார். பிறகு வண்டிக்காரர்களுக்கும் வழிப்போக்கர்களுக்கும் தாராளமாகப் பறித்துக் கொடுத்தார்.
எல்லாரும் சாப்பிட்டனர்.
“ஆஹா! இப்படி ஒரு சுவையில் நாங்கள் தண்ணீர்ப்பழத்தைச் சுவைத்ததில்லை” என்றார்கள்.
“நான் வருகிறேன், மக்களே” என்று தாத்தா விடைபெற்றார்.
வண்டிக்காரர்கள் ஆச்சரியத்தில் அப்படியே நின்றார்கள். பிறகு பயணத்துக்குத் தயாரானார்கள். காளைகளை வண்டியில் பூட்டி னார்கள். அவர்களும் ஏறினார்கள்.
ஐயோ… ஒரு வண்டியிலும் ஒரு தண்ணீர்ப்பழம்கூட இல்லை. தாத்தா நட்டு வளர்த்த தண்ணீர்ப் பழக் கொடியும் சட்டென்று மறைந்து விட்டது. தாத்தாவையும் காணோம்!