

‘I am a tech savvy’ என்று எனக்குத் தெரிந்த ஒருவர், தன்னைப் பற்றிப் பெருமையாகக் கூறிக்கொண்டார். இது குறித்து நீங்கள் விளக்க முடியுமா? - அவரைப் பற்றி அறியாததால், அவர் அப்படியா என்பதை என்னால் விளக்க முடியாது. எனவே, ‘tech savvy’ குறித்துப் பார்ப்போம். ‘Savvy’ என்றால் நடைமுறைகளை நன்கு புரிந்து வைத்திருப்பது. அதாவது, சுற்றிலும் நடப்பவற்றைக் குறித்த விவரங்களைத் தெரிந்து வைத்திருந்து, சரியான முடிவுகளை எடுக்கும் தன்மையைக் கொள்வது.
‘Teenagers are savvy about digital information.’ எந்தப் பிரிவில் சிறப்பு இருக்கிறது என்பதைப் பொறுத்து ‘political savvy’, ‘tech savvy’ என்று குறிப்பிடப்படுகிறார்கள். ‘Tech savvy’ என்றால் தொழில்நுட்ப விஷயங்களில் (குறிப்பாகக் கணினி தொடர்பானவை) மிகவும் தேர்ச்சி பெற்றவர் என்று பொருள்.
மேடையில் ஒருவர் பாடுகிறார். எதிரில் அவர் பாட வேண்டிய வரிகள் திரையில் அடுத்தடுத்து தோன்றுகிறது. அதேநேரம் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டிருந்த இசை, தேவைப்படும் இடத்தில் ஒலிக்கிறது. இதை ‘கரோகே’ என்கிறார்கள். இது ஆங்கிலச் சொல்லா? இதன் உண்மையான பொருள் என்ன? - ‘Karaoke’ என்பதை ‘காரியோகே’ என்று உச்சரிக்க வேண்டும். இது ஜப்பானிய மொழியிலிருந்து பிறந்த சொல். இதற்குப் பொருள் ‘மெளனமாக்கப்பட்ட இசைக்கருவிகள்’ அல்லது 'வெற்று இசைக்கருவிகள்’. அதாவது, இசைக் கருவிகள் உடனில்லாமல் பாடுதல் ‘காரியோகே’. இதற்கு இசைக்கலைஞர்களுடன் முன்னரே ஒத்திகைப் பார்க்கத் தேவையில்லை.
‘காரியோகே’வில் வார்த்தைகள் திரையில் தோன்றும் வேகத்துக்குப் பாட வேண்டும். இதனால் சரியான தாளத்துக்குப் பாட முடியும். அதிகப் பாடல்கள் என்று இல்லாமல் நமக்கு மிகவும் பரிச்சயமான ஓரிரு பாடல்களோடு நிகழ்ச்சியை நிறுத்திக்கொள்ள முடியும். இப்படிப் பல நன்மைகள் இருப்பதால் ‘காரியோகே’ பிரபலமாகி வருகிறது.
‘Facelift’ என்பது ஒப்பனையைக் குறிக்கிறதா? - தொடக்கத்தில் இது ஒரு மருத்துவ அறுவை சிகிச்சையைக் குறித்தது. தொளதொளவென இருக்கும் தோலை இறுக்கமாக்கும் அறுவை சிகிச்சை. இதன் காரணமாக இளமைத் தோற்றம் உருவானது. அறுவைசிகிச்சை மட்டுமல்லாமல் பிறவற்றுக்குப் புதுப்பொலிவு தருவதைக் குறிக்கவும் ‘facelift’ என்கிற சொல் பயன்படுத்தப்படுகிறது. ‘The building was given a new facelift.’ ‘The company decided to have a complete facelift.’
சீட்டுக்கட்டில் ‘clover’ என்றொரு பிரிவு இருக்கிறதா? - ‘Diamond’, ‘Hearts’, ‘Spade’ ஆகிய வற்றோடு நான்காவது பிரிவு ‘clover’ என்றழைக்கப்படுகிறது. ஆனால், இப்போ தெல்லாம் அதை ‘clubs’ என்றுதான் குறிப்பிடு கிறார்கள்.
உங்களுக்குத் தெரியுமா? ‘Clover’ என்றொரு தாவரம் உண்டு. கண்ணைப் பறிக்கும் பசுமையான இலைகளும் வெள்ளை அல்லது பழுப்பு நிற மலர்களுமாக அது காட்சித் தரும். ‘Clover’ இலை மூன்று, நான்கு பகுதிகளாகப் பிரிந்திருக்கும்.
‘Clubs’ வகை சீட்டுக் கட்டில் அப்படி ஒரு வடி வத்தைக் காணலாம். சீட்டுக்கட்டு தொகுதியை ‘deck’ என்பர்கள். இதில் வகைக்கு 13 என்று மொத்தம் 4 வகைகளில் 52 சீட்டுகள் இருக்கும். ஜோக்கர்கள் தனி.
பெரும் சோகத்தில் இருந்தும் சிலர் விரைவில் மீண்டு வருகிறார்கள். இந்தத் தன்மையை எப்படிக் கூறலாம்? - சோதனைக் கட்டத்தை விரைவில் தாண்டிவிடும் மனஉறுதி சிலருக்கு உண்டு. அதுபோல சில பொருள்களை வளைத்தாலும் மீண்டும் பழைய உருவத்துக்கு திரும்பும் ‘எலாஸ்டிக்’ தன்மை அவற் றுக்கு இருக்கும். இப்படி மீண்டு வரும் தன்மையை ‘resilience’ (ரெஸிலியன்ஸ்) என்பார்கள்.
கடந்த வாரம் ‘epigram’, ‘epitaph’ ஆகியவற்றைத் தொடர்ந்து, இந்த வாரம் ‘epigraph’ பற்றிய விளக்கத்தைப் பார்ப்போம். ‘எபிகிராப்’ என்பது ஒரு புத்தகத்தின் தொடக்கத்தில் காணப்படும் மேற்கோள். முடிவுரையில் குறிக்கும் ‘epilogue’ என்பதற்கு நேரெதிரானது. மரியோ புஸோ எழுதிய ‘The Godfather’ என்கிற நூலின் ‘எபிகிராப்’ இது - ‘Behind every great fortune, there is a crime’ – Balzac. ஹார்ப்பர் லீ எழுதிய ‘To Kill a Mockingbird’ என்கிற நூலின் ‘எபிகிராப்’ இது - ‘Lawyers, I suppose, were children once’ - Charles Lamb.
சி|ப்|ஸ்
‘Grapple’ என்றால்? - போராடுவது - மனதளவில்கூட.
‘Heedless drive’ என்பது என்ன? - பொறுப்பில்லாமல் வண்டி ஓட்டுவது.
மெலிதான குரல் என்பதை ஆங்கிலத்தில் எப்படிக் கூறலாம்? - ‘Feeble voice.’
- aruncharanya@gmail.com