Last Updated : 08 Apr, 2018 09:56 AM

 

Published : 08 Apr 2018 09:56 AM
Last Updated : 08 Apr 2018 09:56 AM

பக்கத்து வீடு: கல்விப் பணிக்குக் கிடைத்த அங்கீகாரம்

மைதிக்கான நோபல் பரிசு பெற்ற தலாய் லாமாவைப் பற்றி அறியாதவர்கள் குறைவு. ஆனால், அவருடைய தங்கை ஜெட்சன் பெமா, மகளிர் தினமான மார்ச் 8 அன்று மத்திய அரசிடமிருந்து ‘நாரி சக்தி புரஸ்கார்’ எனும் உயரிய விருதைப் பெற்றிருப்பதை அறிந்தவர்கள் வெகு சிலரே.

திபெத்திலிருந்து அகதியாக வந்த குழந்தைகளில் பலர் இன்று யாருடைய தயவுமின்றி இந்தியாவில் தலைநிமிர்ந்து வாழ்வதற்குக் காரணமாக இருப்பதன் மூலம் தலாய் லாமாவின் தங்கை என்ற அடையாளத்தை மீறித் தனக்கெனத் தனி அடையாளத்தை உருவாக்கிக்கொண்டவர் ஜெட்சன் பெமா.

எதிர்பாராத ஆசிரமப் பணி

தலாய் லாமாவுடன் 1959-ல் தர்மசாலாவுக்கு அடைக்கலம் தேடி வந்த ஜெட்சன் பெமா, டார்ஜிலிங்கில் உள்ள லோரிட்டோ பள்ளியிலும் கலிம்போங் நகரில் உள்ள புனித ஜோசப் கான்வென்ட்டிலும் படித்தார். சுவிட்சர்லாந்திலும் இங்கிலாந்திலும் மேற்படிப்பை முடித்தார். பிறகு திபெத்தின் விடுதலைக்காக தலாய் லாமாவின் அலுவலகத்தில் பணியாற்றத் திட்டமிட்டிருந்தார். ஆனால், அவரது திட்டம் ஈடேறவில்லை. 1964-ல் பெமா இந்தியா திரும்பியபோது, அவருடைய அக்கா உடல்நலம் குன்றியிருந்தார். அவர், குலு பள்ளத்தாக்குப் பகுதியில் பத்லிகுல் என்ற இடத்தில் தலாய் லாமா அமைத்திருந்த ஆசிரமத்தை நிர்வகித்துவந்தார். அந்த ஆசிரமம், இந்தியாவில் தஞ்சம் புகும் திபெத்திய குழந்தைகளுக்கு உணவளித்து, அடிப்படைக் கல்வியை வழங்கிவந்தது. அக்கா நோயுற்ற காரணத்தால் அங்குள்ள ஆதரவற்ற குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு பெமாவைத் தேடிவந்தது. பெமாவின் வருகைக்குப் பின்னர் அந்த ஆசிரமம் சிறிது சிறிதாக மாற்றமும் வளர்ச்சியும் பெற்றது.

கல்வித் தொண்டு

எட்டு வயதுவரை மட்டுமே அங்கே கல்வி பயில முடியும். அதற்குப் பிறகு இந்திய அரசால் உருவாக்கப்பட்ட உண்டு உறைவிடப் பள்ளியில் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். ஆனால், அங்கே கடுமையான இடப்பற்றாக்குறையால் திபெத்திய குழந்தைகள் மிகவும் அவதிப்பட்டனர். இதனால், தலாய் லாமா உருவாக்கியிருந்த ஆசிரமத்தையே முழுமையான பள்ளியாகத் தரம் உயர்த்தினார் பெமா. வெளிநாடுகளில் பயின்ற அனுபவமும் சர்வதேச நண்பர்களின் உதவியும் அவருக்குக் கைகொடுத்தன. உலகெங்கும் இருந்து நன்கொடைகளைப் பெற்று திபெத்திய குழந்தைகள் கிராமத்தை (Tibet Children Village) உருவாக்கினார். 1972-ல் வியன்னாவைச் சேர்ந்த அரசுசாரா தொண்டு நிறுவனத்தின் உதவி மூலம் திபெத்திய குழந்தைகள் கிராமத்துக்கு இந்தியாவின் அங்கீகாரத்தையும் பெமா பெற்றார்.

இதனால், பத்லிகுல் பகுதியில் இருந்த அந்தப் பள்ளியின் நிலைமை ஓரளவு சீரடைந்தது. இருப்பினும், இந்தியா முழுவதும் வெவ்வேறு பகுதிகளில் திபெத்திலிருந்து அகதிகளாக வந்த குழந்தைகளின் நிலை மிகவும் மோசமாகவே இருந்தது. தலாய் லாமாவின் யோசனையின் பேரில், இமாச்சலப் பிரதேசத்தில் மட்டுமின்றி லடாக் (1975), கர்நாடகாவின் பைலாகுப்பே (1980) பகுதிகளில் திபெத்திய குழந்தைகள் கிராமத்தின் கிளைகளை பெமா நிறுவினார்.

இந்த இரண்டு கிளைகளும் தற்போது பல ஆயிரம் திபெத்திய குழந்தைகளுக்குக் கல்வி பயிற்றுவிக்கும் சிறந்த உண்டு உறைவிடப் பள்ளிகளாக வளர்ந்துவிட்டன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் திபெத் குழந்தைகள் கிராமத்துக்குத் தற்போது எட்டுக் கிளைகள் இருந்தும் அவை அனைத்தும் திபெத்திய குழந்தைகளால் நிரம்பி வழிகின்றன. இன்றளவும் திபெத்திலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வருவதுதான் இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. ஆனால், இதற்கெல்லாம் மனம் தளராத பெமா, எத்தனை குழந்தைகள் திபெத்திலிருந்து வந்தாலும் அவர்களை அரவணைத்துக்கொள்கிறார்.

இடப் பற்றாக்குறையைச் சமாளிக்க அவர் எடுத்த நடவடிக்கைகள் சற்றே வித்தியாசமானவை; விசித்திரமானவையும்கூட. உதாரணமாக குழந்தைகளின் எண்ணிக்கை கருதி தர்மசாலாவில் உள்ள கால்நடைகள் வளர்க்கும் பகுதியைக் பள்ளியாக மாற்றினார். தற்போது அந்த இடத்தில்தான் ஆரம்ப, நடுநிலை கல்வி கற்பிக்கப்பட்டுவருகிறது. அரசு உதவியுடன் இந்தப் பள்ளிகள் நடத்தப்படுவதால், அங்குள்ள இந்தியக் குழந்தைகளுக்கும் கல்வியளிக்கப்படுகிறது.

சாதனைப் பயணம்

திபெத் குழந்தைகள் கிராமத்தில் கல்வி பயின்று தற்போது மும்பையில் சொந்தமாக உணவகம் நடத்திவரும் வாங்சுக் என்பவர், “சிறு வயதில் திபெத்திய குழந்தைகள் கிராமத்தில் கல்வி பயின்றது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய வரம். அடிப்படைக் கல்வியையும் வாழ்வின் அர்த்தத்தையும் நான் அங்குதான் உணர்ந்து கொண்டேன். வாழ்வில் எத்தனை பெரிய உயரத்துக்குச் சென்றாலும் நான் அங்கே கற்ற மனிதநேயம் என்னைவிட்டு ஒருபோதும் அகலாது” என்று சொல்கிறார்.

பள்ளிகள் மட்டுமின்றி இளைஞர்களுக்கான விடுதி, தொழிற்பயிற்சிக் கூடங்கள், ஒரு கல்லூரி ஆகியவையும் திபெத்திய குழந்தைகள் கிராமத்தில் உண்டு. சுமார் 42 ஆண்டுகள் அர்ப்பணிப்பு உணர்வுடன் திபெத் குழந்தைகள் கிராமத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த பெமா, கடந்த 2006 ஆகஸ்ட் மாதம் அதிலிருந்து விலகினார். இந்தியாவாழ் திபெத்திய அகதிகளுக்குக் கல்விச் சுடராக விளங்கிய பெமாவால் 52 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் சரிபாதியினர் இந்தியக் குழந்தைகள்!

பல்வேறு தடைகளைத் தாண்டி வெற்றிநடை போட்ட ஜெட்சன் பெமா, திருமண வாழ்விலும் திபெத்திய பெண்களிடமிருந்து சற்றே வித்தியாசப்பட்டார். முதல் கணவர் கார் விபத்தில் இறந்த பிறகு திபெத்திய வழக்கப்படி கன்னியாஸ்திரீயாக மாறவில்லை. மாறாக, தன் சகோதரர் தலாய் லாமாவுடன் இணைந்து பணியாற்றும் டெம்பா என்ற திபெத்தியரை மறுமணம் செய்துகொண்டு இரண்டு குழந்தைகளையும் பெற்று வளர்த்தார். திபெத்திய குழந்தைகள் கல்வியறிவு பெற உழைத்த, தன்னலமற்ற பெண் பெமாவுக்கு, மத்திய அரசு விருது கொடுத்து கவுரவித்ததில் வியப்பேதுமில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x