Last Updated : 18 Apr, 2018 09:46 AM

 

Published : 18 Apr 2018 09:46 AM
Last Updated : 18 Apr 2018 09:46 AM

உடல் எனும் இயந்திரம் 19: காது கேட்கும் ரகசியம்!

 

கா

க்ளியா முன்பக்கமாக நடுக்காதின் அங்கவடி எலும்புடனும் பின்பக்கத்தில் மூளையிலிருந்து காதுக்கு வரும் செவிநரம்புடனும் இணைந்துள்ளது. இது வெளிப்பக்கம் பார்ப்பதற்கு ஒரு நத்தை ஓடுபோலிருக்கிறது. உள்ளுக்குள் பார்த்தால், திரவத்தால் நிரப்பப்பட்ட ஒரு சுருள் குழாயாக இருக்கிறது. அரைவட்டக் குழல்களில் இருந்தவைபோல் இங்கும் பெரிலிம்ப், எண்டோலிம்ப் திரவங்கள் உள்ளன. இரண்டுக்கும் இடையில் ‘அடிப்படலம்’ (Basilar membrane) உள்ளது. இதில் ‘கார்ட்டி உறுப்பு’ (Organ of Corti) உள்ளது. காக்ளியாவில் கேட்கும் சக்தி கொண்ட பகுதி இதுதான். இங்கு 20,000-க்கும் மேற்பட்ட இழை அணுக்கள் (Hair cells) இருக்கின்றன. இவைதான் காக்ளியாவை செவிநரம்பு மூலம் மூளையுடன் இணைக்கின்றன.

காது கேட்பது எப்படி?

ஒலி எழும்பும்போது அதன் ஒலி அலைகள் செவிக்குழல் வழியாக நுழைந்து செவிப்பறையில் மோதும். அப்போது செவிப்பறை அதிரும். இந்த அதிர்வுகள் செவிப்பறையை ஒட்டியுள்ள சுத்தி, பட்டை, அங்கவடி எலும்புகள் மூலம் உள்காதுக்குள் நுழையும். அப்போது இந்த எலும்புகளும் அதிரும். விநாடிக்கு 20,000 முறை அதிர்ந்து ஒலியின் அளவைப் பெருக்குகின்ற ஒலி பெருக்கிகள் இவையே.

அடுத்ததாக, இந்த ஒலி அதிர்வுகள் காக்ளியாவின் முன்பகுதியான நீள்வட்டச் சன்னலை அடைகின்றன. இந்தச் சன்னலுக்குப் பின்னால்தான் பெரிலிம்ப், எண்டோலிம்ப் திரவங்கள் உள்ளன. இவற்றில் எண்டோலிம்ப் திரவத்தின்மீது அதிர்வுகள் கடத்தப்படுகின்றன. அப்போது இந்தத் திரவங்களில் மிதந்து கொண்டிருக்கும் இழை அணுக்கள் தூண்டப்படுகின்றன. உடனே, அங்கு மின்னலைகள் உருவாகி, செவிநரம்பு வழியாக மூளைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. அங்கு அவை இனம் பிரிக்கப்பட்டு, நாம் கேட்பது பேச்சா, பாட்டா, இசையா, இரைச்சலா என்பதை மூளை சொல்கிறது.

ஒரு பொருள் அதிர்வதால் ஒலி அலைகள் உண்டாகின்றன. பொதுவாக, 20 Hz லிருந்து 20000 Hz வரையிலான ஒலி அதிர்வுகளை நம்மால் கேட்க முடியும். அதிர்வு எண்ணிக்கை அதிகமானால், சத்தம் குறையும்; குறைவான எண்ணிக்கை என்றால், சத்தம் பலமாக இருக்கும். வழக்கத்தில் ஒலியின் அளவை டெசிபல் முறையில் அளக்கிறார்கள். உதாரணமாக, சிறிய விசும்பல் 20 டெசிபல். முணுமுணுப்பு 30 டெசிபல். உரையாடல் 60 டெசிபல். இடிச்சத்தம் 120 டெசிபல். ஜெட் விமானச் சத்தம் 130 டெசிபல். வெடிச்சத்தம் 140 டெசிபல். ராக்கெட் புறப்படும்போது 200 டெசிபல்.

80-லிருந்து 120 டெசிபல்வரை ஒலி நம் காதுக்குள் நுழைந்தால் பிரச்சினை இல்லை. இது 130 டெசிபல் அளவைக் கடந்துவிட்டால் காது கேட்பதைப் பாதிக்கும். அதனால்தான் சத்தமாகப் பேசாதீர்கள்; அதிக சத்தமுள்ள இடங்களுக்குச் செல்லாதீர்கள் என்கிறார்கள்.

நீலத்திமிங்கிலம் எழுப்பும் சத்தம்தான் விலங்குகளிலேயே மிகவும் பலமானது; 188 டெசிபல். வவ்வால், அந்துப்பூச்சி (Wax Moth) யானை, ஆந்தை, நாய், பூனை, புறா, எலி, டால்பின், குதிரை ஆகியவை மெல்லிய சத்தத்தையும் கேட்கும் திறனுடையவை.

செவிப்புலன் அமைப்பு உயிரினத்தைப் பொறுத்து மாறுகிறது. மனிதன் உள்ளிட்டப் பாலூட்டிகளுக்கு மட்டுமே செவிமடல் உண்டு. தவளைக்குச் செவிமடல் இல்லை; கண்ணுக்குப் பின்னால் செவிப்பறை மட்டும் உள்ளது. மீன்களுக்குச் செவிமடலும் இல்லை; செவிப்பறையும் இல்லை; உள்காது மட்டுமே இருக்கிறது. பாம்புக்குச் செவிப்பறை இல்லை.

காது ஏன் கேட்பதில்லை?

காது கேட்கவில்லை என்றால் அதற்குக் காரணம் இரண்டு இடங்களில் ஏற்படலாம். ஒன்று, நடுக்காது, மற்றொன்று, உள்காது. நடுக்காதில் நீர் கோத்துக்கொண்டிருந்தால், அடிக்கடி தொற்று ஏற்பட்டால், காதில் சீழ் வடிந்தால், அங்கு அழற்சி ஏற்பட்டு, எலும்புகள் ஒன்றோடொன்று ஒட்டி உறைந்துவிடும். அவற்றால் அசைய முடியாது. அப்போது சத்தத்தின் அதிர்வுகளை அவை கடத்த முடியாது. இதனால், சரியாகக் காது கேட்காது. இந்த நிலைமையைச் சரி செய்துவிடலாம்.

சில குழந்தைகளுக்கு உள்காதில் பிறவியிலேயே இழை அணுக்கள் இருக்காது. இதனால் காது கேட்காது. இவர்களுக்கு 'காக்ளியர் இம்பிளான்ட்' எனும் கருவியைப் பொருத்தும் நவீன சிகிச்சை கைகொடுக்கிறது. வளர்ச்சிப் பருவத்தில் ஏற்படும் சில நோய்கள், எடுத்துக்கொள்ளும் மருந்துகள், முதுமை, அதிக இரைச்சல் போன்ற காரணங்களால் இழை அணுக்கள் அழிந்துபோக வாய்ப்புள்ளது. செவிநரம்பிலும் பாதிப்பு இருக்கலாம். அப்போதும் காது கேட்காது.

காது குடைவது நல்லதா?

குழந்தைகளுக்குக் காதில் சேரும் குரும்பிதான் அதிகம் தொல்லை தரும். வழக்கத்தில், அது தானாகவே வெளியில் வந்துவிடும். ஆனால், நடைமுறையில் பட்ஸ் கொண்டு அதை எடுக்க முயல்கிறோம். இதனால், செவிப்பறை புண்ணாகிவிடும். இன்னும் பலருக்குக் காது குடைவது ஒரு பழக்கமாகவே உள்ளது. ஊக்கு, ஹேர்பின், பேனா, பென்சில், தீக்குச்சி, சாவி என்று கையில் கிடைப்பதை எல்லாம் காதுக்குள் நுழைத்துக் குடைந்து கொண்டிருப்பார்கள். இந்தப் பழக்கம் நீடித்தால், செவிப்பறை பழுதடைந்து, காது கேட்காமல் போகும்.

குரும்பியை அகற்றுவது எப்படி?

குரும்பியை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுமானால், மூன்று வழிகளில் அகற்றலாம். நம் கண்ணுக்கு எளிதில் தெரியும்படி உருண்டையாகத் திரண்டிருக்கும் குரும்பியை ஊக்கு கொண்டு அகற்றிவிடலாம். சிலருக்குக் காதின் உள்புறமாகக் குரும்பி ஒட்டிக்கொண்டிருக்கும். இவர்களின் காதில் இதற்கென உள்ள காது சொட்டு மருந்து அல்லது தேங்காய் எண்ணெய் சில சொட்டுகள் விட்டால், குரும்பி அதில் ஊறி, தானாகவே வெளியில் வந்துவிடும். என்றாலும், நாள்பட்ட குரும்பி இந்த வழியில் வராது. இதற்கு மருத்துவர்தான் உதவ வேண்டும்.

(இன்னும் அறிவோம்)

கட்டுரையாளர்,

பொதுநல மருத்துவர்.

தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x