Published : 09 Apr 2018 11:21 AM
Last Updated : 09 Apr 2018 11:21 AM

வான் மண் பெண் 50: உழவுக்கு எழுச்சியூட்டிய இருவர்

 

ங்கெல்லாம் விவசாயப் போராட்டங்கள் நடைபெற்றனவோ அங்கெல்லாம், ‘உழுபவருக்கே நிலம் சொந்தம். உழைப்பவருக்கே கனிகள் சொந்தம்’ எனும் கோஷம் ஓங்கி ஒலித்த வரலாறு இந்தியாவில் உண்டு. குறிப்பாக, மேற்கு வங்கத்தில் அந்த கோஷம் மாபெரும் இயக்கங்கள் உருவாகக் காரணமாக இருந்தது.

பஞ்சம் என்றால் என்ன, பசி என்றால் என்ன என்பதெல்லாம் நாட்டின் இதர மாநிலங்களில் உள்ள மக்களைக் காட்டிலும் மேற்கு வங்க மக்களுக்கு நன்றாகத் தெரியும். நாடு விடுதலை பெறுவதற்கு முன்பு இன்றைய வங்கதேசமும் மேற்கு வங்கமும் ஒன்றிணைந்து, ஒருங்கே ‘வங்கம்’ என்று அழைக்கப்பட்டுவந்தது.

1943-ல் உலக அளவிலும் இந்திய அளவிலும் மிக முக்கியமான நிகழ்வுகள் அரங்கேறின. இரண்டாம் உலகப் போர், உச்ச நிலையை அடைந்திருந்தது. காலனி ஆதிக்க வெறி பிடித்த வெள்ளையர்களின் தவறான கொள்கைகளால் வங்கத்தில் உணவுப் பஞ்சம் நிலவியது. ஒரு பக்கம் மக்கள் தொகை அதிகரிக்க, இன்னொரு பக்கம் விவசாய நிலம் குறிப்பிட்ட சிலரிடம் மட்டும் அதிக அளவில் சேர்ந்துவந்தது.

08chnvk_ilamitra.JPG இலா மித்ராமனிதர்களால் உருவாக்கப்பட்ட பஞ்சம்

வங்கம், விவசாய பூமி. அங்கு இயற்கை வளமும் அதிகம். ஆனால், ஒரு கட்டத்தில் இயற்கை வளம் அழிக்கப்பட்டு, அந்த நிலங்கள் விவசாயத்துக்காக விரிவுபடுத்தப்பட்டன. இதன் நேரடி விளைவு பல ஏக்கர் நிலம் மலடானது. அந்த நிலத்தின் உரிமையாளர்களான சிறு விவசாயிகள், குறிப்பிட்ட சிலரிடம் கடன் வாங்கி விவசாயம் செய்தனர். கடன் அதிகமாக, வேறு வழியின்றி நிலத்தைத் தங்களுக்குக் கடன் கொடுத்தவர்களிடமே விற்க வேண்டியதாயிற்று.

இன்னொரு பக்கம், உலகப் போரில் ஈடுபட்டிருந்த காலனி ராணுவத்தின் செலவுகளுக்காக நல்ல முறையில் விவசாயம் செய்யப்பட்டுவந்த நிலங்களும் ஆங்கிலேய அதிகாரிகளால் அபகரிக்கப்பட்டன. இந்தக் காரணங்களால் அரிசி உற்பத்தி குறையத் தொடங்கியது. கையிருப்பில் இருந்த அரிசியை ராணுவம், அரசு அதிகாரிகள் மற்றும் சில மேட்டுக்குடி மக்கள் என்று தரம் பிரித்து வழங்கியது ஆங்கிலேய அரசு. இதனால், பொது மக்களுக்கு அரிசி இல்லாமல் போனது. பட்டினிக்குத் தள்ளப்பட்டார்கள். மரணங்கள் அதிகரித்தன. வரலாற்றின் கறுப்புப் பக்கங்களாக வங்கத்தின் அந்தப் பஞ்சம் நிலைபெற்றுவிட்டது.

காலனி ஆதிக்க அரசின் கொள்கைகளால்தான் இந்தப் பஞ்சம் ஏற்பட்டது என்பதால் இது மனிதரால் உருவாக்கப்பட்ட பஞ்சம் என்றும் அழைக்கப்படுகிறது.

மூன்றில் இரண்டு பங்கு

மூன்று ஆண்டுகள் கழித்து, நிலைமை சற்று சீரடையத் தொடங்கியது. அப்போது சில நிலச்சுவான்தார்கள் தங்களிடம் இருந்த நிலங்களை ஏழை, எளியவர்களுக்கு குத்தகைக்கு விட்டனர். கிடைக்கிற அறுவடையில் விவசாயக் கூலிகள் பாதியும் நிலச்சுவான்தார் பாதியும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது எழுதப்படாத விதி. ஆனால், பல இடங்களில் இது முறையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை. அறுவடையின் பலன் முழுவதையும் நிலச்சுவான்தார்களே எடுத்துக்கொண்டு, உழுதவர்களுக்குக் கிள்ளிக் கொடுத்தார்கள்.

இப்படி இருந்தால் மீண்டும் பஞ்சத்தைச் சந்திக்கக்கூடும்; அது போன்ற நிலை மீண்டும் வரக் கூடாது என்ற எண்ணத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஓர் அங்கமாக இருந்த ‘கிஸான் சபா’ (விவசாயிகள் சங்கம்), நிலங்களில் மேற்கொள்ளப்படும் அறுவடையில் மூன்றில் இரண்டு பங்கு (வங்க மொழியில் ‘தெபாகா’) உரிமை கோரிப் போராடலாம் என முடிவெடுத்தது.

1946 நவம்பர் மாதம் ‘தெபாகா இயக்கம்’ தோன்றியது. தொடக்கத்தில் வடக்கு வங்கத்தில் பற்றிய இந்தப் போராட்ட நெருப்பு பின்னர் வங்கம் முழுவதும் பரவியது. சுமார் 60 லட்சம் பேர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டதாக ஒரு குறிப்பு தெரிவிக்கிறது. அதில் பெரும்பாலோர் பெண்கள் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. நிலமிழந்த பெண்களும் விவசாயக் கூலிப் பெண்களும் ஆயுதமேந்தி ‘நாரி வாஹினி’ (பெண்கள் வாகனம்) என்ற குழுவை உருவாக்கி, போராட்டத்தில் முன்னணியில் நின்றார்கள்.

08chnvk_vimala.JPG விமலா மாஜிrightஇரு பெண்கள்

இந்தப் போராட்டம் மாபெரும் வெற்றியடைய இலா மித்ரா, விமலா மாஜி ஆகிய இரு பெண்கள் முக்கியக் காரணமாக இருந்தனர்.

முன்னவர், வங்கத்தின் பல கிராமங்களில் உள்ள விவசாயிகளை ஒன்றிணைத்தார். பின்னவர், விவசாயக் கூலிப் பெண்களையும் குடும்பத் தலைவிகளையும் ஒன்றிணைத்தார். இருவரும் தங்களின் போராட்டங்களுக்காகச் சிறைக்கும் சென்றிருக்கின்றனர்.

‘தெபாகா’ இயக்கத்தின் முக்கிய நோக்கம் அறுவடை செய்யப்பட்ட நெல்லின் மூன்றில் இரண்டு பங்கை விவசாயத் தொழிலாளர்களுக்கு வழங்குவது. அதற்கு அவர்கள் மேற்கொண்ட முறை இதுதான்: குறிப்பிட்ட ஒரு விவசாய நிலத்தில் அறுவடை முடிந்ததும் நெல்லை ஓரிடத்தில் கொட்டி வைப்பார்கள்.

அந்த இடத்துக்கு நிலச்சுவான்தார், அங்குப் பணியாற்றிய விவசாயத் தொழிலாளர்கள், தெபாகா இயக்கத்தின் தலைவர்கள், உள்ளூர் மக்கள் எல்லோரையும் அந்த இயக்கத்தைச் சார்ந்தோர் அழைத்து வருவார்கள். அனைவரது முன்னிலையிலும் மூன்றில் இரண்டு பங்கு நெல், விவசாயத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும். மீதியை, அந்த நிலச்சுவான்தார் எடுத்துக்கொள்ளலாம்.

பல இடங்களில் இந்த முறை அமைதியாக நடைபெற்றது. சில பகுதிகளில் நிலச்சுவான்தார்கள் எதிர்த்திருக்கிறார்கள். அங்கெல்லாம், இயக்கத்தினர் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்கள்.

என்னதான், இந்த இயக்கம் மக்களுக்கு நல்லது செய்தாலும் காலனி ஆதிக்க போலீஸ், நிலச்சுவான்தார்கள், ஜமீன்தார்கள் ஆகியோரது பார்வையில் இது சட்டத்துக்குப் புறம்பான செயல்தானே? தெபாகா இயக்கத்தை ஒழித்துக்கட்ட ஆங்கிலேய அரசு முடிவு செய்தது. துப்பாக்கிச் சூடு நடத்தினர். பலர் கொல்லப்பட்டனர். இயக்கத்தின் தலைவர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அத்துடன், அந்த இயக்கம் முடிவுக்குவந்தது என நினைத்தால் அது தவறு. அந்த இயக்கத்தில்தான் ‘நக்ஸலைட் இயக்கத்தின் தந்தை’ என்று போற்றப்படுகிற சாரு மஜும்தாரும் ஆரம்பத்தில் பணியாற்றினார். அந்தப் போராட்டம் இன்று வேறொரு வடிவம் பெற்றிருக்கிறது.

(நிறைவடைந்தது)

கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: vinothkumar.n@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x