Last Updated : 01 Apr, 2018 11:21 AM

 

Published : 01 Apr 2018 11:21 AM
Last Updated : 01 Apr 2018 11:21 AM

இல்லம் சங்கீதம் 29: பெண்ணுள்ளம் ஏன் ரெண்டானது?

 

மக்கி மண்ணாய்ப் போக

மனமின்றி உன்னிடம்

சிக்கிச் சீரழிகிறதென்

காமம்.

- யுகபாரதி

இல்லற வாழ்வில் பாலின்பம் உருவாக்குகிற அன்பையும் நேசத்தையும் பாசத்தையும் நம்பிக்கையையும் வேறெந்த செயலாலும் அளிக்க முடியாது’ என்கிறது இந்தியாவின் பாரம்பரிய பாலியல் நூல்களில் ஒன்றான ‘ரதி ரகஸ்யா’. தனிப்பட்ட வகையில் கணவன் - மனைவிக்கு இடையே ஏற்படும் மலர்ச்சியே குழந்தை வளர்ப்பு, குடும்பத்தைப் பேணுதல், உறவுகளைப் பராமரித்தல், சமூகக் கடமைகள் என அடுத்தடுத்த நிலைகளில் ஆக்கபூர்வ மாற்றங்களாக விளைகின்றன. மாறாக, அடிப்படையே ஆட்டம் காணும்போது மற்றவையும் பாதிக்கப்படுகின்றன.

இந்தத் தடுமாற்றங்களைக் களைய இந்தியப் பாரம்பரியத்தில் ஆண் - பெண் தனித்துவ உறவின் மலர்ச்சியை ஆராயும் படைப்புகள் பல இருக்கின்றன. காமசூத்ரா, அனங்கரங்கா, பஞ்ச சாயகம், ஜெயமங்களா, ரதிரத்தின பிரதீபிகா, சூத்ரவிருத்தி, தமிழில் வெளியான கொக்கோக சாஸ்திரம் என அவற்றின் வரிசை பெரிது. ஆணின் தேவைகளும் அதற்குப் பெண்ணைப் பயன்படுத்திக்கொள்வதுமே அவற்றில் பிரதானமாக இருந்தபோதும் பெண்ணுக்கான பிரத்யேக வழிகாட்டுதல்களும் அவற்றில் இருந்தன.

சமநிலை இழக்கும் சமூகம்

தன் உடல் குறித்தும் எதிர்பாலினத்தின் உடல் குறித்தும் அறிவியல்பூர்வமாக அறிந்துகொள்வது பாலியல் ஏற்றத்தாழ்வுகளைக் கடக்க உதவும். கல்வித் திட்டத்தில் பாலியல் கல்வியின் அவசியம் குறித்துப் பல பத்தாண்டுகளாகப் பேசிவருகிறோம். உரிய பாலியல் கல்வி இல்லாததன் பாதிப்பு சமூகக் கேடாக மாறுவதுடன் திருமண வாழ்க்கையிலும் எதிரொலிக்கிறது. ஆணும் பெண்ணும் சேர்ந்து தொடங்கும் இல்லறப் பயணம், ஒருவருக்கு மட்டுமே அனைத்துப் பலன்களையும் சேர்ப்பதும் மற்றவரைப் பரிதவிக்க விடுவதும் அந்தக் கேடுகளில் ஒன்று. மேற்பரப்பில் அமைதிகாட்டும் பெண்ணின் மனது எதிர்பாராத கணத்தில் வெடிக்கும்போது ஆணின் இருப்பும் அவன் கட்டியெழுப்பிய ஆதிக்கக் கோட்டைகளும் விரிசல் விடும். குடும்பத்திலும் சமுதாயத்திலும் விரும்பத்தகாதவையாக நாம் கடந்து செல்லும் பலவற்றின் பின்னணி இதுவாகவே இருக்கிறது.

பாலினச் சமத்துவம் என்பதில் பாலுறவும் அடங்கும்தானே. ஆனால், ஆண்களால் புறக்கணிக்கப்படும் பெண்களின் பாலியல் பரிதவிப்பு குறித்து மிகக் குறைவான விவாதங்களே எழுந்திருக்கின்றன. வீட்டில் மற்றவற்றைப் போலவே படுக்கையறையின் ஆதிக்கமும் ஆணை மையமாகக்கொண்டே இயங்குகிறது. ஆணை இன்பத்தைத் துய்ப்பவனாகவும் பெண்ணை அதற்காகப் படைக்கப்பட்ட கருவியாகவும் மட்டுமே அடையாளப்படுத்துகிறோம். குடும்ப நிறுவனத்தின் பெயரால் இயற்கைக்கு விரோதமாக நாம் உருவாக்கியதில் இந்த ஆதிக்கமே முக்கியமானது. ஆணுக்கு நிகராகப் படைப்பில் விளைந்த பெண்ணின் உடல், ஆதிக்கத்தின் பெயரால் புறக்கணிப்புக்கு ஆளாகும்போது குடும்பத்திலும் சுனாமிகள் எழவே செய்யும்.

மன அமைதிக்கான வழி

இல்லறத்தின் இணக்கத்தை முன்வைத்து இதுவரை ஏராளமான தத்துவ விசாரங்களும் விவாதங்களும் வந்திருக்கின்றன. தாம்பத்தியத்தில் எட்டும் நிறைவின் வாயிலாக, ஆன்ம விடுதலைக்கான தேடல்களும் இவற்றில் அடங்கும். அவற்றில் பிரதானமானது ‘தந்த்ரா’. இந்திய சித்தர்களும் சீனத்து தாவோ ஞானிகளும் இந்த தந்த்ரா யோகத்துக்குப் பங்களித்திருக்கிறார்கள். கணவனும் மனைவியும் தாம்பத்தியத்தின் மூலம் அவர்களின் உடல் தேவைகளுக்கு அப்பால் மன அமைதியையும் ஒற்றுமையையும் தந்த்ரா வழங்கும் என்கிறார்கள். தந்த்ரா வழியில் தாம்பத்தியத்தின் மேடு பள்ளங்களைத் தூர்க்கலாம் என்கிறார்கள். மேலும், தாம்பத்தியத்தில் பெண்ணின் பங்கை உணர்ந்து போற்றுவதிலும் தந்த்ரா கவனம்பெறுகிறது.

வழக்கமான தாம்பத்தியம் ஆணின் பங்கையே அதிகமாகக் கோருகிறது. ஆணின் செயலூக்கத்தை மட்டுப்படுத்தி பெண்ணை ஆக்டிவாக இங்கே முன்னிறுத்துகிறார்கள். ஆணின் தாம்பத்திய பயணம் சடுதியில் முடிந்துவிடும். அதன் பிறகு தொடரும் பெண்ணின் பயணத்தில் அவனால் இணங்கிவர முடிவதில்லை. இந்தப் பொருத்தப்பாடின்மையும் அதையொட்டி எழும் பெண்ணின் நிறைவுறா நிலையும் குடும்பத்தில் வெவ்வேறு வடிவங்களில் பூசலாக வெடிக்கின்றன. இதற்குத் தீர்வாக தனக்கானதைப் பெண் துய்க்க ஆணைத் துணையாக்குவதன் சாத்தியங்களைத் தெளிவுபடுத்துகிறது தந்த்ரா. இதனால் கணவன் - மனைவி உறவில் பக்குவம், முதிர்ச்சி, விழிப்புணர்வு, பரிவு போன்றவை வாய்ப்பதுடன் பொறாமை, கோபம், வெறுப்பு போன்றவை நீங்கவும் இது வழிகாட்டுகிறது.

ஆண்களுக்கு என தந்த்ரா வழி பயிற்சி வகுப்புகளை நடத்துபவரும், ‘தந்த்ரா வழியில் தாம்பத்திய வாழ்க்கை - ஆண்களுக்கான அற்புதப் புதையல்’ என்ற நூலின் ஆசிரியருமான போதி பிரவேஷ், “தன்னை நம்பி வாழ்நாள் நெடுகப் பயணிக்கும் மனைவியைப் போகப்பொருளாகப் பயன்படுத்தாமல் உணர்வும் உணர்ச்சியும் கொண்ட சக உயிராக மதித்து நடக்கவும் தாம்பத்திய இன்பத்தை மனைவியுடன் பகிர்ந்துகொள்ளவும் மனைவியின் மனநலம் காத்து இல்லற வாழ்வில் இணைந்து நடைபோடவும் தந்த்ரா வழிகாட்டுகிறது” என்கிறார்.

கணவன் என்ற கிரீடம்

“துணி நெய்தலில் ஊடும் பாவும்போல தாம்பத்தியத்தில் ஆண் - பெண் இருவரின் பங்கும் அமைந்திருக்க வேண்டும்; ஆனால், பெரும்பாலானோரின் தாம்பத்திய நடைமுறை பெண்ணை இரக்கமின்றிப் புறக்கணிக்கிறது” என்கிறார் போதி பிரவேஷ். மேலும் அவர், “ஆணின் பாராமுகம் பெண்ணுக்குத் துன்பம் தருவது. அவள் தனக்கானதைக் கேட்டுப் பெறுவதற்கு நாம் நிர்மாணித்த குடும்ப அமைப்பு இடம் கொடுப்பதில்லை. நிராசைகளுடன் வாழ்நாளைப் போக்கி மரித்துப்போகும் குடும்பத்துப் பெண்கள் ஏராளம். தனது விருப்பம், தேவை எவற்றையும் உணர முன்வராது இரக்கமின்றி தினம்தினம் கணவனால் வல்லுறவுக்கு ஆளாகும் மனைவியின் கொதிப்பு ஒரு கட்டத்தில் திருப்பியடிக்கும். காரணம் புரியாமல் குடும்பத்தில் ஆண் அமைதியை இழப்பான். இப்படி, குடும்பங்களின் பெரும்பாலான பிரச்சினைகளுக்குப் பாலியல் ஆற்றாமையே காரணம் என்று நமது பாரம்பரியத்தில் உணர்ந்து சொன்னதையே, இன்றைய நவீன மனநல மருத்துவம் வழிமொழிகிறது.

மனைவியின் பாலியல் ஆற்றாமைக்குத் தீர்வுகாண்பது ஆணின் கையில் இருக்கிறது. மனைவியை நெருங்கும்போது கணவன் என்ற ஆதிக்கக் கிரீடத்தை அகற்றிவிட்டு அவளின் மனங்கவர்ந்த காதலனாக ஆண் நடந்துகொள்வது இதற்கு முதல் படி. மனைவியின் உணர்வுகளுக்கு இடம்கொடுத்தே பயணத்தைத் தொடர வேண்டும். முன்கூட்டியே மனதளவில் தயாராவது, இணையைத் தயார்படுத்துவது, போதிய நேரத்தை ஒதுக்குவது, மிதமான இசை, மட்டுப்படுத்திய ஒளி, காற்றோட்டம் என இதமான சூழலை வடிவமைப்பது, அன்பான பேச்சு, சீண்டல், தூண்டல், பல நிலை விளையாட்டுகள் எனப் படிப்படியாக உயர்ந்துசென்று, தான் உச்சம் உணர்வதுடன் தன் இணையும் அதை உணர உபாயங்கள் புரிவதுமே நிறைவான தாம்பத்தியம். இதற்கான நுட்பங்களை இருவரும் ஒருமித்துப் பழகுவதும் வளர்த்துக்கொள்வதும் தேகங்களுக்கு அப்பால் அவர்களை ஆத்மார்த்தமாகப் பிணைத்திருக்க உதவும். கணவன் - மனைவி சச்சரவுகள் அகல, இருவருக்கும் இடையே இடைவெளி குறைய, வாழ்க்கையில் வெற்றி பெற, சிறப்பான உடல் மற்றும் மன ஆற்றலுடன் ஆயுளை அதிகரித்துக்கொள்ள உரிய வகையிலான தாம்பத்திய வாழ்க்கையைத் தகவமைத்துக்கொள்ள வேண்டும்” என்கிறார்.

(மெல்லிசை ஒலிக்கும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x