Published : 29 Apr 2018 02:28 PM
Last Updated : 29 Apr 2018 02:28 PM

விஜய் சேதுபதிக்கு என் நடிப்பு பிடிக்கும்!- காயத்ரி பேட்டி

அமைதியான முகம், அளவான பேச்சு, பார்த்துப் பார்த்துப் படங்களை ஒப்புக்கொண்டு அழகாகத் தன்னைத் தக்கவைத்துக்கொண்டிருப்பவர் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படப் புகழ் காயத்ரி. தற்போது விஜய் சேதுபதியுடன் ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘சீதக்காதி’ ஆகிய படங்களிலும் புதிய இணையத் தொடர்களிலும் பிஸியாக நடித்துக்கொண்டிருப்பவர் பளிச்சென்ற தனது புதிய போட்டோ ஷூட் ஒளிப்படங்களை அனுப்பிவிட்டு ‘போர்ட்ஃபோலியோ’ என்று வீடியோ சாட்டில் வந்து கண் சிமிட்டினார்… அவரிடம் உரையாடியதிலிருந்து…

பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோதே நடிக்க வந்துவிட்டீர்கள். மீண்டும் பள்ளிக்கூடத்தில் உங்களைச் சேர்த்துக்கொண்டார்களா?

நடிப்புக்காகப் படிப்புக்கு நான் மட்டம் போடவில்லை. பள்ளியில் கிடைத்த விடுமுறை நாட்களில்தான் நடித்தேன். அதன் பிறகு கல்லூரி முடித்துவிட்டுதான் முழுநேர நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினேன். இப்போது நான் சுதந்திரப் பறவை. கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆகி வேலைக்குச் செல்வதுபோல்தான் இப்போது நடிப்பை உணர்கிறேன்.

மேடையில் பேசுவதற்கு முன்பெல்லாம் பயப்படுவீர்கள். இப்போது எப்படி?

கொஞ்சம் தேறிட்டேன். நிறையப் பேச வேண்டும். ஒரு லிஸ்ட் போட்டு மனதுக்குள் ஓட்டிப்பார்த்துக்கொண்டு மேடை ஏறுவேன். ஆனால், அதில் பாதியைக் கூடப் பேச முடிவது இல்லை. பயத்தில் மறந்துடுவேன். இது போகப் போகத்தான் சரியாகும் என்று நினைக்கிறேன்.

கதாநாயகி வாய்ப்பு வரவில்லை என்றால் காயத்ரி என்ன செய்துகொண்டிருப்பார்?

இந்நேரம் டீச்சராகியிருப்பேன். ஆசிரியர் பணி எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

விஜய்சேதுபதி படங்களில்தான் காயத்ரியை அதிகமும் பார்க்க முடிகிறது? அந்த ரகசியத்தைக் கொஞ்சம் சொல்லுங்களேன்?

இதில் ஒரு ரகசியமும் இல்லை. ‘கதாபாத்திரத்தைப் புரிஞ்சிக்கிட்டு நடிப்பை வெளிப்படுத்துவாங்க. காயத்ரி நல்ல நடிகை’ன்னு விஜய்சேதுபதி சார் பலமுறை பொது மேடைகளில் சொல்லியிருக்கிறார். பிடித்த ஆர்டிஸ்ட், டெக்னீஷியன்களோடு தொடர்ந்து வேலை செய்ய வேண்டும் என்று அவர் விரும்புவார். அந்தப் பட்டியலில் நானும் ஒருத்தி. அது சந்தோஷம்தானே!

‘சூப்பர் டீலக்ஸ்’ படம் பற்றி…

தேசிய விருது இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவின் படம் இது. 20 டேக் எடுத்தாலும் சரியாக வரும் வரைக்கும் விடவே மாட்டார். அவர் தெளிவாகக் கதை சொன்னதால் எப்படி நடிக்க வேண்டும் என்பது தெளிவாகப் புரிந்துவிட்டது. படப்பிடிப்பு தொடங்கும் முன்னரே அந்தக் கதாபாத்திரமாகத்தான் வீட்டில் நடமாடிக்கொண்டிருந்தேன். அம்மாவும் அப்பாவும் கத்தத் தொடங்கிட்டாங்க. படப்பிடிப்பில் இயக்குநர் என் நடிப்பை மனம்விட்டுப் பாராட்டினார்.

‘வெப் சீரீஸ்’ நாயகி பட்டியலில் நீங்களும் சேர்ந்திருக்கிறீர்களே?

இப்போதைய புது ட்ரெண்டில் நாமும் இருப்பதில் தவறில்லையே. 2 மணி நேரத்துக்குள் சொல்ல முடியாத கதையை ‘வெப் சீரீஸ்’ வகைக்குள் கொண்டு போய் எடுக்கிற ‘ஃப்ளாட் பார்ம்’ அது. நிறைய திறமைசாலிகளுக்கான இடம். நானும் அந்த விஷயத்துக்குள் பயணிக்கத் தயாராகிவிட்டேன். கதையைப் பற்றி இப்போதைக்குச் சொல்ல முடியாது.

திரையுலகில் உங்களுக்கு நெருக்கமான தோழிகள்?

‘ரம்மி’ படத்தில் நடித்ததில் இருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நல்ல தோழி. அடிக்கடி இருவரும் சந்திக்கவில்லை என்றாலும் தொடர்பில் இருக்கிறோம். அப்பறம் ஆர்த்தி. சந்தோஷ் சிவனிடம் உதவியாளராக இருந்தார். அவங்க எனது நெருக்கமான தோழி. இப்போது கதை எழுதிக்கொண்டிருக்கிறார். சீக்கிரமே அவர் இயக்குநர் ஆனார். அவர் படத்தில் நான் இருப்பேன்.

படப்பிடிப்பு இல்லாதபோது எப்படிப் பொழுதைப் போக்குவீர்கள்?

படம் பார்ப்பேன். சமீபகாலமாக ‘வெப் சீரீஸ்’ பார்க்கத் தொடங்கிவிட்டேன். ஓவியம் பிடிக்கும். சமையல் செய்யக் கத்துக்கிட்டிருக்கேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x