Published : 23 Apr 2018 10:11 AM
Last Updated : 23 Apr 2018 10:11 AM

ஒரு விநாடிக்கு ஒரு வாகனம் விற்பனை!

கு

ஜராத் மாநிலம் வதோதராவில் ஒரு விநாடிக்கு ஒரு வாகனம் விற்பனையாகிறது. இம்மாவட்டம்தான் ஓய்வூதியதாரர்களின் சொர்க்கபுரியாக திகழ்கிறது. வாகன பெருக்கம் காரணமாக பெரு நகரங்களுக்கு இணையாக வதோதராவிலும் வாகன நெரிசல் அதிகரித்து வருவதாக மாவட்ட போக்குவரத்து ஆணையர் அலுவலகம் தெரிவிக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளில் இந்த மாவட்டத்தில் வாகன பெருக்கம் 2 மடங்கு அதிகரித்துள்ளது. 2007-ம் ஆண்டில் இம்மாவட்டத்தில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை 9,48,091 ஆகும். இது 2017-ல் 20,27,697 ஆக அதிகரித்துள்ளது.

வாகன பெருக்கம் இரு மடங்காக அதிகரித்துள்ளதால் நெரிசலை கட்டுப்படுத்துவது போலீஸாருக்கும், மாநகர அலுவலர்களுக்கும் பெரும் சவாலாக உள்ளது. தனியார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மக்களுக்கு எளிதில் வங்கிக் கடன் கிடைப்பதால் இரு சக்கர வாகனங்களையும் அதிக எண்ணிக்கையில் வாங்குகின்றனர்.

தனியார் வாகன பெருக்கத்துக்கு முக்கியக் காரணம் இங்கு பொது போக்குவரத்து வசதிகள் அவ்வளவாக இல்லை. பெரு நகரங்களில் உள்ளதைப் போன்ற போக்குவரத்து வசதிகள் கிடையாது. இதனால் மக்கள் பெரிதும் தனியார் வாகனங்களையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது.

மோட்டார் சைக்கிள் எண்ணிக்கை 5,18,244-லிருந்து 11,33,779 ஆக உயர்ந்துள்ளது. இதைப் போல கார்களின் எண்ணிக்கை 94,724-லிருந்து 2,47,970 ஆக கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. இதேபோல ஆட்டோக்களின் எண்ணிக்கை 34,023-லிருந்து 87,861 ஆக உயர்ந்துள்ளது.

இதனால் நகரின் பெரும்பாலான பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவது பெரும் சவாலாக உள்ளது. சொந்தமாக கார் வாங்கி பயன்படுத்துவது அதிகம் செலவு பிடிக்கும் விஷயம் என்ற நிலையை எட்டும்போதுதான் வாகன நெரிசல் குறையும் என்கின்றனர் நிபுணர்கள்.

அதேசமயம் பொது போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும்போது தனி நபர் வாகன உபயோகமும் குறையும். இதற்கான வழிவகைகளை உருவாக்குமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரை கூறப்பட்டுள்ளது.

பேட்டரியில் இயங்கும் ரிக்‌ஷாக்களை அதிக எண்ணிக்கையில் அறிமுகம் செய்யும்போது பொது போக்குவரத்து வசதி மேம்பட்டு தனிநபர் வாகன நுகர்வு குறையும் என்று போக்குவரத்துத் துறை நிபுணர் சத்யென் குலாப்கெர் தெரிவித்துள்ளார். வதோதரா நகராட்சி தனியார் ஒத்துழைப்புடன் பஸ்களை அதிக எண்ணிக்கையில் இயக்கவும் திட்டமிட்டு முயற்சி மேற்கொண்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x