Last Updated : 14 Apr, 2018 10:37 AM

 

Published : 14 Apr 2018 10:37 AM
Last Updated : 14 Apr 2018 10:37 AM

என் ‘இனிய’ மக்களுக்கு..!

னிப்பு, கொஞ்ச நாளாகவே அநேகம் பேருக்கு கசக்க ஆரம்பித்துவிட்டது. நம் ஊரில் மட்டுமல்ல, உலகெங்கும்! ‘இனிது இனிது காதல் இனிது’ என பாலகுமாரன் இன்னொரு முறை எழுத மாட்டார் என்றுதான் தோன்றுகிறது. ‘கசப்பு கசப்பு காதல் கசப்பு’ என்று எழுதினால்தான், பலருக்கும் சுவைக்கக்கூடும்.

ஆம்! இனிப்பைக் கண்டு பயப்படவும் வெறுக்கவும் கூடிய சூழல் எல்லாப் பக்கமும் வலுவாக வளர்ந்து வருகிறது. மூளைக்குள் இத்தனை நாள் மணியடித்து, எண்டார்பின்களைத் தெளித்துப் பரவசமூட்டிய இனிப்பு, இப்போது அபாய மணியாக ஒலிக்க ஆரம்பித்துவிட்டது. சர்க்கரை வியாதிக்காரர்கள் மட்டும் சற்று சங்கோஜத்துடன் நகர்த்தி ஒதுக்கிய இனிப்புகள், இன்று குழந்தை முதல் அத்தனை வயோதிகரும் சற்றுக் கலவரத்துடன் ஒதுக்கும் வஸ்துகளாகி வருகின்றன.

காபிக்கு சர்க்கரை போடலாமா?

இன்றைக்கு உலகில் மிக அதிகமாக இனிப்பை (வெள்ளைச் சர்க்கரையை) இறக்குமதி செய்யும் நாடு, இந்தியா. கூடவே இன்று உலகில் மிக அதிக அளவில் சர்க்கரை வியாதிக்காரர்களை தன்னகத்தே கொண்டுள்ள நாடும், இந்தியாதான். உலகில் மிக அதிக அளவில் நீரிழிவு மருந்து, மருத்துவமனை வியாபாரம் கொடிகட்டிப் பறப்பதும் இங்கேதான்.

முன்பெல்லாம் பசியெடுக்கையில் முந்திரிப் பருப்பை வறுத்துச் சாப்பிடும் பணக்கார மிட்டாமிராசுகளுக்கு வரும் வியாதியாக சர்க்கரை வியாதியை நவீன மருத்துவம் சொல்லியிருந்தது. பாரம்பரிய மருத்துவ முறைகள் எல்லாம், ‘கோதையர் கலவி போதை, கொழுத்த மீனிறைச்சி போதை, ஓதுவாய் நெய்யும் பாலும் பரிவுடன் உண்போருக்கு வந்து சேரும் வியாதி’ என்று எச்சரித்திருந்தன. இவை எல்லாவற்றையும் கடந்து வயது, சாதி, இன, பண, புவியியல் பாரபட்சமும் இல்லாத ஒரே விஷயமாய் சர்க்கரை இந்த நாட்டில் உருவெடுத்து வருகிறது.

‘காபி, டீக்கு சர்க்கரை போடலாமா?’ எனும் கேள்வி ‘ஆதார் கார்டை இணைச்சிட்டீங்களா?’ என்கிற மாதிரி தவிர்க்க முடியாததாகி வருகிறது. சுயம்வர வேட்டையில் பி.சி.ஓ.டி. (சினைப்பை நீர்க்கட்டி) இல்லாத பொண்ணும், ஐ.ஜி.டி. (ஆரம்பக்கட்ட சர்க்கரை நிலை) இல்லாத பையனும் கிடைப்பது அநேகமாக இனி சாத்தியமில்லை என்கின்றன தொடர்ச்சியாக வெளிவரும் நோய்த்தொற்று அறிவியல் ஆய்வு முடிவுகள்.

எதற்கெடுத்தாலும் சர்க்கரையா..?

இத்தனைக்கும் கணையம்தான் பிரச்சினை. அதன் பீட்டா செல்களில் நடந்த புழுக்கமும் கலக்கமும் குழப்பமும்தான் அத்தனைக்கும் காரணம் என்றார்கள் முதலில். வைரஸோ, நோய் எதிர்ப்பாற்றலில் நடந்த பிழையாலோ கணையம் கசங்கிப் போனது என்றும் சொன்னார்கள். இல்லை, பிரச்சினை அதையும் தாண்டியது… ஹார்மோன் சிக்கல்… இல்லை, இல்லை, புரதப் பிரச்சினை… அதெல்லாம் இல்லப்பா… மரபணுதான் சிக்கல்… அதெல்லாம் கிடையாது, ரத்ததில் பேசோபிலில் உள்ள பிளாஸ்டிசைசர் துணுக்குகள் என வரிசை வரிசையாய்ப் பல காரணங்கள் சர்க்கரை நோய்க்கான காரணமாக ஆராயப்பட்டு வருகின்றன.

என்ன காரணம் எனத் தெரியாமல், ‘மாதவிடாயைக் காணோம் என்றால் சர்க்கரையைப் பார்’; ‘காய்ச்சல் குறையலையா? சர்க்கரையைப் பார்!’; மெலிந்து விட்டாயா? குண்டாகி விட்டாயா? குழந்தை இல்லையா? பணக்காரக் கவலைகளா? பணம் இல்லை என்ற கவலையா? தூக்கம் வரவில்லையா? தூக்கமா வருதா? எல்லாவற்றுக்கும் சர்க்கரையைப் பார்… சர்க்கரையைப் பார்!’ என்ற அறைகூவல் மட்டும் இப்போது மருத்துவ உலகில் ஓங்கி ஒலிக்கிறது.

இனிப்பு பாதி… கசப்பு மீதி…

கூடவே ‘ஐயோ இன்சுலினா போட்டுக்கறீங்க..? இவ்ளோ மாத்திரையா?’ என சிலரது நக்கல்கள் ஒரு பக்கம். ‘நீங்க படிச்சவங்க தானா? இப்படி கசாயம் பட்டை, கொட்டைன்னு…. அப்புறம் கிட்னி போயிருச்சுன்னு இங்கு வந்தீங்க... அவ்ளோதான்’ என நுனி நாக்கு ஆங்கிலத்தில் கோட் சூட் போட்ட குதர்க்கங்கள் இன்னொரு பக்கம். ‘டேய்! சுகர்னே ஒண்ணு கிடையாதுடா. எல்லாம் பொய். எல்லா மாத்திரையையும் ஊசியையும் எடுத்துத் தூரப் போடு. நான் சொல்றபடி அகாசுகா பட்டையை அர்த்த ராத்திரில எடுத்துவந்து...’ என நீளும் ‘வாட்ஸ் அப்’ வாந்தி என இனிப்பர்களின் வாழ்வு மிக மிகக் கசப்பாகி வருகிறது. இதற்கிடையில் ‘எதனாச்சும் ஒரு உண்மையான வழியைக் காட்டுங்க!’ எனும் பாதிக்கப்பட்டோரின் கூக்குரலுக்குப் பின்னே கோடானு கோடி வர்த்தகம் இனிப்பாய் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

இவை எல்லாவற்றையும் காய்ப்பு உவர்ப்பு இல்லாமல் ஒரு சுற்று அறிவதுதான், இனிப்பு உருவாக்கும் அத்தனை கசப்பிலிருந்தும் காத்துக்கொள்வற்கான முதல்படி. ‘ஸ்டெம் செல்லை கணையத்தில் படியவிடலாம். மாசம் ஒரு ஊசி போதும். மாத்திரை சாப்பிட்டா அத்தனை சர்க்கரையையும் சிறுநீரில் தள்ளிவிடலாம். மூலிகை கஷாயத்தின் நுண்தாவர மருத்துவக் கூறுகள் மூலம் ரத்த சர்க்கரையை செல்களுக்குள் தள்ளிவிடலாம். வர்மம், அக்குபிரஷர் மூலம் நிணநீர் ஓட்டத்தைத் துரிதப்படுத்தி, ரத்தத்தில் தேங்கி நிற்கும் சர்க்கரையை செல்லுக்குள் தள்ளி, கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தை ஊக்கப்படுத்தி, சர்க்கரையைக் கட்டுப்படுத்தலாம்’ என்றெல்லாம் ஆங்காங்கே ஆக்கப்பூர்வ ஆய்வுகள் உலகெங்கும் வந்துகொண்டே இருப்பது, இனிப்பான செய்திதான். ஆனால் என்ன நடக்கிறது, என்ன நடக்க வேண்டும்? இனிப்பின் பக்கம் ஒரு சின்ன நடை போய் வரலாமா?

கட்டுரையாளர், சித்த மருத்துவர்

தொடர்புக்கு: herbsiddha@gmail.com

மருத்துவர் கு. சிவராமன், சென்னையைச் சேர்ந்த பிரபல சித்த மருத்துவர். சித்த மருத்துவம் குறித்துப் பல்வேறு ஊடகங்களில் தொடர்ச்சியாக பேசியும் எழுதியும் வருகிறார். சித்த மருத்துவம் தவிர,

நாம் இழந்து வரும் மரபுகள், பாரம்பரிய

உணவு ஆகியவற்றை மீட்பது தொடர்பாகவும் செயலாற்றி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x