Published : 16 Apr 2018 10:37 AM
Last Updated : 16 Apr 2018 10:37 AM

இந்த நம்பர் பிளேட் விலை ரூ.132 கோடி

தோ எழுத்துப் பிழை அல்லது விலை சரியாகத் தெரியாமல் எழுதிவிட்டார்கள் என்று நினைக்க வேண்டாம். நம்பித்தான் ஆக வேண்டும், இந்த நம்பர் பிளேட் விலை ரூ. 132 கோடி.

பொதுவாக தங்களுக்குப் பிடித்தமான எண் கொண்ட வாகனத்தை வைத்திருப்பது பலருக்கும் பிடிக்கும். இதனால் புதிய வாகனம் வாங்கும்போதே வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கூடுதல் கட்டணம் செலுத்தி விருப்பமான, அதிர்ஷ்டமான எண்களை தங்கள் வாகனத்துக்கு வாங்குவது வழக்கம்.

நியூமராலஜி மீது நம்பிக்கை வைத்திருப்போர், தங்களது அதிர்ஷ்ட எண் கொண்ட வாகனத்தை அல்லது அந்த எண்ணை வாங்குவதில் ஆர்வம் செலுத்துவர்.

பொதுவாக 8055 (BOSS), AK47, 786 போன்ற எண்களைப் பெற விரும்புவோர் அதிகம். அதேபோல ஒற்றை இலக்க எண்ணில் நம்பர் பிளேட் வாங்குவதற்கும் அதிகம் செலவிட வேண்டியிருக்கும்.

பிடித்தமான எண் கொண்ட நம்பர் பிளேட்டுக்கு எவ்வளவு விலை தரலாம். ஒரு லட்சம் ரூபாய், ரூ.2 லட்சம், அல்லது அதிக பட்சம் ரூ. 5 லட்சம். சரி விரும்பிய எண், பணத்துக்கோ பஞ்சமில்லை என்பவர் வேண்டுமானால் ரூ. 20 லட்சம் வரை தரலாம். ஆனால் உலகிலேயே அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ள நம்பர் பிளேட்டுக்கு அளிக்கப்பட்ட தொகை 1,44,12,093 பவுண்ட். அதாவது இந்திய மதிப்பில் ரூ. 132 கோடியாகும். இந்த காசுக்கு நம்ம ஊரில் 4,500 மாருதி சுஸுகி ஆல்டோவை வாங்கலாம். அல்லது 10 புகாட்டி வெய்ரோன் காரை வாங்க முடியும்.

F 1 என்றிருப்பதுதான் அந்த நம்பர் பிளேட்டின் சிறப்பம்சம். இதன் தற்போதைய உரிமையாளர் அப்சல் கான். இவர் கான் டிசைன் எனும் உலகப் புகழ் வாய்ந்த வடிவமைப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனம் மிகவும் உயர் மதிப்பிலான கார்களை வாடிக்கையாளர் விருப்பத்துக்கேற்ப மாற்றித் தரும் பணியை செய்கிறது.

ஃபார்முலா -1 எனும் சர்வதேச புகழ்பெற்ற மோட்டார் பந்தயத்தை குறிப்பதோடு மட்டுமல்லாமல், இரு இலக்க எண்ணாக உள்ளது. இவர் தற்போது தனது புகாட்டி வெய்ரோனில் இந்த நம்பர் பிளேட்டை பயன்படுத்துகிறார்.

இந்த நம்பர் பிளேட்டை 2008-ம் ஆண்டு ரூ. 4 கோடிக்கு அதாவது 19 ஆயிரம் பவுண்டுக்கு கான் வாங்கினார். இதன் முந்தைய உரிமையாளர் எஸெக்ஸ் சிட்டி கவுன்சிலாகும். இந்த கவுன்சிலிடம் 1904-ம் ஆண்டிலிருந்து இந்த நம்பர் பிளேட் இருந்தது. 104 ஆண்டுகள் வைத்திருந்து ரூ. 4 கோடிக்கு இந்நிறுவனம் கானிடம் விற்றது. ஏறக்குறைய 10 ஆண்டுகள் காத்திருந்து 3,200 சதவீதம் அதிக விலைக்கு விற்றுள்ளார்.

இங்கிலாந்தைப் பொறுத்தமட்டில் காரின் நம்பர் பிளேட் என்பது தனி நபருக்காக உருவாக்கப்பட்டு அளிக்கப்படுவதாகும். அந்த எண் ஒருபோதும் மற்றவருக்கு வராது. அந்த வகையில் கானுக்கு பல கோடிகளை லாபமாக கொட்டியுள்ளது எப் 1 நம்பர் பிளேட்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x