Published : 02 Apr 2018 10:48 AM
Last Updated : 02 Apr 2018 10:48 AM

பேட்டரி வாகன ஆராய்ச்சி: முதுகலை பட்டதாரிகளுக்கு வலைவீசும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

ட்டோமொபைல் துறையில் அடுத்தகட்ட வளர்ச்சி பேட்டரி வாகனங்களை அடிப்படையாகக் கொண்டதுதான். இதை உணர்ந்தே நிறுவனங்களின் கவனம் முழுவதும் பேட்டரி வாகன உருவாக்கத்தின் மீது திரும்பியுள்ளது.

பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு கூடுதலாக நிதியை ஒதுக்கியுள்ளன. பல நிறுவனங்கள் நிதி ஒதுக்கீட்டோடு உரிய நிபுணர்களுக்கு வலை வீசும் பணியைத் தொடங்கியுள்ளன.

முதுகலை பட்டதாரிகள், டாக்டர் பட்டம் பெற்றவர்களைத் தேடும் பணியில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இறங்கியுள்ளன. உள்நாட்டிலிருந்து மட்டுமின்றி வெளிநாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்களிலிருந்து தகுதிபடைத்தவர்களைத் தேடும் பணியை இவை தொடங்கியுள்ளன. அமெரிக்காவின் ஸ்டான்போர்டு, ஹாலந்தில் டியு டெல்ப்ட் பல்கலை, பிரிட்டனின் வார்விக், ஜெர்மனியின் தொழில்நுட்ப பல்கலைகளிலிருந்து தகுதி படைத்தவர்களை தங்கள் நிறுவனத்திற்கு கொண்டு வரும் பணியில் பெரும்பாலான நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

அசோக் லேலண்ட், டிவிஎஸ் மோட்டார், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் சிறப்பு ஆராய்ச்சி பிரிவை உருவாக்கியுள்ளன. வழக்கமான கார் வடிவமைப்பு போலன்றி, ஸ்டார்ட் அப்கள் உருவாக்கும் பாணியில் ஆராய்ச்சி மையங்களை நிறுவி அதற்குரிய தகுதிவாய்ந்தவர்களைத் தேடும் பணியையும் இவை முடுக்கிவிட்டுள்ளன.

அசோக் லேலண்ட் நிறுவனத்தின் ஆராய்ச்சி, மேம்பாட்டு பிரிவில் தற்போது 60 தொழில்நுட்ப நிபுணர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கையை 140 ஆக இந்த ஆண்டு இறுதிக்குள் உயர்த்த இந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் தனது ஆராய்ச்சிப் பிரிவுக்கு 200 பேரை புதிதாக பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளது. இவர்களில் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் இருந்து 100 பேரையாவது தேர்வு செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தனது நிறுவன பணியாளர்களில் தகுதியானவர்களைத் தேர்வு செய்து அவர்களை வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் மேற்படிப்பு படிக்க அனுப்பியுள்ளது. ஏறக்குறைய 100 பேரை உயர்கல்விக்கு அனுப்பியதாகவும் அவர்களில் 70 பேர் பயிற்சி முடிந்து திரும்பிட்டதாகவும் தெரிகிறது. இதற்காக நான்கு ஆண்டுகளில் ரூ 40 லட்சம் முதல் ரூ. 50 லட்சம் வரை ஒவ்வொரு பணியாளருக்கும் செலவிட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹீரோ மோட்டார் கார்ப்பரேஷன் 100 முதல் 150 பணியாளர்களைத் தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

பேட்டரி வாகனங்களுக்கு திடீரென மாறுவதால் திறமையானவர்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்படும் என்று மாருதி சுஸுகி நிறுவனத்தின் பொறியியல் பிரிவின் செயல் இயக்குநர் சி வி ராமன் தெரிவித்துள்ளார்.

பேட்டரி வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் அரசின் கொள்கையும், மானிய உதவியும் இருக்க வேண்டும். அனைத்துக்கும் மேலாக இதற்கான சார்ஜிங் மையங்கள் அதிக அளவில் உருவாகும்போது 2030-ம் ஆண்டில் அனைத்து வாகனங்களையும் பேட்டரியில் இயங்குபவையாக மாற்றும் இலக்கு சாத்தியமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x