Last Updated : 25 Apr, 2018 10:54 AM

 

Published : 25 Apr 2018 10:54 AM
Last Updated : 25 Apr 2018 10:54 AM

உடல் எனும் இயந்திரம் 20: இயற்கை கேமரா!

டலில் உள்ள ‘கேமரா‘ கண். உலகின் அதிசயங்களைக் காண உதவும் கண்ணாடி. கண்ணில் 15% தான் வெளியில் தெரிகிறது; மீதி 85% கபாலத்தில் உள்ள கண்குழியில் (Orbit) பாதுகாப்பாகப் புதைந்துள்ளது.

கண்ணைப் பார்த்ததும் ஐந்து பகுதிகள் உடனே தெரியும். புருவம், இமை, கண்ணில் வெண் நிறப் பகுதி, கறுப்பு வட்டம், அதில் ஓர் ஓட்டை. புருவங்கள்தான் கண்ணுக்கு முதல்நிலைக் காவலர்கள்: நெற்றி வியர்வை கண்ணுக்குள் போய்விடாதபடி பார்த்துக்கொள்கின்றன. தூசி, துகள், பூச்சி போன்றவை கண்ணுக்குள் விழுந்துவிடாமல் தடுப்பதற்காக ஏற்பட்டவை இமைகள். கண்ணில் காற்று பட்டு ஈரப்பசை உலர்ந்துவிடாமல் இருப்பதற்குக் கண்களைச் சிமிட்டுகிறோம். அதிக வெளிச்சம் கண்ணுக்குள் நுழையும்போது இமைகள் மூடி கண்ணைக் காப்பாற்றுகின்றன. இரவில் நாம் தூங்கும்போது அந்நியப் பொருள் எதுவும் கண்களைப் பாதித்துவிடாதபடி இமைகள் மூடிக்கொள்கின்றன.

சிறிய கோழி முட்டைபோல் காணப்படும் கண்ணுக்கு ‘விழிக்கோளம்’ (Eye ball) என்பதுதான் சரியான பெயர். ஆறு வகைத் தசைகள் விழிக்கோளத்தைத் தாங்கிக்கொள்கின்றன. விழிகளைப் பக்கவாட்டிலும் மேலும் கீழும் சுழற்றுவதற்கு இந்தத் தசைகளே உதவுகின்றன.

சுமார் 25 மி.மீ. விட்டமே உள்ள நம் விழிக்கோளம், மூன்றடுக்குப் படலத்தால் ஆனது. ‘வெண்விழி’ (Sclera) மேலடுக்கு. ‘விழிக்கரும்படலம்’ (Choroid) நடு அடுக்கு. ‘விழித்திரை’ (Retina) உள்ளடுக்கு. கண்ணின் முன்பக்கத்தில் காணப்படும் வெண்விழியானது ‘விழிவெண்படலம்’ (Conjunctiva), ‘கார்னியா’ (Cornea) என இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது.

கண்ணில் வெள்ளையாகத் தெரிவது, விழிவெண்படலம். இமைக்கு உட்புறத்திலும் இது படர்ந்துள்ளது. வெண்விழியின் மீது ஒரு போர்வைபோல் மூடியுள்ள மெல்லிய சவ்வு இது; கண்ணுக்குப் பாதுகாப்பு தருகிறது. இதில் சுரக்கும் ‘மியூக்கஸ்’ திரவம் கண்ணை ஈரமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

கண்ணின் மையத்தில் கறுப்பாகவும் வட்டமாகவும் தெரிவது ‘கருவிழி’ (Iris). விழிக்கரும்படலத்தின் தொடர்ச்சி இது. இதில் உள்ள ரத்தக்குழாய்கள்தான் கண்ணுக்கு ரத்தம் கொடுக்கின்றன.

கைக்கடிகாரத்தை மூடியிருக்கும் கண்ணாடிபோல் கருவிழியை மூடியிருக்கும் சவ்வு, ‘கார்னியா’. வெளியிலிருந்து வரும் ஒளிக்கதிர்களை வரவேற்கும் ‘நுழைவாயில்’ இது. இதற்கு நிறம் கிடையாது. இதில் ரத்தக்குழாய்களும் இல்லை. இதனால், ஒளிக்கதிர்கள் எளிதாகக் கண்ணுக்குள் நுழைய முடிகிறது. வெண்விழியில், விழிவெண்படலமும் கார்னியாவும் இணைகின்ற வட்டப் பகுதி, ‘விழிச்சந்தி’ (Limbus).

கண்ணுக்கு நிறம் தருவது கார்னியா இல்லை. இதற்குப் பின்புறம் உள்ள கருவிழியின் நிறம்தான் கார்னியா வழியாகத் தெரிகிறது. கருவிழியானது கறுப்பு, நீலம், பச்சை, மாநிறம்… என ஏதேனும் ஒரு நிறத்தில் அமைந்திருக்கும். கருவிழி கறுப்பாக இருந்தால், கறுப்பு விழிகள். அது நீல நிறத்தில் இருந்தால், ‘நீல விழிகள்’. இந்தியர்களுக்குப் பெரும்பாலும் கறுப்பு நிறக் கண்கள்தான்.

கார்னியாவில் கருவிழிக்கு நடுவில் வட்ட வடிவில் ஓர் ஓட்டை தெரிகிறது, பாருங்கள். அது ‘விழிப்பாவை’ (Pupil). இது எப்போதும் ஒரே அளவாக இருக்காது. உள்ளே நுழைகிற ஒளிக்கதிர்களின் அடர்த்தியைப் பொறுத்து இது சுருங்கி விரியும் தன்மையுடையது. இதனால் விழிப்பாவையின் அளவும் பெரிதாகவோ சிறிதாகவோ ஆகலாம்.

அதிக வெளிச்சத்தில் விழிப்பாவைச் சிறிதாகச் சுருங்கிக்கொள்ளும். வெளிச்சம் குறைந்த நேரத்திலும், இருட்டாக இருக்கும்போதும் அது பெரிதாக விரிந்து கொடுக்கும். தாங்க முடியாத அளவுக்கு ஒளி கண்ணுக்குள் நுழையும்போது, கண்ணின் பாதுகாப்பு கருதி, ஓர் அனிச்சைச்செயலாக இமைகள் கண்களை மூடிக்கொள்ளும். நண்பகலில் சூரியனைப் பார்க்கச் சிரமப்படுவது இதனால்தான்.

கண்ணீர் ஏன் சுரக்கிறது?

கண்ணின் இயக்கத்துக்குக் கண்ணில் சரியான அளவில் ஈரப்பசை இருக்க வேண்டும். கண்களை நாம் திறந்து வைத்திருக்கும்போது, காற்று பட்டு கண்கள் உலர்ந்துவிடும். அல்லது காற்றில் வரும் தூசு, துரும்பு, கிருமி என ஏதாவது பட்டு கண்களைப் பாதிக்கும். இந்த நிலைமைகளைத் தவிர்க்கவே கண்களில் கண்ணீர் சுரக்கிறது.

shutterstock_673168258 [Converted]_colright

கண்ணீரானது ஒரு மசகுபோல் வேலை செய்து கண்களை எப்போதும் ஈரமாகவும் மிருதுவாகவும் வைத்துக்கொள்வதால், இமைகளை நாம் மூடித் திறப்பது எளிதாகிறது. மேலும், அது கண்ணில் படும் அந்நியப் பொருட்களை உடனுக்குடன் அகற்றிவிடுகிறது. கண்ணீரில் உள்ள ‘லைசோசைம்’ என்சைம் அந்நியப் பொருள்களோடு ஒட்டிக்கொண்டுவரும் கிருமிகளைக் கண்ணுக்குள் நுழையவிடாமல் தடுத்துவிடுகிறது. கார்னியாவுக்குத் தேவையான ஆக்ஸிஜனைத் தருவதும் கண்ணீரே.

கண்ணீர் எப்படிச் சுரக்கிறது?

கண்ணீரைச் சுரப்பது, கண்ணீர்ச் சுரப்பிகள். ஒவ்வொரு கண்ணிலும் மேற்புறத்தில் ஒரு கண்ணீர்ச் சுரப்பி (Lacrimal gland) உள்ளது. இது சில சொட்டுக் கண்ணீரை எப்போதும் சுரந்துகொண்டிருக்கும். சாதாரணமாக ஒரு நாள் முழுவதும் சுமார் ஒரு மில்லி கண்ணீர்தான் சுரக்கிறது. ஆனால், கண்ணில் உறுத்தல் ஏற்பட்டாலோ, உணர்ச்சி வேகத்தில் அழுதாலோ அதிகமாகக் கண்ணீர் சுரக்கும்.

கண்ணீர்ச் சுரப்பிகள் மட்டுமல்லாமல் விழிவெண்படலத்திலும் இமைகளிலும் உள்ள துணைச் சுரப்பிகளும் சிறிதளவு கண்ணீரைச் சுரக்கின்றன. இப்படிச் சுரந்த கண்ணீரானது மூக்கின் அருகாமைக்கு வருகிறது. அங்கிருந்து இரண்டு சிறு குழாய்கள் புறப்பட்டு, பின் ஒன்று சேர்ந்து, கண்ணீர்ப் பையில் (Lacrimal sac) முடிகிறது. இதிலிருந்து ஒரு குழாய் புறப்பட்டு மூக்கினுள் முடிகிறது. இவ்வாறு உருவான ‘கண்ணீர்ப் பாதை’ வழியாக கண்ணீர் வெளியேறுகிறது. சாதாரணமாகச் சில சொட்டுக் கண்ணீர் மூக்கினுள் வரும்போது நமக்குத் தெரியாது. ஆனால், அதிகமாக அழும்போது மூக்கிலிருந்து நீர் கொட்டும்; மூக்கு அடைத்துக்கொள்ளும்.

கண்களை கேமராவுடன் ஒப்பிடுகிறோமே, அது ஏன்? அடுத்த வாரம் பார்ப்போம்.

(இன்னும் அறிவோம்)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x