Last Updated : 23 Apr, 2018 10:00 AM

 

Published : 23 Apr 2018 10:00 AM
Last Updated : 23 Apr 2018 10:00 AM

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா?

தமிழகத்தின் இரண்டு பிரச்சினை இன்று இந்திய அளவில் பேசப்படும் விவகாரமாகிவிட்டது. ஒன்று காவிரி. மற்றொன்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெறும் போராட்டம்.

முதலாவது அரசியல் சார்ந்தது. அடுத்தது தொழில்துறை சார்ந்தது. எனவே ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை ஆராய்வது சரியாய் இருக்கும்.

பிரச்சினையும் ஸ்டெர்லெட் ஆலையும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் என்றால் அது மிகையல்ல. ஆலை தொடங்க திட்டமிட்ட நாளிலிருந்தே பிரச்சினைதான்.

மகாராஷ்டிராவிலிருந்து தமிழகத்துக்கு…

ஸ்டெர்லைட் ஆலை முதலில் மகாராஷ்டிராவில்தான் அமைவதாக இருந்தது. 1992-ம் ஆண்டு மகாராஷ்டிர தொழில் மேம்பாட்டு கார்ப்பரேஷன் (எம்ஐடிசி) கடலோர மாவட்டமான ரத்னகிரியில் 500 ஏக்கர் நிலத்தையும் ஒதுக்கியது. ஆனால் தாமிர உருக்கு ஆலையை தங்கள் பகுதியில் அமைக்கக் கூடாது என உள்ளூர் மக்கள் போராடத்தொடங்கினர். ஓராண்டு போராட்டம் நடந்தது. ஜூலை 15,1993-ல் ரத்னகிரி மாவட்ட ஆட்சியர் கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்துமாறு ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பினார். நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த மாநில அரசு, ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆராய குழுவை அமைத்தது. அந்தக் குழு இந்த ஆலை அமைந்தால் கடல் வளம் பாதிக்கப்படும், சுற்றுச் சூழலுக்கும் பேராபத்தாக அமையும் என்று அறிக்கை அளித்தது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு அளித்த அனுமதியை மகாராஷ்டிர அரசு ரத்து செய்தது.

பிற மாநில அரசுகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் தொடர்பு கொண்டபோது பெரும்பாலான மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் ஆலை அமைக்க அனுமதிக்கவில்லை. ஆனால் தமிழக அரசோ ஆபத்தை உணராமல் தொழில் வளம் பெருகும் என கடைக்கோடி பகுதியான தூத்துக்குடியில் ஆலை அமைக்க அனுமதி அளித்தது.

1994-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் (டிஎன்பிசிபி) இந்த ஆலை அமைவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்று தடையில்லா சான்று வழங்கியது.

விதி மீறல்

கடல் பகுதியிலிருந்து 25 கி.மீ. தூரத்திற்கு அப்பால் அமைய வேண்டும் என்ற விதியை முதலிலேயே இந்நிறுவனம் மீறியது. ஆலை 14 கி.மீ.பரப்பிற்குள்ளாகவே அமைத்தது. அக்டோபர் 14, 1996-ல் ஆலை செயல்படுவதற்கான அனுமதியை தமிழ்நாடு சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அளித்து ஆபத்துகளுக்கு பிள்ளையார் சுழி போட்டது.

மே 5, 1997-ல் இந்த ஆலையை ஒட்டி அமைந்திருந்த ரமேஷ் பிளவர் எனும் ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றிய 2 பெண் பணியாளர்கள் மயங்கி விழுந்தனர். ஆனாலும் இதில் ஸ்டெர்லைட் மீது எந்த பிழையும் இல்லை என நற்சான்று அளித்தது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்.

சுற்றுச்சூழலுக்கான தேசிய அறக்கட்டளை சார்பில் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மையம் (நீரி) ஸ்டெர்லைட் ஆலை எந்த அளவுக்கு சூழலை பாதிக்கிறது என்று அறிக்கை தாக்கல் செய்தது. அதில் பசுமை பரப்பை மேம்படுத்தவில்லை, அனுமதி பெறாத பொருள்களை தயாரிப்பது, நிலத்தடி நீர் ஆர்செனிக், துத்தநாகம், செலினியம், அலுமினியம், தாமிரம் போன்ற தாதுக்களால் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டது. காற்று மாசை அளவிடும் கட்டுப்பாட்டு கருவியில் தில்லு முல்லு செய்ததையும் அது குறிப்பிட்டது. இதன் காரணமாகவே மின் வாரிய ஊழியர்கள், ரமேஷ் பிளவர் நிறுவன பணியாளர்கள் உடல் நலன் பாதிக்கப்பட்டதையும் சுட்டிக் காட்டியது. இதனால் ஆலை செயல்பாடு நிறுத்தப்பட்டது.

ஆனால் ஒரு வாரத்திலேயே ஆலை (டிசம்பர் 1, 1997) செயல்பட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. நாகபுரியில் உள்ள நீரி அமைப்பு மீண்டும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. 1999-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை நீரி அமைப்புக்கு ரூ. 1.27 கோடி அளவுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. இதற்கு பிரதிபலனாக ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு ஆதரவாக நீரி அறிக்கை தாக்கல் செய்தது.

தொடர்ந்து ஆலைக்கெதிராக உள்ளூர் மக்கள் போராடியபோதிலும் ஆலைக்கு ஆதரவான நிலையையே தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும், மாவட்ட நிர்வாகமும் எடுத்தன. ஆண்டுக்கு 70 ஆயிரம் டன் தாமிரம் சுத்திகரிக்கலாம் என்ற அனுமதியை அளித்தது. ஆனால் ஸ்டெர்லைட் ஆலையின் உற்பத்தி 1.75 லட்சம் டன் என்ற அளவை எட்டியிருந்தது.

2004-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் நியமித்த கண்காணிப்புக் குழு ஆலையை ஆய்வு செய்தது. ஆலை விரிவாக்கம் செய்ய அதாவது ஆண்டு உற்பத்தி 3 லட்சத்தை எட்டுவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகளை நிறுத்துமாறு கூறியது. ஆனால் அடுத்த இரண்டு நாள்களில் அதாவது செப்டம்பர் 24-ல் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் விரிவாக்க நடவடிக்கைக்கு அனுமதி அளித்தது.

இந்த ஆலை வளாகத்தில் தாமிரம் உருக்கு ஆலை மட்டுமின்றி, கந்தக அமிலம், பாஸ்பரிக் அமிலம் உற்பத்தி ஆலைகளும் உள்ளன. கந்தக ஆலை, பாஸ்பரிக் ஆலை வளாகம் கட்டுவதற்கு எந்தவித கட்டுமான முன் அனுமதியையும் இந்நிறுவனம் பெறவில்லை.

விதிமீறலின் மொத்த உருவம்

விதிகள் எதையுமே ஸ்டெர்லைட் ஆலை பின்பற்றவில்லை என்பது அதன் செயல்பாடுகளிலிருந்தே தெரியும். அடுத்து தினசரி 900 டன் தாமிர உற்பத்தியை 1,200 டன்னாக 2008-ல் ஸ்டெர்லைட் உயர்த்தியது.

உள்ளூர் மக்களின் எதிர்ப்பு நாளுக்கு நாள் வலுவடையவே தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் விதிமீறல் நடவடிக்கைக்காக ஆலையை ஏன் மூடக் கூடாது என்று விளக்கம் கேட்டு ஒரு நோட்டீஸை அனுப்பியது.

ஆனால் 1996-ம் ஆண்டு சுத்தமான சூழலுக்கான தேசிய அறக்கட்டளை தாக்கல் செய்திருந்த மனு மீது செப்டம்பர் 28, 2010-ல் சென்னை உயர்நீதிமன்றம் ஆலை செயல்பாடுகளை நிறுத்துமாறு உத்தரவிட்டது.

ஆனால் இந்த உத்தரவு ஒரு வாரம் கூட நீடிக்கவில்லை. அக்டபோர் 1-ம் தேதி உச்ச நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடைவிதித்து ஆலையை தொடர்ந்து செயல்பட அனுமதித்தது. இதுவரையில் ஆலை பணியாளர்கள் உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். ஆனால் தினசரி கண் எரிச்சல், வாந்தி, மயக்கம், ஒவ்வாமை போன்ற நோய்களோடு வாழ்வோர் ஏராளம்.

போராட்டம் 2

2013-ம் ஆண்டு ஆகஸ்ட் 13, ஒடிசா மாநிலத்தில் பழங்குடி இனமக்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இங்குள்ள நியாம்கரி மலைப் பகுதியில் பாக்ஸைட் தாது வெட்டியெடுக்க சுரங்கம் அமைக்கலாமா, வேண்டாமா என்பதற்காக இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

பாக்ஸைட் சுரங்கம் அமைக்கவிருந்ததும் வேதாந்தா குழுமம்தான். 250 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் சுரங்கம் அமைக்க ஒடிசா மாநிலஅரசு அனுமதி அளித்திருந்தது.

இங்கிருந்து பாக்ஸைட் தாதுவை வெட்டியெடுத்து அதை பிரித்தெடுப்பதற்கான ஆலையை ரூ.5 ஆயிரம் கோடி முதலீட்டில் காளஹந்தி எனுமிடத்தில் லாஞ்சிகரில் அமைத்துவிட்டது.

இப்பகுதி மலைவாழ் மக்கள் நடத்திய போராட்டம் காரணமாக, மக்களின் கருத்துக்கேற்ப முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் அறிவித்துவிட்டது.

இந்த மலைப்பகுதியைச் சுற்றியுள்ள 112 கிராமங்களில் 12 கிராமங்கள் 1.5 கி.மீ சுற்றளவில் அமைந்துள்ளன. இப்பகுதிமக்கள் வாக்கெடுப்பில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். அனைத்து கிராம மக்களுமே சுரங்கம் அமைக்கக் கூடாது என ஏகமனதாக வாக்களித்தனர்.

இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகமும் சுரங்கம் அமைக்க அனுமதி அளித்திருந்ததுதான்.

ஆனால் உள்ளூர்மக்களின் எதிர்ப்பு காரணமாக பாக்ஸைட் சுரங்கம் அமைக்க முடியாமல் போனது.

நாட்டிலேயே அதிக கனிம வளம் மிக்க மாநிலங்களில் ஒன்றுதான் ஒடிசா. இந்தியாவில் பாக்ஸைட் கனிம வளத்தில் 50 சதவீதம் இங்குதான் உள்ளது.

இங்கு ஆலை அமைக்க வேதாந்தா குழுமம் மட்டுமல்ல, கொரியாவைச் சேர்ந்த போஸ்கோ ஆலையும் முயற்சித்தது. அதேபோல உருக்கு ஆலை அமைக்க லட்சுமி மிட்டலுக்கு சொந்தமான ஆர்சிலர் நிறுவனமும் முயற்சித்தது. ஆனால் உள்ளூர் மக்களின் தொடர் போராட்டம் காரணமாக இந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன.

இப்போது சொல்லுங்கள் மலைவாசி மக்கள் மத்தியில் இருக்கும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு படித்த மக்கள் மத்தியில் இல்லை என்பதுதானே.

எதற்கெடுத்தாலும் மேலை நாடுகளை உதாரணம் காட்டிப் பேசும் நம் நாட்டு அரசியல்வாதிகள், அங்கு இதுபோன்ற ஆலைகள் எங்கு அமைந்துள்ளன என்று பார்த்த பிறகு முடிவெடுக்கலாமே.

நம்மவர்களுக்கு எப்போதுமே கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்துதான் பழக்கம் போலும். இனிமேலாவது ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்குமா?

யார் இந்த அனில் அகர்வால்

பிகார் மாநிலத்தில் பழைய இரும்பு வியாபாரியாக தனது தொழிலைத் தொடங்கியவர்தான் இன்று வேதாந்தா குழுமத்தின் நிறுவனர் அனில் அகர்வால். ஒரு காலத்தில் அரசு நிறுவனங்களாக இருந்த பால்கோ, நால்கோ, மால்கோ ஆகிய நிறுவனங்கள் அனைத்துமே இப்போது அனில் அகர்வால் வசமாகியுள்ளது. இன்று அவரது சொத்து மதிப்பு ரூ. 21,485 கோடி. அனைத்து உலோக உற்பத்தியிலும், சுரங்கத் தொழிலிலும் வேதாந்தா ரிசோர்சஸ் ஈடுபட்டுள்ளது. ரிலையன்ஸுக்கு அடுத்தபடியாக கச்சா எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டிருந்த கெய்ர்ன் நிறுவனத்தையும் இந்நிறுவனம் வாங்கியுள்ளது. மின் உற்பத்தியிலும் இக்குழுமம் ஈடுபட்டுள்ளது. எலெக்ட்ரோ ஸ்டீல் நிறுவனத்தை வாங்கவும் வேதாந்தா முயன்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x