Last Updated : 27 Apr, 2018 10:14 AM

 

Published : 27 Apr 2018 10:14 AM
Last Updated : 27 Apr 2018 10:14 AM

ராக யாத்திரை 02 : டைட்டானிக்கும் டங்கா மாரியும்!

ரம்பத்திலேயே டிஸ்கி எனப்படும் ஒரு ‘பொறுப்புத் துறப்பு’ விளக்கம். உயர் நீதிமன்றத்திலே ஒருவரது வழக்கு நடந்துகொண்டிருக்கும். நிமிடத்துக்கு இத்தனை ரூபாய் என ஃபீஸ் வாங்கும் வழக்கறிஞரை வைத்து வழக்கை அவர் நடத்திக் கொண்டிருப்பார். இருந்தாலும், அந்த உயர் நீதிமன்ற வாசலில் உள்ள கிளி ஜோசியரிடம் ஐந்து ரூபாய் கொடுத்து ‘இந்தக் கேஸ் ஜெயிக்குமா?’ எனக் கேட்பார்.

அந்த ‘ஹைகோர்ட் கிளி’ போன்றே அடியேனும் எத்தனையோ இசை அறிஞர்கள் எல்லாம் இருக்கும்போது, முந்திரிக் கொட்டையாக எனக்குத் தெரிந்த காலே அரைக்கால் இசையறிவை வைத்துக்கொண்டு உங்களிடம் ராகங்களைப் பற்றியெல்லாம் பேச வருகிறேன். இது கம்பர் சொன்னதுபோல் பாற்கடல் முழுவதையும் பூனை ஒன்று குடிக்க முயல்வது போன்ற முயற்சியே. திரை யிசையில் ராக நதிகளின் யாத்திரை.

நீங்கள் சரியாகச் சொன்னீர்களா?

உணர்ச்சிவசப்பட்டதில் சென்ற வாரம் கேட்டிருந்த கேள்வியை மறந்து விட்டேன். ‘மிலே ஸுர் மேரா தும்ஹாரா’ என்ற பாடலைக் கேட்கும்போது உங்களுக்கு எந்தப் பாடல்களெல்லாம் நினைவுக்கு வருகின்றன எனக் கேட்டிருந்தேன். ‘வதனமே சந்திர பிம்பமோ’ என்ற எம். கே. தியாக ராஜபாகவதர் ‘சிவகவி’(1943) படப் பாடல் நினைவுக்கு வந்தால் உங்களுக்கு வயது எழுபது, எண்பதுக்கு மேல். இன்னும் கொஞ்சம் இளைய முதியவர்களுக்கு ‘என்னை யார் என்று எண்ணி எண்ணி’ என்ற ‘பாலும் பழமும்’ படப் பாடல் (1961) நினைவுக்கு வந்திருக்கும். இன்னும் இளையவர்களுக்கு ‘உனக்கென்ன மேலே நின்றாய்’ என்ற ‘சிம்லா ஸ்பெஷல் (1982), ‘ஒரு நாளும் உனை மறவாத’ என்ற ‘எஜமான்’ (1993) படப் பாடல்கள் நினைவுக்கு வந்திருக்கும். காரணம் அவையெல்லாமே ஒரே ராகத்தில் அமைந்தவை. ‘சிந்து பைரவி’ எனச் சரியாகச் சொன்னவர்களுக்கு வாழ்த்துகள்.

இப்படித்தான் ஒரே ராகத்தின் அடிப்படையில் அமைந்த திரைப்பாடல் ஒன்றைக் கேட்கும்போது இன்னொன்றை நினைவுபடுத்தும். ராகம் என்றால் என்னவென்றே தெரியாதவர்களுக்குக்கூட இது அடிக்கடி நிகழ்ந்திருக்கும் அல்லவா? அதேநேரம் வேறு மாதிரியும் அனுபவம் ஏற்பட்டிருக்கும். சிவாஜி கணேசனின் ‘நவராத்திரி’, ‘கௌரவம்’ போன்ற திரைப்படங்களில் வெவ்வேறு வேடங்களில் அவர் நடித்திருப்பதை, சிவாஜியைத் தெரியாதவர்கள் பார்த்தால் அவ்வேடங்களிலெல்லாம் நடித்திருப்பவர் ஒரே நடிகர்தான் என்பதை எளிதில் நம்ப மாட்டார்கள்.

இந்த இடத்தில் ராகத்துக்கும் மெட்டுக்கும் உள்ள வித்தியாசத்தைத் தெரிந்துகொள்வது அவசியம். மெட்டு என்பதை ட்யூன் என்று சொல்கிறோம். அது இலக்கணப்படிதான் இருக்க வேண்டும் என்றில்லை. ஒரு மெட்டு ராக அடிப்படையில் அமைய வேண்டியதில்லை. ஆனால், ராகம் என்பது இசை இலக்கணம்.

ஏழுக்குள் எல்லாம் அடக்கம்!

‘இந்தச் சம்பவம் சம்பவம் என்று சொல்கிறீர்களே. அது என்ன?’ என நீங்கள் கேட்பது போல் ‘இந்த ராகம் ராகம் என்கிறீர்களே அது என்ன சார்?’ எனக் கேட்பது கேட்கிறது. இசை என்பது முறைப்படுத்தப்பட்ட ஓசைதானே? எந்த வகை இசை என்றாலும் ஒலியியல் அமைப்புப்படி ஏழு ஸ்வரங்களே அடிப்படை. எப்படி எந்த மொழி, இனமாக இருந்தாலும் எண்ணிக்கையின் அடிப்படை ஒன்று முதல் ஒன்பதுவரையிலான எண்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளதே அது போல.

ராக யாத்திரை லோகோ_colright

இந்த ஏழு ஸ்வரங்களை ஒரு ‘ஆக்டேவ்’ அல்லது ‘ஸ்தாயி’ என்கிறோம். ‘ஸரிகமபதநி’ என்று கர்னாடக இசையில் அழைக்கிறார்கள். ஒலியியல் படி ‘ஸா’விலிருந்து ஒவ்வொரு ஸ்வரமும் அதிர்வெண் (ஃப்ரீக்வன்ஸி ) கூடிக்கொண்டே போய் ‘நி’ எனப்படும் நிஷாதத்தில் ஒரு சுற்று முடியும். ‘நி’ க்கு அடுத்து அடுத்த சுற்று ஸ்தாயி ஆரம்பம்.

அதாவது அடுத்த ‘ஸ்’ அடுத்த ‘ரி’. முந்தைய ஸ்தாயி ஸாவைவிட அடுத்த சுற்று ஸாவின் அதிர்வெண் இரு மடங்காகிறது. அதாவது கீழ் ஸ்தாயி ஸ் X 2 = அடுத்த ஸ்தாயி ஸ. கிட்டத்தட்ட முன்பே சொன்ன எண்களின் உதாரணப்படி ஒன்று இரண்டு என எண்கள் கூடிக்கொண்டே வந்து பத்துக்குப் பின் மீண்டும் அடுத்த சுற்று அதே எண்களை வைத்துக்கொண்டு வருவதைப் போல. இருபது என்பது இரண்டு பத்துக்கள். முப்பது என்பது மூன்று பத்துக்கள்.

ரொம்ப டெக்னிக்கலாகப் பேசி விட்டோமோ? இப்போதைக்கு ஏழு ஸ்வரங்கள் இருக்கு. அதை வைத்துக் கொண்டு எந்த இசையையும் உருவாக்க முடியும். டைட்டானிக் பின்னணி இசையானாலும் ‘டங்காமாரி ஊதாரி’ பாடலாயினும் ‘ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு’ ஆயினும் அதே ஏழுதான். ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்?

கேள்வியோடு முடிப்போமா ...? ‘அபூர்வ ராகங்கள்’( 1975) படத்தில் இடம்பெற்ற ‘ஏழு ஸ்வரங்களுக்குள்’ பாடல் எந்த ராகம்?

தொடர்புக்கு:ramsych2@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x