Published : 20 Feb 2018 10:49 AM
Last Updated : 20 Feb 2018 10:49 AM

வரலாறு தந்த வார்த்தை 19: கை சுத்தமா நீங்க?

ல்வி என்பது என்றும் குறையாத செல்வம் என்பார்கள். ஆமாம், கல்விதான் பணம் சம்பாதிப்பதற்கான அட்டகாசமான பிசினஸ். அதுவும், பள்ளிகளை பரப்பிய ஏழைத் தலைவன் பிறந்த மாநிலத்தில், அந்த வியாபாரம் அமோகமாக நடப்பதுதான் வேதனை.

சமீபத்திய உதாரணம், பாரதியார் பல்கலைக்கழகம் தொடங்கி அடுத்தடுத்துப் பல்வேறு பல்கலைக்கழகங்களில் நடைபெற்றுவரும் ஊழல்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத் தொடங்கியிருப்பது. மாணவர்களுக்குக் கற்றுத் தருவதற்கு அவர்களிடமிருந்து காசு வாங்குவது நியாயம்தான். ஆனால், கற்றுத் தரும் ஆசிரியரை நியமிக்க, அவரிடமே காசு வாங்குவது, துரோணாச்சாரியாரிடம் இருந்தே கட்டை விரலை வாங்குவதற்குச் சமம். ‘லஞ்சம் வாங்கும்போது, துணைவேந்தர் கையும் களவுமாகப் பிடிபட்டார்’ என்ற செய்திதான் கடந்த சில வாரங்களாக பரபரப்பாகப் பேசப்பட்டது. அது குறித்து யோசித்துப் பார்த்தால், நம் கல்வித்துறை எவ்வளவு தூரம் சீரழிந்து கிடக்கிறது என்பது புரியும். அதைப் பிறகு யோசிங்கள். இப்போது நம் விஷயத்துக்கு வாருங்கள்.

ஒருவர் ஒரு குற்றத்தைச் செய்துவிட்டுத் தப்புவதற்குள், அவர் வேறு யாரிடமாவது மாட்டிக்கொண்டால், அவர் ‘கையும் களவுமாக’ பிடிபட்டார் என்று சொல்கிறோம் அல்லவா? இங்கு ‘கையும் களவுமாக’ என்ற சொலவடை இருப்பதுபோல, ஆங்கிலத்தில் அதற்கு நிகராக ஒரு சொற்றொடர் இருக்கிறது. ‘Caught red-handed’ என்பதுதான் அந்தச் சொற்றொடர்.

சாட்சியம் இல்லாத காலம்

15-ம் நூற்றாண்டில் ஸ்காட்லாந்தில் யாராவது ரத்தம் படிந்த கைகளுடன் நடமாடினால், அவரை ‘ஏன்? எப்படி? யார்? எதற்கு?’ என்று விசாரிக்காமல் உடனே சிறையில் தள்ளிவிடுவார்களாம். அவருக்கும் கொலைக்கும் தொடர்பே இருக்காது. கொலை நடந்த பிறகு, அந்த இடத்துக்கு யதேச்சையாகச் சென்றவர், பதற்றமடைந்து, கொலையுண்டவரைப் பிடித்து உலுக்கியிருப்பார். அப்போது, அவர் கைகளில் எதிர்பாராதவிதமாக ரத்தம் படிந்திருக்கும். உடனே அங்கிருந்து ஓடிச் சென்று, தனக்குத் தெரிந்தவர்களுக்குத் தகவல் தர முயன்றிருப்பார். ஆனால் அதற்குள், காவலர்கள் அவரைச் சிறையில் தள்ளிவிடுவார்கள்.

அன்றைக்கு இருந்த சட்ட நடைமுறைகளில், ‘சாட்சியம்’ என்ற விஷயம் பல நாடுகளில் பின்பற்றப்படவில்லை. இதனால் நிரபராதிகள் பலர் தண்டனைக்கு உள்ளானார்கள். நாளடைவில், கல்வி அறிவு பெருகப் பெருக, கலாச்சார மாற்றங்கள் நிகழ நிகழ, சட்டமும் தன்னைப் புதுப்பித்துக்கொண்டது.

பல காலமாக மேற்கண்ட சொற்றொடர் ஸ்காட்லாந்து மக்களிடையே புழக்கத்திலிருந்து வந்தாலும், அதை முதன்முதலில் அச்சில் பதிவுசெய்தவர் சர் வால்டர் ஸ்காட் எனும் எழுத்தாளர். அவரது ‘இவான்ஹோ’ என்ற நாவலில்தான் இந்தப் பதம் தென்படுகிறது.

உலகிலேயே மிகவும் திறமைவாய்ந்த காவல்துறையாக ஸ்காட்லாந்து போலீஸாரைச் சொல்வார்கள். அவர்களே, இப்படி ஒரு சொற்றொடரைக் குற்றவியல் துறைக்கு வழங்கியிருப்பது மிகவும் சுவாரசியமானதாக இருக்கிறது, இல்லையா? இதை மறப்பதற்குள் இந்தக் கேள்வியை உங்கள் மனதுக்குள் நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்: “நீங்கள் கை சுத்தம் மிக்கவர்தானே?”

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x