Published : 21 Feb 2018 10:45 AM
Last Updated : 21 Feb 2018 10:45 AM
செ
ரிமான மண்டலத்தின் கோட்டைச் சுவர் வாய். இதில் உதடுகள், பற்கள், நாக்கு, உள்நாக்கு, அண்ணம், கன்னம், உமிழ்நீர்ச் சுரப்பிகள் ஆகியன அடங்கும். இந்தக் ‘கோட்டைச் சுவர்’ தேவைக்குத் திறந்து மூடுவதால்தான், காற்றில் கலந்துள்ள மாசு, ஈ, கொசு, எறும்பு, பூச்சி போன்ற ‘எதிரிகள்’ வாய்க்குள் நுழைவது தடுக்கப்படுகிறது.
திரவ உணவை உறிஞ்சிக் குடிக்க உதடுகள் உதவுகின்றன. குழந்தை தாய்ப்பாலை உறிஞ்சுவதன் மூலம் மனிதனின் முதல் செரிமான இயக்கத்தை இவைதான் ஆரம்பித்துவைக்கின்றன. குடிக்கும்போது தம்ளரைத் தாங்கவும், கன்னம், நாக்கு, பற்கள் ஆகியவற்றின் துணையுடன் உணவை மெல்லவும், அரைக்கவும் இவை உதவுகின்றன. நன்றாகப் பேசவும் பாடவும் உதடுகளின் உதவி கட்டாயம். உதடுகள் இல்லாவிட்டால் நாகஸ்வரம் வாசிக்க முடியாது.
நமக்கு 32 பற்கள் இருக்கின்றன. இவை நிரந்தரப் பற்கள். சிறு குழந்தையாக இருக்கும்போது முளைத்து, பிறகு விழுந்துவிடும் பற்கள் ‘பால் பற்கள்’ (Milk teeth). இவை வாயின் கீழே 10, மேலே 10 என மொத்தம் 20 இருக்கும்.
குழந்தைக்கு ஆறு மாதம் ஆகும்போது ஒவ்வொன்றாக முளைக்கத் தொடங்கி, இரண்டரை வயதுக்குள் எல்லாப் பற்களும் முளைத்துவிடும். பிறகு, 5 வயதில் விழத் தொடங்கி, 13 வயதுக்குள் எல்லாப் பால்பற்களும் விழுந்துவிடும். அந்த இடத்தில் புதிதாக முளைக்கும் பற்கள், ‘நிரந்தப் பற்கள்’. இவை ஏழு வயதில் முளைக்கத் தொடங்கும். மேலே 16, கீழே 16 என மொத்தம் 32 பற்கள் இருக்கும். இவற்றின் அமைப்பையும் பயன்பாட்டையும் வைத்து நான்கு வகையாகப் பிரித்துள்ளனர்.
ஒவ்வொரு வரிசையிலும் நடுவில், முன்பக்கம் இருக்கும் நான்கு பற்கள் ‘வெட்டுப் பற்கள்’ (Incisors). இவற்றையடுத்து, பக்கத்துக்கு ஒன்றாக, சிறிது கூர்மையாக இருப்பவை, கோரைப் பற்கள் (Canines). ஒவ்வொரு பக்கத்திலும் கோரைப் பல்லுக்கு அடுத்ததாக, அகலமாக இருக்கும் 2 பற்கள், முன் கடைவாய்ப் பற்கள் (Pre molars); அவற்றுக்குப் பின் இருக்கும் அகலமான 3 பற்கள், பின் கடைவாய்ப் பற்கள் (Molars).
ஒவ்வொரு பக்கத்திலும் கடைசிக் கடைவாய்ப் பல் 15 வயதுக்கு மேல்தான் முளைக்கத் தொடங்கும். அவை ‘அறிவுப் பற்கள்’ (Wisdom teeth) .
ஒவ்வொரு பல்லிலும் வெண்நிறத்தில் வெளியில் தெரியும் பகுதி ‘மகுடம்’ (Crown). ஈறுக்குள் புதைந்திருக்கும் பகுதி வேர் (Root). பல்லின் மகுடத்துக்கும் வேருக்கும் நடுவில் உள்ளது, கழுத்து. பற்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வேர்களைக் கொண்டுள்ளன. மேல் வரிசைப் பற்களை மேல் தாடை எலும்பும், கீழ் வரிசைப் பற்களை கீழ்த் தாடை எலும்பும் தாங்கிக்கொள்கின்றன. தாடை எலும்பில் உள்ள குழிகளில்தான் பற்கள் புதைந்துள்ளன.
தாடையில் பல் திசுவைத் தக்கவைக்கும் பணியையும், உணவைக் கடிக்கும்போது ஏற்படும் அழுத்தத்தைத் தாங்கிப் பற்களைப் பாதுகாக்கும் பணியையும் ‘பல் புறத்திசுப் பிணையம்’ (Periodontal ligament) மேற்கொள்கிறது.
ஈறின் அடிப்பாகத்திலிருந்து, ஒவ்வொரு பல்லின் நடுவிலும் நரம்புகளும் ரத்தக் குழாய்களும் ஓடுகின்றன. இந்தப் பகுதிக்குக் ‘கூழ்’ (Pulp) என்று பெயர். இதைச் சுற்றி ‘பல் திசு’ (Dentine) எனும் கடினமான பகுதி உள்ளது. அதற்கும் வெளியில் பல்லுக்கு ஓர் உறைபோல் உள்ளது, எனாமல் (Enamel) எனும் பற்சிப்பி. பல்லுக்கு வெண்நிறம் தருவது இதுதான். பல்லின் வேர்ப் பகுதியும் பல் திசுவும் எலும்புத் தன்மை கொண்ட ‘பற்காரை’யால் (Cementum) மூடப்பட்டுள்ளது. எனாமல் சூழ்ந்த பற்சிகரம்தான் நம் உடலிலேயே மிகவும் கடினமான பகுதி.
ஊன் உண்ணும் உயிரினங்கள் எல்லாவற்றுக்கும் வெட்டுப் பற்கள்தான் உணவைக் கடிக்கும் பற்கள். கூர்மையான கோரைப் பற்கள் உணவைக் கிழிப்பதற்குப் பயன்படுகின்றன. முன் கடைவாய்ப் பற்களும் கடைவாய்ப் பற்களும் உணவை அரைக்க உதவுகின்றன.
தாவர உண்ணிகளுக்குத் தாவர உணவைப் பிடிப்பதற்கும் உரிப்பதற்கும் ஏற்றவகையில் வெட்டுப் பற்கள் மிகக் கூர்மையாக இருக்கின்றன; கடைவாய்ப் பற்கள் மிக அகலமாகவும் சமதளமாகவும் இருக்கின்றன.
யானையின் தந்தம் உண்மையில் பல்தான். உயிரினங்களிலேயே அதிக எண்ணிக்கையில் பற்களைக் கொண்டது, நத்தை. இது 15,000 நுண்பற்களைக் (Micro teeth) கொண்டுள்ளது. உலகிலேயே ‘லிம்பெட்’ (Limpet) எனும் கடல் நத்தையின் பல்தான் அதிக பலம் கொண்டது. முயலின் பற்கள் எப்போதும் வளர்ந்துகொண்டிருக்கும் தன்மையைப் பெற்றுள்ளன. வெள்ளாடு பிறக்கும்போதே 8 பற்களுடன் பிறக்கிறது. பறவைகளுக்குப் பற்கள் இல்லை; பதிலாக, அலகு இருக்கிறது.
புலி உள்ளிட்ட பூனையினத்தைச் சேர்ந்த விலங்கினங்களுக்குக் கடைவாய்ப் பற்கள் சிறிதாகவும் கூர்மையாகவும் இருக்கும். சுறா மீன்களுக்குப் பற்கள் பலமுறை விழுந்து முளைத்துக்கொண்டிருக்கும். அவ்வாறு அதன் வாழ்நாளில் மொத்தம் 50,000 பற்கள் முளைத்திருக்கும். டால்பின்களுக்கு 200 பற்கள் இருக்கும்.
திமிங்கிலங்களில் பற்கள் உள்ளவை, பற்கள் இல்லாதவை என இரு வகை உண்டு. விலங்குகளிலேயே அதிக நீளம் கொண்ட கோரைப் பற்களைக் கொண்டது, சிறுத்தைப் புலி. அதன் நீளம் இரண்டு அங்குலம்.
நாக்கு மற்றும் உமிழ்நீர்ச் சுரப்பிகள் குறித்து அடுத்த வாரம் பார்க்கலாம்.
(இன்னும் அறிவோம்)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: gganesan95@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!