Last Updated : 14 Feb, 2018 11:08 AM

 

Published : 14 Feb 2018 11:08 AM
Last Updated : 14 Feb 2018 11:08 AM

இடம் பொருள் மனிதர் விலங்கு: பேனா தயாரிப்பது எப்படி?

 

ல்லோருமே எழுதுவதை நிறுத்திவிட்டார்கள் என்பதைக் கவனித்திருக்கிறீர்களா? என்னது பேனாவா, அதை வைத்துக்கொண்டு என்ன செய்ய என்று கேட்பவர்கள்தான் இன்று அதிகம். பென்சில் மறந்தேவிட்டது. மை ஊற்றி எழுதும் பேனா தெரியுமா என்று கேட்டால், ஓ சின்ன வயதில் பார்த்திருக்கிறேனே என்றுதான் சொல்வார்கள். அவ்வளவு ஏன், பெரிய பெரிய எழுத்தாளர்கள்கூட எழுதுவதை நிறுத்திவிட்டார்கள். எல்லாவற்றுக்கும் கம்ப்யூட்டர்தான்.

அப்படியானால் எழுத்தாளர் என்று யாரையுமே இன்று அழைக்க முடியாதா? முடியும். மாணவர்களை மட்டும்தான் அப்படி அழைக்க முடியும். காரணம் அவர்கள் மட்டும்தான் கையில் பேனா அல்லது பென்சில் பிடித்து வீட்டுப் பாடம், தேர்வு என்று ஆண்டு முழுக்கப் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். யார் கண்டது? இன்னும் கொஞ்சம் காலம் போனால் அவர்களும் பேனாவை விட்டுவிட்டு முழுக்க கம்ப்யூட்டருக்கு மாறிவிடலாம். இப்படி எல்லோரும் பேனாவை மறந்துவிட்டால் அது பாவம் இல்லையா?

இத்தனைக்கும் ஒரு காலத்தில் பேனாதான் உலகையே ஆண்டுகொண்டிருந்தது! சாதாரண பேனா அல்ல இறகு பேனா. இன்று நாம் பயன்படுத்தும் பால் பாயிண்ட் அல்லது மை பேனாவின் தாய் இதுதான். விதவிதமான பறவை இறகுகளைப் பயன்படுத்தி இன்று நாம் எழுதுவதைவிடவும் அப்போது அதிகம் எழுதியிருக்கிறார்கள். கடிதம் எழுதவேண்டுமானாலும் சரி, கவிதை எழுதவேண்டுமானாலும் சரி, முத்து முத்தான கையெழுத்தில் அழகாக இறகு கொண்டு எழுதிவிடுவார்கள்.

அடடா! நமக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று வருந்த வேண்டாம். இந்த இறகு பேனாவை நாமே வீட்டில் உருவாக்கிவிடமுடியும். முதலில் தேவை, ஓர் இறகு. முடிந்தவரை அளவில் பெரிய பறவையின் இறகு கிடைத்தால் நல்லது. நம் முன்னோர்களின் முதல் தேர்வு வாத்து இறகு. ஒரு வாத்தைப் பார்த்தால், அடடா எத்தனை அழகாக நீந்துகிறது என்றுதானே நினைப்போம்.

அவர்களோ அடடா, எத்தனை அழகான பேனாக்கள் அந்த வாத்திடம் இருக்கின்றன. நமக்கு ஒன்று கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று ஏங்குவார்கள்.வாத்துக்கு அடுத்தபடியாக அன்னப் பறவையின் இறகையும் விரும்பிச் சேகரித்தார்கள். நீங்கள் அவ்வளவு தேட வேண்டாம். எது கிடைக்கிறதோ எடுத்துக்கொள்ளுங்கள்.

இறகு என்று ஒரே வார்த்தையில் சொன்னாலும் அதன் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பெயர் இருக்கிறது. இலையில் இருப்பதைப் போல் நடுவில் உள்ள கோட்டுக்கு ஈர் என்று பெயர். அதன் இரு பக்கமும் புஸுபுஸு என்று இருக்கும் பகுதியை விசிறி என்று அழைக்கிறார்கள். கீழ்பகுதியின் பெயர், முருந்து.

14chsuj_idam.jpgright

சரி, இறகு எடுத்துக்கொண்டுவிட்டீர்களா? அதை நன்றாகச் சுத்தம் செய்துகொள்ளுங்கள். குறிப்பாக முருந்து என்னும் கீழ்ப் பகுதி சுத்தமாக இருக்கவேண்டும். அடுத்து, அதன் முனையை கத்தரியுங்கள். ஸ்ட்ரா போல் உள்ளே காலியிடம் இருப்பதைக் காண்பீர்கள். ஒரு கூரான கம்பியை நுழைத்து உள்ளே உள்ள தூசிகளை வெளியேற்றுங்கள்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தைப் போட்டு அதில் மணலைப் பரப்புங்கள். மணல் நன்றாகக் கொதிக்கட்டும். வெயிலில் வெறும் காலோடு கடற்கரை மணலில் நடந்தால் கால் சுடும் அல்லவா, அந்த அளவுக்குக் கை சுடும்வரை மணல் கொதிக்கவேண்டும். பிறகு, இறகை எடுத்து அதற்குள் சூடான மணலை நிரப்புங்கள். அடுத்து, அந்த இறகை மணலோடு சேர்த்து மணலில் புதைத்துவிடுங்கள். இன்னும் நன்றாகச் சூடாகட்டும். சிறிது நேரம் கழிந்து எடுத்துப் பாருங்கள். அடிப்பகுதி மெல்லிய மஞ்சள் நிறத்தில் மாறியிருந்தால் அடுப்பை அணைத்துவிட்டு இறகை வெளியில் எடுத்துவிடலாம்.

விசிறி பகுதி அப்படியே இருக்கும். தண்டுப் பகுதியின் கீழ் பகுதியும் இப்போது உறுதியாக மாறியிருக்கும். அடுத்து நிப் பொருத்தவேண்டும். சிறு கத்தியைக் கொண்டு இறகின் அடிப்பகுதியில் ஒரு கோடு கிழியுங்கள். மை பேனாவில் உள்ள நிப் போல் அந்தக் கோடு இருக்கவேண்டும்.

அவ்வளவுதான், இறகு பேனா தயார். ஆனால் மணலை உள்ளே தள்ளியது போல் மையை உள்ளே நிரப்பி எழுத ஆரம்பித்துவிடலாம் என்று நினைக்காதீர்கள். ஒரு மைக்கூடு எடுத்து பக்கத்தில் வைத்துக்கொள்ளுங்கள். விசிறி பகுதி மேலே இருக்கும். நிப் உள்ள பகுதி கீழே. பேனா பிடிப்பதைப் போலவே இறகை எடுத்து அதன் அடிப்பகுதியைப் புட்டிக்குள் நுழைத்து மையைத் தொடவேண்டும். மெலிதாகத் தொட்டால் போதும்.

பிறகு எழுத ஆரம்பிக்கலாம். கவனிக்கவும். இடம் பொருள் மனிதர் விலங்கு என்னும் நான்கு வார்த்தைகளை எழுதவேண்டுமானால் நான்கு முறைக்கு மேல் மையைத் தொடவேண்டியிருக்கும். எழுத, எழுத மை தீர்ந்துகொண்டே இருக்கும். தொட்டு, தொட்டு ஒவ்வோர் எழுத்தாக நிறுத்தி நிதானமாக எழுதவேண்டும். ஆரம்பத்தில் பல தவறுகள் செய்வீர்கள். அதிக அழுத்தம் கொடுத்து எழுதினால் டர்ரென்று காகிதத்தில் கோடு விழுந்துவிடலாம். அதிக மை தொட்டுவிட்டால் எழுதும்போது ஆங்காங்கே பொட்டுகள் விழுந்துவிடலாம்.

நம்ப மாட்டீர்கள், நிஜமாகவே இது ஒரு புதிய அனுபவமாக இருக்கும். இத்தனை அழகான, மென்மையான பேனாவை நீங்கள் இதற்குமுன் பார்த்திருக்க மாட்டீர்கள். பரவாயில்லையே, என் பழைய இறகை வைத்து, இத்தனை அழகாக எழுதுகிறாயே என்று பறவைகூட மகிழ்ச்சியடையும். மற்றபடி வகுப்பறைக்கு அல்லது தேர்வுக்கு எடுத்துச் சென்று பரிசோதனை செய்யவேண்டாம். நீங்கள் எழுதி முடிப்பதற்குள் வகுப்பறையைப் பூட்டிக்கொண்டு கிளம்பிவிடுவார்கள்.

இறகு பேனாவால் இன்னொரு பயனும் இருக்கிறது. இதென்ன கோழி கிறுக்கலாக இருக்கிறது என்று யாராவது கேட்டால், ‘இது கோழியின் இறகு, அதனால்தான் இப்படி ஆகிவிட்டது’ என்று பழியைத் தூக்கி பேனா மீது போட்டுவிடலாம்!

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x