Published : 28 Feb 2018 11:25 AM
Last Updated : 28 Feb 2018 11:25 AM

டிங்குவிடம் கேளுங்கள்: நிலா நம்மோடு வருவது ஏன்?

வண்டியில் பயணிக்கும்போது நிலாவும் நம்கூடவே வருகிறதே எப்படி, டிங்கு?

-வெ. அதியா, 3-ம் வகுப்பு, அமலா மெட்ரிக் பள்ளி, தருமபுரி.

நல்ல கேள்வி அதியா! தூரமும் கோணமும் இதில் முக்கியப் பங்காற்றுகின்றன. கரூரில் நீங்கள் பார்க்கும் நிலாவை, சென்னையில் நானும் பார்க்கமுடியும். காஷ்மீர், கன்னியாகுமரியிலும் அதே நிலாவைப் பார்க்க முடியும். இதற்குக் காரணம், நிலா வெகு தொலைவில் இருக்கிறது. அதனால் எல்லோர் கண்களுக்கும் தெரிகிறது.

shutterstock152915837 Converted

வாகனத்தில் பயணம் செய்யும்போது நம் அருகில் இருக்கும் கட்டிடங்கள், மரம், செடி, தந்திக் கம்பங்கள் போன்றவை நம்மை வேகமாகக் கடந்து செல்வதுபோல் தோன்றும். ஆனால் நிலா வெகு தொலைவில் இருப்பதாலும் அது நகர்ந்தாலும் கூட வேகமாகக் கோணம் மாறாததாலும் அப்படியே தெரிகிறது.

இதை நம் மூளை நம்முடன் வருவதுபோல் காட்சிப்படுத்திக்கொள்கிறது. உண்மையில் நிலா நம்மோடு வருவதில்லை, அதியா.

தேசிய அறிவியல் நாள் ஏன் கொண்டாடுகிறோம், டிங்கு?

–பி. பாலாஜி, 8-ம் வகுப்பு, வத்தலகுண்டு.

ஓர் ஒளி புகும் ஊடகத்தின் வழியே ஒளி செல்லும்போது, சிதறடிக்கப்பட்டு, அதன் அலைநீளத்தில் மாற்றம் ஏற்படுகிறது என்பதை பிப்ரவரி 28 அன்று சர் சி.வி. ராமன் வெளியிட்டார். இந்தக் கண்டுபிடிப்பு உலகம் முழுவதும் பேசப்பட்டது. இது அவரது பெயராலேயே ’ராமன் விளைவு’ என்று அழைக்கப்பட்டது. 1930-ம் ஆண்டு நோபல் பரிசையும் பெற்றுத் தந்தது.

இந்தியாவில் அறிவியல் கருத்துகளை மாணவர்களிடம் ஊக்குவிக்கும் வகையிலும் புதிய சிந்தனைகளைத் தூண்டும் வகையிலும் 1987-ம் ஆண்டு முதல் பிப்ரவரி 28-ந் தேதியை தேசிய அறிவியல் தினமாக இந்தியா கொண்டாடிவருகிறது, பாலாஜி. ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு தலைப்பில் இந்த அறிவியல் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

28CHSUJ_TINKU சி.வி. ராமன் right

கருத்தரங்கம், வினாடி வினா, கண்காட்சி என்று பலவிதங்களில் அறிவியல் மக்களிடம் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த ஆண்டு தேசிய அறிவியல் நாளுக்கான தலைப்பு ‘எதிர்காலத்துக்கான நிலையான அறிவியல், தொழில்நுட்பம்’.

உனக்கு மேஜிக் தெரியுமா, ஏதாவது ஒரு மேஜிக் சொல்லித் தருவாயா, டிங்கு?

–எஸ். அகல்யா தேவி, 9-ம் வகுப்பு, அரசினர் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்.

எனக்கு ஒரு சில தந்திரங்கள் மட்டுமே தெரியும். அவற்றில் ஒன்றை உங்களுக்காகச் சொல்கிறேன். தேங்காய்க்குள் பூக்களை வரவழைப்பது எப்படி என்று பார்க்கலாம். ஒரு தேங்காயை வாங்கி, அதன் குடுமியை மெதுவாகப் பிய்த்து எடுங்கள். பிய்த்த இடத்தில் மூன்று கண்கள் தெரியும். ஒன்றில் துளையிட்டு தேங்காய்த் தண்ணீர் முழுவதையும் வெளியே கொட்டிவிடுங்கள். பிறகு மல்லிகை அல்லது முல்லை பூக்களை ஒவ்வொன்றாக, அந்தத் துளை வழியே தேங்காய்க்குள் போடுங்கள்.

ஓரளவு போட்ட பிறகு, குடுமியை மீண்டும் தேங்காய் மீது அதே இடத்தில் வைத்து, பசையால் ஒட்டிவிடுங்கள். சற்று நேரத்தில் தேங்காயும் குடுமியும் நன்றாக ஒட்டிக்கொள்ளும். எங்கே மேஜிக் செய்து காட்ட விரும்புகிறீர்களோ, அங்கே சென்று தேங்காயைக் காட்டுங்கள். இந்தத் தேங்காய்க்குள் என்னுடைய மந்திரத்தால் பூக்களை வரவழைப்பேன் என்று சொல்லுங்கள். ஒருவரும் நம்ப மாட்டார்கள்.

அவர்கள் கண் முன் தேங்காயை உடையுங்கள். இரண்டாக உடைந்த தேங்காயிலிருந்து பூக்கள் வெளிவரும். பார்வையாளர்கள் பிரமித்துவிடுவார்கள். இந்த மேஜிக்கைச் செய்து பார்த்துவிட்டு, உங்கள் அனுபவத்தை எழுதி அனுப்புங்கள் அகல்யா தேவி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x