Last Updated : 28 Feb, 2018 11:24 AM

 

Published : 28 Feb 2018 11:24 AM
Last Updated : 28 Feb 2018 11:24 AM

பிரபலக் குதிரைகள்: வெற்றிகளை ஈட்டிய குதிரைகள்!

லெக்ஸாண்டரின் குதிரை பெயர் என்னவென்று கேட்டால் பலரும் சொல்லிவிடுவார்கள். புஸெபெலஸ். நெப்போலியனின் குதிரை பெயர்? சிலருக்குத் தெரிந்திருக்கலாம். மாரங்கோ!

கி.பி. 1800-ல் நெப்போலியன் இத்தாலியப் படையெடுப்பு நடத்திக் கொண்டிருந்தார். அதில் ஆஸ்திரியாவுடனான போர் அலெக்ஸாண்ட்ரியா நகரத்தில் நடந்தது. ஆஸ்திரியப் படைகள் தோற்கடிக்கப்பட்டன. இந்த மாரங்கோ போரில் வென்றதன் மூலம் இத்தாலியில் நெப்போலியனின் கை ஓங்கியது. இந்தப் போர் வெற்றியின் நினைவாக நெப்போலியன், தான் உபயோகித்த, தனக்குச் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்த அரேபியக் குதிரைக்கு மாரங்கோ என்று பெயர் வைத்து கவுரவித்தார்.

28chsuj_horse1.jpgright

நெப்போலியனின் ஓவியங்களில் இடம்பெற்றுள்ள சாம்பல் நிறத்திலான கம்பீரமான குதிரை மாரங்கோதான். நெப்போலியன் தன் உபயோகத்துக்கு 52 குதிரைகளை வைத்திருந்தார். ஆனால், முக்கியமான போர்களில் எல்லாம் உபயோகித்தது மாரங்கோவைத்தான். நெப்போலியன் வீழ்ந்த வாட்டர்லூ யுத்தத்திலும் மாரங்கோதான் பங்கேற்றது.

பலமுறை நெப்போலியனின் உயிரைக் காப்பாற்றிய மாரங்கோ, ரஷ்யாவின் கடும் குளிரிலும் தளராமல் அவரைச் சுமந்து சென்றது. மாரங்கோ மீது அமர்ந்து, ஐரோப்பியக் கண்டத்தின் பெரும்பாலான பகுதிகளுக்குப் பயணம் செய்திருக்கிறார் நெப்போலியன்.

நெப்போலியனின் தோல்விக்குப் பிறகு, மாரங்கோவை இங்கிலாந்தின் வில்லியம் பீட்டர் என்பவர் பிடித்துச் சென்றார். இன்னொரு தளபதிக்கு விற்றார். 38 வயதில் இறந்துபோன மாரங்கோவின் எலும்புக்கூடு, லண்டன் தேசிய ராணுவ அருங்காட்சியகத்தில் இன்றும் பாதுகாக்கப்பட்டுவருகிறது.

ராஜபுத்திரர்களுக்கும் முகலாயர்களுக்கும் இடையே கி.பி. 1576-ல் ராஜஸ்தானின் ஹல்திகாட்டி என்ற இடத்தில் போர் நடந்தது. மேவார் அரசர் மகாராணா பிரதாப் சிங்கின் படைகளும் முகலாயப் படைகளும் மோதின. அதில் ராஜபுத்திரர்களின் படைகள் பின்னடைவைச் சந்தித்தன. உடலெங்கும் காயங்களுடன் பிரதாப் சிங் போரிட்டுக்கொண்டிருந்தார். அவரது குதிரையும் காயங்களுடன்தான் களத்தில் நின்றது.

ஒரு கட்டத்துக்கு மேல், தோல்வி உறுதி என்று தெரிந்த பிறகு, பிரதாப் சிங் களத்திலிருந்து தப்பிக்க நினைத்தார். அது இயலாது என்ற சூழலிலும் அவரது குதிரை நாலு கால் பாய்ச்சலில் சாதுரியமாகப் பிரதாப் சிங்கைக் காப்பாற்றி, பாதுகாப்பாகக் கொண்டு வந்துசேர்த்தது. ஆனால், சிறிது நேரத்திலேயே அந்தக் குதிரை உயிரை விட்டது. பிரதாப் சிங், தனது குதிரையின் அன்பில் சிலிர்த்து நின்றார். அந்தக் குதிரை சேத்தக் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

shutterstock_29438965

ஆனால், சேத்தக் என்பது பிரதாப் சிங் குதிரைக்கு வைத்த பெயர் அல்ல. பிற்காலத்தில் கவிதைகளிலும், இது குறித்த கதைகளிலும் குதிரையின் பெயர் சேத்தக் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘மகாராணா பிரதாப் சிங் நீலக் குதிரையில் வலம் வருவார்’ என்கின்றன அந்தக் கதைகள். ராஜஸ்தானின் உதய்பூரிலும் ஜோத்பூரிலும் இன்னும் சில இடங்களிலும், பிரதாப் சிங் சேத்தக் மீது அமர்ந்திருப்பதுபோல் சிலைகள் வைக்கப்பட்டிருக்கின்றன.

கம்பஸ்கேன் என்ற ஆண் குதிரையை இங்கிலாந்து மகாராணி விக்டோரியா வளர்த்துவந்தார். அந்தக் குதிரை ஹங்கேரிக்கு விற்கப்பட்டது. கம்பேஸ்கேனுக்கும் ஒரு பெண் குதிரைக்கும் பிறந்த குதிரைக் குட்டி, கின்க்செம். கி.பி. 1874-ல் பிறந்த அது, தனது இரண்டாவது வயதில் முதன்முறையாகப் பந்தயத்தில் கலந்து கொண்டது.

அந்த ஆண்டில் ஜெர்மனியிலும் ஆஸ்திரியாவிலும் வெவ்வேறு இடங்களில் நடந்த பத்து பந்தயங்களிலும் கின்க்செம் முதலிடம் பிடித்து வெற்றியுடன் கனைத்தது.

ஐரோப்பியக் கண்டமெங்கும் கின்க்செமின் புகழ் பரவ ஆரம்பித்தது. அது கலந்துகொள்ளும் பந்தயங்கள் எல்லாமே பரபரப்பாகப் பேசப்பட்டன. தன்னை நம்பி பந்தயத்தைக் காண வந்த யாரையுமே கின்க்செம் ஏமாற்றவில்லை. வென்று, மக்களின் மனத்தையும் வென்றது.

தன் வாழ்நாளில் 54 பந்தயங்களில் கின்க்செம் வெற்றி பெற்றிருக்கிறது. அந்தச் சாதனை இதுவரை எந்தக் குதிரையாலும் முறியடிக்கப்படவில்லை. அதனால்தான் கின்க்செம் இன்றைக்கும் புகழுடன் விளங்குகிறது. ஹங்கேரியின் தேசிய அடையாளமாகக் கொண்டாடப்படுகிறது.

கின்க்செம் பந்தயத்தில் எல்லாம் கலந்து கொள்ள ஆரம்பிக்காத சமயம். அதற்கு ஒரு வயது இருக்கலாம். அப்போது ஓர் இரவில் அது திருடு போய்விட்டது. அதன் உரிமையாளரான எர்னோ அதைத் தேடினார். பின் ஜிப்ஸிகள் சிலர் அதைத் திருடிச் சென்றதைக் கண்டுபிடித்து, மீட்டார். எர்னோ, திருடிச் சென்ற ஜிப்ஸியிடம் கேட்டார். ‘என் லாயத்தில் ஏகப்பட்ட அழகான, கம்பீரமான குதிரைகள் இருக்கும்போது, நீங்கள் நோஞ்சானாக, அழகே இல்லாமலிருக்கும் இந்தக் குதிரையை ஏன் திருடிச் சென்றீர்கள்?’

அந்த ஜிப்ஸி அளித்த பதில், ‘இது பார்க்க அழகில்லாமல் தோன்றலாம். ஆனால், இந்தக் குதிரைதான் வருங்காலத்தில் மாபெரும் வெற்றிகளை ஈட்டப் போகிறது!’

கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: mugil.siva@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x