முரட்டு ‘சிங்கிள்’களின் தினம்!
காதலர் மாதம் எனப்படும் பிப்ரவரி முடிந்துவிட்டது. ‘என்னடா இது... எல்லாருக்கும் ஒரு துணை இருக்கு. நமக்குத் தனிமை மட்டும்தான் துணையா இருக்கு' என்று சோகமாகக் கவிதை வடிக்கும் ‘சிங்கிள்' சித்தர்களும் இருக்கவே செய்கிறார்கள். கவலையேபட வேண்டாம், உங்களுக்காகவே இருக்கிறது ‘சிங்கிள்ஸ் டே!'
‘சிங்கிள்ஸ் டே' என்பது ‘ஆன்டி-வாலண்டைன்ஸ் டே' என்கிற பெயரில் 1990ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தத் தினத்தை முதன்முதலில் கொண்டாடிய பெருமைக்குரிய ‘சிங்கிள்கள்' சீனாவைச் சேர்ந்த கல்லூரிமாணவர்கள்தாம். அவர்கள் தொடங்கிவைத்த இந்த உற்சவம் இன்று உலகம் முழுவதிலும் உள்ள ‘சிங்கிள்' சிங்கங்களால் ஆராதிக்கப்பட்டு உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்தத் தினம் சீனாவில் உருவானதற்கு முக்கியக் காரணமே அங்கு நிலவிய ‘பாலினச் சமநிலையின்மைதான்’. அங்கு பெண்களின் எண்ணிக்கையைவிட ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அதற்காகச் சும்மா விட்டுவிட முடியுமா? அதை வைத்தே ‘சிங்கிள்’ தினத்தைத் தொடங்கிவிட்டார்கள். அதை மற்ற நாடுகளில் உள்ள ‘சிங்கிள்’களும் பின்பற்ற, உலகம் முழுக்கப் பரவிவிட்டது. இத்தினம் இன்றோ மிகப் பெரிய ‘ஆன்லைன் ஷாப்பிங் திருவிழா’வாகவும் மாறிவிட்டது.
பலரும் தனக்கு விருப்பமான பொருள்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து தனக்குத் தானே பரிசு வாங்கிக்கொண்டு, இந்தத் தினத்தை ‘சிங்கி’ளாகக் கொண்டாடுகிறார்கள். ‘ஆஹா... நமக்கு ஒரு தினமா?' என்று கனவில் முரட்டு ‘சிங்கிள்’கள் உடனே உருக ஆரம்பித்துவிட்டீர்களா? ஆனால், அதற்கு நீங்கள் நவம்பர் 11ஆம் தேதி வரை பொறுத்திருக்க வேண்டும்! ஏனெனில் அன்றுதான் ‘சிங்கிள் டே’ கொண்டாடப்படுகிறது!
