

கல்லூரியில் படிக்கும் எனக்கு வெகுநாளாக ஒரு சந்தேகம். படிக்கிற காலத்தில் நண்பர்கள் தேவையா? சில பிரச்சினைகளுக்கு நண்பர்கள் காரணமாக இருப்பதால், நண்பர்களைத் தவிர்ப்பது நல்லதோ என்று தோன்றுகிறது. மறுபுறம் நான் நல்ல நண்பனாக என்ன பண்புகள் அவசியம் என்பதையும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.
குமரேசன், திருவொற்றியூர், சென்னை.
இளம்பருவத்தில் பல பிரச்சினைகளில் மாட்டிக்கொள்ள நண்பர்கள்தாம் காரணம் என்பது தவறான கண்ணோட்டம். ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வின்படி, தங்களுடைய நட்பு வட்டத்தோடு தொடர்ந்து தொடர்பில் இருப்பவர்கள் 15 சதவீத அதிக மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள். அதுவும் நண்பர் மிகவும் மகிழ்வாக இருக்கும்போது, நம்முடைய மகிழ்ச்சியும் 10 சதவீதம் அதிகரிப்பதற்கு வாய்ப்பிருக்கிறதாம்.
கல்லூரி நாட்களில் மிகச் சிலருடன் மட்டுமே பழகியவர்களுக்கும் தனிமையாகச் சுற்றித் திரிந்தவர்களுக்கும் அதிக அளவில் இதய நோய்கள் வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான பெற்றோர்களும் சில மாணவர்களும் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும் என்று நினைக்கிறார்கள். இது தவறான போக்கு. படிப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறோமோ அதே அளவுக்கு மற்றவர்களோடு பழகுவதும் அவசியம்.
மனித இயல்பில் நண்பர்களைத் தேர்ந்தெடுப்பது என்பது மூன்று நிலைகளில் நிகழ்கிறது,
1. ஊக்க நிலை: தங்களைப் போன்ற தோற்றமும் பழக்கவழக்கமும் கொண்டவர்களை விரும்புதல்.
2. மதிப்பிடும் நிலை : தன்னுடைய கருத்துகள் எல்லாம் அடுத்தவரால் ஏற்றுக்கொள்ளப்படும்பட்சத்தில் அவருடன் நட்புகொள்வது.
3. பங்கு நிலை: பகிர்ந்துகொள்ளுதல் மூலமாக நட்புக்கு அடித்தளம் அமைத்தல்.
நட்பு அவசியமா என்ற சந்தேகம் எழுந்தாலும் நீங்கள் நல்ல நண்பராக மாற நினைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களையே நட்புக்குரியவராக மாற்றிக்கொள்வது வரவேற்கத்தக்க செயலாகும். அதற்கு நீங்கள் என்ன செய்யலாம் என்பதைப் பார்ப்போம்:
பரிவுடனிருத்தல் : உங்களுடைய நண்பரின் பிரச்சினையை அவருடைய கண்களால் பார்த்து, அவருடைய போக்கில் அணுகி, தீர்வுகாணுதல் அவசியம். நண்பரின் ரசனையைக் காதுகொடுத்துக் கேட்பவராக நீங்கள் இருக்க வேண்டும்.
சுயநலமின்மை: உங்களைப் பற்றி அதிகம் சிந்திக்காமல், அடுத்தவரின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளும் தன்மை நல்ல தோழமைப் பண்பை உருவாக்கும்.
விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் ஊக்கத்துடன் பங்கேற்பது குழுவாகச் செயல்படும் மனோபாவத்தையும் வெற்றி/தோல்வியை எதிர்கொள்ளும் உத்வேகத்தையும் கொடுக்கும்.
நகைச்சுவை உணர்வு: இறுக்கமான சூழ்நிலைகளில், நாம் கொண்டிருக்கும் நகைச்சுவை உணர்வு பிரச்சினைகளை எளிதில் எதிர்கொள்ளும் தைரியத்தை வளர்க்க உதவும்.
சில விஷயங்களைப் பெற்றோருடன், சிலவற்றைச் சகோதர-சகோதரிகளுடன் பகிர்ந்துகொள்ளலாம். ஆனால், எல்லாவற்றையும் நண்பரிடத்தில் பகிர்ந்துகொள்ளலாம். நம் சிரிப்பின் காரணத்தைவிட, அழுகையின் அர்த்தத்தை அறிந்தவரே நல்ல நண்பர்.
“நல்ல நட்பு வளையத்தில் இருப்பவர்கள், நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ்கிறார்கள், அவர்களுக்கு மறதிநோய் வருவது காலந்தாழ்த்தப்படுகிறது, இதய நோய் ஏற்படுவது குறைவாக உள்ளது, சுவாசக் கோளாறு குறைவாக ஏற்படுகிறது” என்று ‘மைண்ட் ஓவர் மெடிசன்’ என்னும் புத்தகத்தில் எழுத்தாளர் லிசா ராங்கின் எழுதியுள்ளார்.
நண்பர்களால் கிடைக்கும் உளவியல் பலன்கள்:
ஒரேவிதமான சிந்தனை கொண்டவர்களோடு உரையாடுவதும், கருத்துகளைப் பரிமாறிக்கொள்வதும் நமக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கும். நமக்குப் பிரச்சினை ஏற்பட்டால் பகிர்ந்துகொள்ள, நமக்குச் சரியான முறையில் எடுத்துரைக்க ஒருவர் இருக்கிறார் என்ற எண்ணமே, நம்முடைய சுய மதிப்பீடுகளை அதிகரிக்கும்.
தனிமை என்பது வேறு. விலகி இருப்பது என்பது வேறு. சுயமாக முடிவெடுத்து நாம் விலகி இருக்கலாம். ஆனால், மற்றவரால் ஒதுக்கப்படும்போது நாம் தனிமைக்குள் தள்ளப்படுவோம். இத்தகைய தனிமை நண்பர்களால் தவிர்க்கப்படுகிறது.
மாறுபட்ட கலாச்சாரம்,வேறுபட்ட சமூக நிகழ்வுகளால் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறோம். புதிய கருத்துகளை, சித்தாந்தங்களைத் தெரிந்துகொள்கிறோம்.
நண்பர்களிடையே பொறாமை இருந்தால், அவர்கள் நல்ல நண்பர்களாக இருக்க முடியாது.தோள் பற்றிக்கொண்டு, கைகொடுத்துக்கொண்டு ஒருவருக்கொருவர் ஆதரவுடன் முன்னேற்றம் காணும் நிலை நட்புவட்டத்தில் உன்னத நிலை.
நல்ல நண்பர் கண்ணாடியாய், நம்முடைய சாதக பாதக நிலைப்பாடுகளை, சரிவர எடுத்துரைக்கும்போது, நம்மைத் திருத்திக்கொள்ளும் நிலை ஏற்பட்டு, நம்முடைய முழுத் திறமையும் வெளிப்படுகிறது.
ஒன்றாகக் கூடி ஒரு வேலையைச் செய்யும்போது, கூட்டு மனப்பான்மையின் முக்கியத்துவம் தெரியவருகிறது.
கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் மனநல மருத்துவர் டாக்டர் டி.வி. அசோகன் (தொடர்புக்கு: tvasokan@gmail.com). வாசகர்கள் தங்களுடையப் படிப்புத் தொடர்பான உளவியல் சந்தேகங்களை இப்பகுதிக்கு அனுப்பலாம். முகவரி: வெற்றிக்கொடி, தி இந்து-தமிழ் நாளிதழ், கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600 002, மின்னஞ்சல்: vetrikodi@thehindutamil.co.in |