Published : 24 Feb 2018 11:10 am

Updated : 24 Feb 2018 11:10 am

 

Published : 24 Feb 2018 11:10 AM
Last Updated : 24 Feb 2018 11:10 AM

நலம், நலமறிய ஆவல் 23: உணவைத் தடுக்கும் புற்று!

23

எனக்கு 42 வயதாகிறது. சில மாதங்களாக உணவை விழுங்கும்போது தொண்டையில் அடைப்பதுபோல் சிரமமாக இருந்தது. உடல் எடையும் 4 கிலோ குறைந்திருக்கிறது. பசி இல்லை. எந்நேரமும் சோர்வாக இருக்கிறேன். அடிக்கடி அலுவலகத்தில் விடுமுறை எடுக்கும் சூழலும் வருகிறது. சமீபத்தில் ஒரு மருத்துவரிடம் காண்பித்தேன். எண்டாஸ்கோப்பி பரிசோதனை செய்தார்.

உணவுக்குழாயில் புற்றுநோய் உள்ளதாகச் சொன்னார். ஆபரேஷன் செய்து கட்டியை எடுத்துவிட வேண்டும் என்றும் சொல்கிறார். எனக்கு ஆபரேஷன் செய்துகொள்ளப் பயமாக உள்ளது. எனக்கு சர்க்கரை நோயும் உள்ளது. இதற்கு ஆபரேஷன் தவிர வேறு சிகிச்சை இருக்கிறதா? எனக்கு ஆலோசனை தந்து உதவவும். எனக்கு எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது. எனக்கு ஏன் இந்த நோய் வந்தது?


- ஆர். விட்டல், கோயம்புத்தூர் - 4

நம் நாட்டைப் பொறுத்தவரை நடுத்தர வயதில் வரும் புற்றுநோய்களில் உணவுக் குழாய்ப் புற்றுநோய் (Oesophagus Cancer) முதலிடம் வகிக்கிறது.

புகைபிடித்தல், புகையிலை போடுதல், பான்மசாலா பயன்பாடு ஆகியவை உணவுக் குழாய்ப் புற்றுநோய் உருவாக முக்கியக் காரணங்கள். மேலும், உணவுக் குழாயின் அடிப்பகுதியில் பிறவிச் சுருக்கம், இரைப்பை ஏற்றம், ரத்தசோகை, ‘டைலோசிஸ்’ (Tylosis), ‘அக்கலேசியா கார்டியா’ (Achalasia cardia) போன்ற பரம்பரை நோய்களும் மரபணுக் கோளாறுகளும் இந்தப் புற்றுநோய்க்குக் காரணமாகலாம். உங்களுக்கு நோய் ஏற்பட்டதற்குப் பரம்பரை முக்கியக் காரணமாக இருக்க வாய்ப்பிருக்கிறது.

தவிர, துரித உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு, ஊட்டச்சத்துக் குறைவு, வைட்டமின் - தாதுச்சத்துக் குறைவு ஆகியவையும் இந்த நோய் உருவாவதைத் தூண்டுகின்றன. நெஞ்செரிச்சல் நோய் பல வருடங்களுக்குத் தொடருமானால் அது ‘பேரட்ஸ்’ (Barret’s) உணவுக் குழாயாக மாறி, இந்தப் புற்றுநோய்க்குப் பாதை அமைக்கும்.

காபி - தேநீரை அதிகச் சூடாகக் குடிக்கும் பழக்கம், மது அருந்தும் பழக்கம், கொழுப்பு நிறைந்த இறைச்சி உணவை அடிக்கடி சாப்பிடுவது, காய்கறி, கீரை, பழங்களைத் தேவையான அளவுக்குச் சாப்பிடாமல் இருப்பது போன்றவையும் இந்த நோயை வரவேற்கும்.

அறிகுறிகள் என்ன?

இந்த நோய் உள்ளவர்களுக்கு ஆரம்பத்தில் புளித்த ஏப்பம், பசி குறைவு, நெஞ்சில் அடைப்பது போன்ற உணர்வு, அஜீரணம், உடல் எடை குறைதல் போன்ற அறிகுறிகள் உண்டாகும். இவற்றில் உடல் எடை குறைவது தவிர மற்ற அறிகுறிகள் எல்லாமே சாதாரணமாக இரைப்பைப் புண்ணிலும் காணப்படும் என்பதால், இந்த நோயாளிகள் இரைப்பைப் புண்ணுக்கு நீண்ட காலம் சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்பார்கள். இதனால் அறிகுறிகள் தற்காலிகமாக மறையும். பிறகு உணவு விழுங்குவதில் சிரமம் ஏற்படும்போதுதான் புற்றுநோய் உள்ள விவரம் தெரியவரும்.

‘ஈஸோபேஜியல் கேஸ்ட்ரோ டியோடினோஸ்கோப்பி’ (oesophago-gastro-duodenoscopy) மூலம் உணவுக் குழாயில் உள்ள புற்றுநோயைத் தெரிந்துகொள்ள முடியும். மேலும், இந்தப் பரிசோதனையின்போதே புற்றுள்ள பகுதியிலிருந்து சிறு பகுதியை வெட்டி எடுத்துத் ‘திசு ஆய்வு’ (Biopsy) செய்து, நோயை உறுதிசெய்ய முடியும்.

என்ன சிகிச்சை?

உணவுக் குழாய்ப் புற்றுநோய்க்கு அதன் தன்மை, வகை, பரவியுள்ள நிலைமை ஆகியவற்றைப் பொறுத்து அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, மருத்துவ சிகிச்சை என மூன்று வழிகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆரம்ப நிலையில் உள்ள உணவுக் குழாய்ப் புற்றுநோயைக் குணப்படுத்துவது எளிது.

1. அறுவை சிகிச்சை:

உணவுக் குழாயில் புற்று பாதித்துள்ள பகுதியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிட்டு, பெருங்குடல் பகுதியிலிருந்து சிறு பகுதியை எடுத்து உணவுக் குழலுக்கு மாற்றாகப் பொருத்திவிடுவது ஒரு வழி. இந்தச் சிகிச்சையை நோயின் ஆரம்ப நிலையில் மட்டுமே செய்ய முடியும். புற்று முற்றிய நிலையில் இதை மேற்கொள்ள இயலாது.

2. கதிர்வீச்சு சிகிச்சை (Radiotherapy):

அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாத நிலைமையில் உள்ள நோயாளிகளுக்குக் கதிர்வீச்சு சிகிச்சையில் புற்றுநோய்க் கட்டியைக் கரைக்க முடியும்.

3. மருத்துவ சிகிச்சை (Chemotherapy):

ரத்தம், நிணநீர் மூலம் உடலின் மற்ற இடங்களில் இது பரவியிருந்தால் மருத்துவ சிகிச்சை தரப்படும்.

4. ஸ்டென்ட் சிகிச்சை:

உணவுக்குழாய் முழுவதுமே அடைத்துவிட்டால், ‘ஸ்டென்ட்’ எனப்படும் செயற்கைக் குழாயை அந்த இடத்தில் பொருத்திக்கொள்ள, சாப்பிடும் சிரமம் குறையும்.

உங்களைப் பொறுத்த வரையில் நோய் ஆரம்ப நிலையில் உள்ளதாகவே தெரிகிறது. நீங்கள் அறுவை சிகிச்சைக்கு யோசிக்க வேண்டாம். ரத்தச் சர்க்கரையை நன்கு கட்டுப்படுத்திக்கொண்டு, அறுவை சிகிச்சை செய்துகொள்ளுங்கள்.

‘நலம், நலமறிய ஆவல்' கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் பிரபல மருத்துவ எழுத்தாளர் டாக்டர் கு. கணேசன். தங்களுடைய முக்கியமான மருத்துவச் சந்தேகங்களை வாசகர்கள் இப்பகுதிக்கு அனுப்பலாம்.

மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in

முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002.Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x