

தமிழக அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் இயங்குகிறது. இது 1973-ல் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது சென்னை காமராசர் சாலையில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அலுவலக வளாகத்தில், செயல்படுகிறது.விரைவில் அம்பத்தூர் தொழிற்பேட்டை வளாகத்துக்கு மாற உள்ளது.
புது டெல்லி, சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு மற்றும் நொய்டாவிலுள்ள வி.வி. கிரி தேசியத் தொழிலாளர் கல்வி நிலையத்துடன் இணைந்து புத்தறிவுப் பயிற்சிகளை இந்த நிலையம் நடத்திவருகிறது.
கல்விப் பணிகள்
இக்கல்வி நிலையம் 2001 முதல் முழுநேர மற்றும் பகுதிநேர ஆராய்ச்சி (பிஎச்.டி.) படிப்பு நடத்துவதற்கு சென்னைப் பல்கலைக்கழகத்தால் ஓர் ஆராய்ச்சி நிலையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இக்கல்வி நிலையம் தொழிலாளர் மேலாண்மையில் இளங்கலைப் பட்டப் படிப்பு (பி.ஏ. - (எல்.எம்), முதுகலைப் பட்டப் படிப்பு எம்.ஏ. - (எல்.எம்) ஆகியவற்றை நடத்தி வருகிறது.
மேலும், இக்கல்வி நிலையம் ஓராண்டு பகுதிநேர வகுப்பாகத் (மாலை) தொழிலாளர் நிர்வாகத்தில் முதுகலைப் பட்டயப் படிப்பு (பி.ஜி.டி.எல்.ஏ) மற்றும் தொழிலாளர் சட்டங்களும் மற்றும் நிர்வாகவியல் சட்டமும் குறித்த ஓராண்டு (பகுதி நேர - வார இறுதி நாட்களில்) பட்டயப் படிப்பு ஆகியவற்றையும் நடத்தி வருகிறது.
“தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும்” என்ற ஓராண்டு பகுதிநேர பட்டயப் படிப்பு இந்த கல்வியாண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளது. 10.8.2013 முதல் வார இறுதி நாட்களில் (சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை) வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இப்பட்டயப் படிப்பில் 2013-2014-ம் கல்வியாண்டில் 50 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2014–15-ம் கல்வியாண்டிற்கு 50 மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
வேலை வாய்ப்பு
இக்கல்வி நிலையத்தின் மூலம் போதிய வேலைவாய்ப்பைத் தேடித்தர “நியோமானேஜர்ஸ் கைடன்ஸ் பீரோ’’ என்ற பணியமர்வு வழிகாட்டுக்குழு அமைக்கப்பட்டுச் செயல்படுகிறது. தொழிலாளர் மேலாண்மையில் பி.ஏ. மற்றும் எம்.ஏ. படிக்கும் மாணவர்களுக்கான வளாகத்தேர்வு மற்றும் பணியில் அமர்த்துதல் ஆகியவற்றுக்கு இக்குழு ஏற்பாடு செய்கிறது.
இக்கல்வி நிலையத்தில் பயின்ற மாணவர்கள் பெரும்பாலான முன்னோடி தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிகின்றனர்.