காதல் சந்தை!

காதல் சந்தை!
Updated on
2 min read

காதலில் தோல்வியடைந்தால் தாடி வளர்ப்பது, தண்ணி அடிப்பது, வாழ்க்கையை முடித்துக்கொள்வதெல்லாம் ஓல்டு ஃபேஷன். இப்போதெல்லாம் காதல் ‘பிரேக் அப்’ ஆகிவிட்டால், சந்தோஷமாக டாட்டா காட்டிவிட்டு பிரிந்துவிடுகிறார்கள். வியட்நாமிலோ இதற்கும் ஒரு படி மேலே. காதல் ‘பிரேக் அப்’ ஆகிவிட்டால், காதலர்கள் பரிமாறிக்கொண்ட பொருள்களைக்கூட விற்பனைக்குக் கொடுத்துவிட்டுச் சென்றுவிடுகிறார்கள். அப்படி விற்கப்படும் காதலர்களின் பழைய பொருள்களை வாங்கவே அங்கே ‘காதல் மார்க்கெட்’டும் ஒன்று செயல்பட்டுவருகிறது..

வியட்நாமில் ஹனோய் நகரில் இயங்கிவரும் ‘ஓல்டு ஃபிளேம்ஸ்’ (Old Flames) பற்றித் தெரியாதவர்களே இல்லை. விந்தையான காதல் சந்தை என்கிற பெயரை இது பெற்றிருக்கிறது. 2017ஆம் ஆண்டில் இந்தக் காதல் சந்தையை டின் தங் என்கிற இளைஞர் தொடங்கினார். காதல் சந்தையைத் தொடங்கி 7 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், சந்தையின் புகழ் உலகளவில் பரவிவிட்டது.

காதல் நினைவுகள்: இந்தச் சந்தையில்தான் முன்னாள் காதலர்கள் தங்களுடைய காதல் நினைவுகளை விற்பனைக்குக் கொடுத்துவிட்டுச் செல்கிறார்கள். ஆர்வமிருக்கும் வாடிக்கையாளர்கள், இந்தச் சந்தையில் முன்னாள் காதலர்களால் கைவிடப்பட்ட காதல் நினைவுப் பரிசுகளை வாங்கிச் செல்கிறார்கள்.

காதலித்தபோது பகிர்ந்துகொண்ட காதல் கடிதங்கள், வாழ்த்து அட்டைகள், ‘ஸ்கராப் புக்ஸ்’, மெழுகுவத்திகள், வாசனைத் திரவியங்கள், பொம்மைகள் உள்பட காதலர்கள் பரிமாறிக்கொண்ட எல்லாப் பொருள்களும் இந்தச் சந்தையில் விற்கப்படுகின்றன.

பொதுவாகக் காதல் ‘பிரேக் அப்’பிற்கு பிறகு, காதலர்கள் பகிர்ந்துகொண்ட பரிசுகள் இருவருக்கும் வலியைத் தரக்கூடும். ஆனால், இந்தக் காதல் சந்தையோ காதல் பிரிவுத் துயரிலிருந்து வெளிவருவதற்குப் பெரிதும் உதவுவதாகச் சொல்கிறார்கள் வியட்நாம் இளசுகள்.

காதலர்களுக்கான பலகை: இன்றைய இளைஞர்கள்திறந்த மனதுடன் வாழ்க்கையை எதிர்கொள் கிறார்கள். அவர்கள் காதல் பிரேக் அப் வலியிலிருந்து வெளியே வருவதற்கு எல்லா முயற்சிகளையும் எடுக்கிறார்கள். அதன் ஒரு பகுதியாகவே இது காதலர்களின் பிரிவுத் துயரத்துக்கு வடிகாலாகச் செயல்படுகிறது.

“தோற்றுப்போன காதலின் நினைவுகள் எப்போதும் வலியைத் தரக்கூடியதாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை” என்று சொல்கிறார் இந்தச் சந்தையில் பணியாற்றும் இளைஞர் ஒருவர்.

இந்தக் காதல் சந்தையில் காதல் பிரிவுத் துயரைக் கடக்க முடியாமல் தவிக்கும் முன்னாள் காதலர்களுக்காகச் செய்திப் பலகை ஒன்றையும்கூட வைத்திருக்கிறார்கள். அந்தப் பலகையில் முன்னாள் காதலர்களுக்குத் தாங்கள் சொல்ல நினைக்கும் கருத்துகளைப் பதிவுசெய்யலாம்.

“நான் நலம்”, “என்னுடைய முன்னாள் காதலரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். நாம் இருவரும் எப்போதும் ஒருவரை இன்னொருவர் அறிந்திருக்கவேயில்லை என்றுதான் நினைக்கிறேன்” என்பன போன்ற செய்திகள் இந்தப் பலகையில் தவறாமல் இடம்பெறுகின்றன.

காதல் பிரிவுத் துயரைக் கடக்க உதவும் இந்தச் சந்தை இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. காதலில் தோல்வியுற்றவர்கள் காதல் நினைவுப் பொருள்களை விற்பனைக்குக் கொடுக்க இங்கே வந்தாலும், புதிய காதலை எதிர்நோக்கியும் இந்தச் சந்தைக்கு இளைஞர்கள் வருகிறார்களாம். என்ன ஒரு நகைமுரண்!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in