தொழில் தொடங்கலாம் வாங்க 54: சிலருக்கு விளம்பரம் தேவை இல்லை!

தொழில் தொடங்கலாம் வாங்க 54: சிலருக்கு விளம்பரம் தேவை இல்லை!
Updated on
1 min read

பல ஸ்டார்ட் அப் கம்பெனிகள் பப்ளிசிட்டியால் கவனம் பெறத் தொடங்கிவிட்டன. ஆனால், அவற்றில் காணாமல் போகிறவைதான் அதிகம். மார்க்கெட்டிங்கும் பப்ளிசிட்டியும் ரொம்ப முக்கியம், அதற்கு கணிசமாகச் செலவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறார் என்னுடைய பிசினஸ் பார்ட்னர். ஒரு கம்பெனி எத்தனை சதவீதம் இதற்கெல்லாம் செலவு செய்யலாம்?

- நரேந்திரன், சென்னை.

ஒரு குறிப்பிட்ட சதவீதத்தைச் சொல்வது கடினம். உங்க தொழில் எது என்பதைப் பொறுத்துத்தான் பதில் சொல்ல முடியும். என்னைக் கேட்டால் எல்லாத் தொழில்களுக்கும் பப்ளிசிட்டி தேவை என்று சொல்ல முடியாது. உங்கள் தொழில் பெருக, விற்பனைக்கோ அல்லது இன்ன பிற காரணங்களுக்கோ அவசியம் என்றால் மக்கள் தொடர்பு, விளம்பரம் செய்யலாம். பல தொழில்கள் இருக்கும் இடம் தெரியாமல் இயங்குவதைப் பார்க்கலாம். இது கம்பெனியின் அளவு சார்ந்தது அல்ல, தேவையைப் பொறுத்தது.

எனக்குத் தெரிந்து சென்னையில் இயங்கும் ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனம் பிரம்மாண்டமான தொழிற்சாலையையும் ஏராளமான தொழிலாளர்களையும் கொண்டது. நல்ல வளர்ச்சி பெற்றும் ஒரு இடத்தில்கூட விளம்பரத்தைப் பார்க்க முடியாது. அந்த நிறுவனத்தின் பெயர் தெரிந்தவர்களுக்குக் கூட என்ன தயாரிக்கிறார்கள் என்று பெரிதாகத் தெரியாது.

காரணம் அவர்களுக்கு உள்ளது ஒரே ஒரு பெரிய பன்னாட்டு கம்பெனியின் ஆர்டர்தான். அந்தச் சிறப்பு ஒப்பந்தத்தினால் தயாரிப்பவை அனைத்தையும் ஒரே நிறுவனம்தான் பெற்றுக்கொள்கிறது. முழுவதும் ஏற்றுமதியாகும் பொருளுக்கு விளம்பரம் தேவையில்லையே. ஆக, பெரிதாக அவசியம் இல்லாதவரை மக்கள் தொடர்பு செலவுகளும் இல்லை.

ஆனால், யூனிலீவருக்கோ, பெப்ஸிக்கோ, ரஜினி படத்துக்கோ விளம்பரம்தான் உயிர் நாடி. உங்கள் வாடிக்கையாளரை உங்கள் பக்கம் கொண்டு வர இந்தச் செலவுகள் செய்யப்படுகிறதா என்பதில்தான் வெற்றி உள்ளது. தங்க நகைக் கடைகள் விளம்பரத்துக்குச் செய்யும் செலவுகளை உதிரி பாகம் தயாரிக்கும் நிறுவனம் செய்ய வேண்டியதில்லை.

ஆனால், போட்டியான சந்தையில் தங்கள் பெயரை நிலைநிறுத்திக்கொள்ள எல்லா கம்பெனிகளும் செலவு செய்வது உண்மை. பெரிய நிறுவனங்களைப் பார்த்து வியூகமில்லாமல் செலவு செய்யும் ஸ்டார்ட் அப்கள் அழிவது இயற்கையே.

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

‘தொழில் தொடங்கலாம் வாங்க!’ கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் டாக்டர். ஆர். கார்த்திகேயன். வாசகர்கள் தங்களுடைய தொழில் முயற்சிகள் தொடர்பான சந்தேகங்களை இப்பகுதிக்கு அனுப்பலாம்.

முகவரி: வெற்றிக்கொடி, தி இந்து-தமிழ், கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600 002, மின்னஞ்சல்: vetrikodi@thehindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in