Published : 20 Feb 2018 11:26 AM
Last Updated : 20 Feb 2018 11:26 AM

சர்வதேச தாய்மொழி நாள்: அழிவின் விளிம்பில் மொழிகள்!

புழக்கத்தில் உள்ள மொழிகளில் 4 சதவீத மொழிகளைத்தான் உலக மக்களில் 97 சதவீதத்தினர் பேசுகிறார்கள். மீதமுள்ள 96 சதவீத மொழிகளைப் பேசும் மக்கள் உலக மக்கள்தொகையில் வெறும் 3 சதவீதத்தினர் மட்டுமே என்று சமீபத்தில் நடந்த ஐ.நா. மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது. சராசரியாக இரண்டு வாரங்களுக்கு ஒரு மொழி பேச்சுவழக்கில் இருந்து முற்றிலுமாக அழிந்துபோகிறது என்று அதிர்ச்சியூட்டும் தகவலும் அந்த மாநாட்டில் வெளியானது.

மொழிக்கு மரண சாசனம்

அதெப்படி, ஒருசிலர் கூடப் பேசாத அளவுக்கு ஒரு மொழி முற்றிலுமாக அழிந்துபோகும் என்ற சந்தேகம் எழலாம். ஒரு சிறிய பகுதியில் குறைவான எண்ணிக்கையில் வசிக்கும் மக்கள் பேசும் மொழி ஒன்று இருக்குமானால், அப்பகுதியில் நிகழும் போர் மரணங்கள், அந்த மொழிக்கும் சேர்த்து மரண சாசனம் எழுதிவிடும். நிலநடுக்கம், சுனாமி, எரிமலை வெடிப்பு போன்ற இயற்கைப் பேரிடர்கள் லட்சக்கணக்கான உயிர்களைப் பலி வாங்கும்போது, அவை மொழிகளையும் சேர்த்து அழித்துவிடுகின்றன.

உதாரணமாக, 2004-ல் சுமத்ரா, இந்தோனேசியா கடற்பகுதிகளில் ஏற்பட்ட சுனாமியால் பலியான மக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு லட்சத்து 30 ஆயிரம். அதேபோல, உலகின் ஒரு பகுதியிலிருந்து, இன்னொரு புதிய பகுதிக்குச் செல்லும் புதியவர்கள் மூலமாகச் செல்லும் ஆபத்தான தொற்றுநோய்கள் ஆயிரக்கணக்கில் உயிர் பலி வாங்கும்போது, சில தருணங்களில், அம்மக்கள் பேசிய உள்ளூர் மொழியையும் சேர்த்துப் பலி வாங்கிவிடுகின்றன.

இனப்படுகொலையும் அந்நிய மோகமும்

அந்நிய நாட்டின் ஆட்சியிலிருந்து அரசியல் விடுதலை பெற்றாலும் அந்நிய மொழியின் ஆதிக்கம் அதிகரித்து, மண்ணின் மொழி காலப்போக்கில் மறைந்துவிடுவதுண்டு. உள்நாட்டுப் போராலும் இதுபோன்ற பயங்கரம் நடந்துவருகிறது. 1932-ல் எல் சால்வடார் நாட்டில் நடந்த உள்நாட்டுப் போரில் கிட்டத்தட்ட 30,000 லெங்கா, காகவிரா, நஹுவா பிபில் ஆகிய பழங்குடி மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். இதனால், போதான், பிஸ்பி ஆகிய அவர்களுடைய மொழிகளும் அழிவை நோக்கித் தள்ளப்பட்டன.

shutterstock_101790511right

இதைவிட மோசம், அந்நிய மொழி மோகத்தால் தங்கள் சொந்த மொழியைப் புறக்கணிப்பது. ஒரு நாட்டில், ஒரு சிறிய பகுதியில் வசிக்கும் மக்கள் பல தலைமுறைகளாகப் பேசிவந்த மொழிகளுக்குப் பதிலாகச் சமூக அந்தஸ்து காரணமாக ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற மொழிகளை நவீனம் என்ற பெயரில் கற்றுக்கொண்டு பேச ஆரம்பிக்கிறார்கள்.

நாளடைவில் அவர்களின் தாய்மொழிச் சொற்கள் மறந்துபோய், சரளமாகப் பேச முடியாத நிலைமை உருவாகி, அடுத்தடுத்த தலைமுறையினரை அந்த மொழி சென்றடையாமல் மறையும் பரிதாபமும் நிகழ்கிறது.

“மொழியே மனித இனத்தின் பேச்சுக் கருவி. அறிவு, கருத்து, எண்ணப் பரிமாற்றத்துக்கு மொழி அவசியம். மனித குலத்தின் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் அடுத்தடுத்த தலைமுறையினருக்குக் கொண்டுசெல்லும் வாகனம் மொழியே. எனவே, பன்மொழிகளை அழியாமல் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம், அவசரம்” என்கிறார்கள் யுனெஸ்கோவின் மொழியியல் அறிஞர்கள்.

அழியும் அபாயத்திலிருக்கும் ஆறு மொழிகள்

  • மலேசியாவின் வட பகுதியில் உள்ள சிறிய கிராமத்தில் வசிக்கும் வேட்டையாடுவதை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்ட 280 பேர் மட்டுமே பேசிக்கொண்டிருப்பது ஜடக் (Jedek) மொழி.
     
  • சுவீடன் நாட்டின் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள பழங்குடியினர் பேசும் மொழி எல்டலியன் (Elfdalian). தற்போது தோராயமாக 2,500 பேர் இந்த மொழியைப் பேசுகிறார்கள் என்றாலும், அவர்களில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 60 பேருக்கு மட்டுமே இந்த மொழி தெரிந்திருக்கிறது.
     
  • ஆஸ்திரேலியாவுக்கும் ஹவாய் தீவுகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள மார்ஷல் தீவுக் கூட்டங்களில் வசிக்கும் மக்களால் பேசப்பட்டுவருகிறது மார்ஷலீஸ் (Marshallese) மொழி. கடல் நீர் மட்டம் உயர்ந்து, நிலப்பகுதி சிறிது, சிறிதாக மூழ்கிக்கொண்டிருப்பதால் மக்கள் இந்தத் தீவுகளை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த சில தலைமுறைகளுக்குப் பின் இந்த மொழி இருக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை.
     
  • வின்டு (Wintu) என்பது வட அமெரிக்காவின் சாக்ரமென்டோ பள்ளத்தாக்கில் வசிக்கும் அமெரிக்கப் பழங்குடி மக்கள் பேசும் மொழி. சில ஆண்டுகளுக்கு முன்புவரை 14 ஆயிரம் பேர் இருந்தச் சமூகத்தில், தற்போது 150 பேர் மட்டுமே உள்ளனர். இவர்களுக்கு வின்டு மொழி பேசத் தெரிந்தாலும், அவர்களில் ஒருவர் மட்டும்தான் விண்டு மொழிவளம் மிக்கவராக இன்றைய தேதியில் இருக்கிறார்.
     
  • ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் மிகவும் உள்ளடங்கிய மூன்று கிராமங்களில் வசிக்கும் மக்களில் 40 பேர் மட்டுமே பேசும் மொழி டோஃபா (Tofa). இந்தக் கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள் தொலைதூரத்தில் இருக்கும் ரஷ்ய உறைவிடப் பள்ளிகளில் படிப்பதால் அவர்களுக்கு ரஷ்ய மொழி தெரியுமே தவிரத் தாய்மொழியான டோஃபா தெரியவில்லை.
     
  • ஆகா (Aka) என்பது ஒரு இந்திய மொழி என்றால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். இந்தியாவின் வடகிழக்கு மூலையில் உள்ள அருணாசலப் பிரதேசத்தில், சுமார் ஐந்து மணி நேரம் காட்டுவழிப் பயணம்செய்து சென்றடையக்கூடிய பகுதியைச் சேர்ந்த மக்கள் பேசும் மொழி ஆகா. இன்றைய தேதியில் ஆகா பழங்குடி இனத்தின் சில ஆயிரம் பேருக்கு இந்த மொழி தெரிந்திருந்தாலும், இளைய தலைமுறையினருக்குத் தெரியவில்லை. காரணம், மாநிலத்தில் ஆட்சி மொழி ஆங்கிலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x