Last Updated : 23 Feb, 2018 11:23 AM

 

Published : 23 Feb 2018 11:23 AM
Last Updated : 23 Feb 2018 11:23 AM

‘பேட்’ புதல்வன்!

ந்திய கிரிக்கெட் அணி முன்பு எப்படி சச்சின் டெண்டுல்கரை மையம் கொண்டிருந்ததோ, அப்படி இன்று விராட் கோலியை மையம் கொண்டிருக்கிறது. அவரது ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு சாதனை பிறந்துவிடுகிறது. தென் ஆப்பிரிக்கத் தொடரில் மட்டும் அவர் செய்த சாதனைகள் மூக்கில் விரல் வைக்கச் செய்கின்றன. இதோ அந்தச் சாதனைகள்:

ஐ.சி.சி. டெஸ்ட், ஒரு நாள் போட்டிக்கான தரவரிசையில் 900 புள்ளிகளை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் விராட் கோலி. தென் ஆப்பிரிக்க ஒரு நாள் தொடருக்குப் பிறகு தரவரிசையில் 909 புள்ளிகளைப் பெற்றிருக்கிறார் கோலி. ஏற்கெனவே டெஸ்ட் போட்டியில் 912 புள்ளிகளைப் பெற்றிருக்கிறார்.

இதன் மூலம் இரண்டுவிதமான போட்டிகளையும் சேர்த்து 900 புள்ளிகள் பெற்ற முதல் இந்திய வீரரானார் கோலி. ஒட்டுமொத்தமாக இந்த வகையில் அதிகப் புள்ளி பெற்றவர் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ். இவர் 935 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

இரு நாடுகளுக்கு இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் அதிக ரன்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையையும் தனதாக்கிக்கொண்டிருக்கிறார் விராட் கோலி. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆறு ஒரு நாள் போட்டிகளில் 3 சதங்கள் உட்பட 551 ரன்களைக் குவித்த வீரர் கோலி மட்டும்தான். இதற்கு முன்பாக 2013-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவில் நடந்த 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ரோஹித் சர்மா 491 ரன்களைக் குவித்ததே இரு தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் அதிகபட்ச ரன்னாக இருந்தது. இப்போது அந்தப் பெருமையும் கோலியிடம் வந்துவிட்டது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 286 ரன், ஒரு நாள் போட்டியில் 551, டி20 போட்டியில் 26 (21-ம் தேதி நிலவரப்படி) என விளாசியிருக்கிறார் விராட் கோலி. அந்த வகையில் இதுவரை 863 ரன் சேர்த்திருக்கிறார். ஒரு அணிக்கு எதிரான தொடரில் குவிக்கப்பட்ட அதிகபட்ச மூன்றாவது ரன் குவிப்பு இது.

இதற்கு முன்பு 1976-ல் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் 829, ஒரு நாள் போட்டியில் 216 ரன் என 1045 ரன் குவித்து முதலிடத்தில் நீடிக்கிறார் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ். ஆஸ்திரேலியாவின் டொனால்ட் பிராட்மேன் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 974 ரன் எடுத்து இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

ஒரு நாள் போட்டிகளில் ஏற்கெனவே சதங்களாக விளாசிவரும் விராட் கோலி, அதிக சதம் அடித்தோர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்துவருகிறார். செஞ்சுரியனில் நடைபெற்ற கடைசி ஒரு நாள் போட்டியில் 35-வது சதத்தைத் தொட்ட விராட் கோலி ஓசையில்லாமல் ஒரு சாதனையையும் செய்திருக்கிறார். 35 சதங்களை விளாச அவருக்கு 200 ஒரு நாள் போட்டிகள் மட்டுமே தேவைப்பட்டிருக்கின்றன.

49 சதங்களுடன் முதலிடத்தில் உள்ள சச்சின் டெண்டுல்கருக்கு, 35 சதங்களை விளாச 309 போட்டிகள் தேவைப்பட்டிருந்தன. அந்த வகையிலும் ஒரு சாதனையைத் தன் கணக்கில் சேர்த்திருக்கிறார் விராட் கோலி.

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் ஒரு நாள் போட்டிகளை விளையாடத் தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. இந்த 25 ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்காவில் இந்தியா பெற்ற முதல் ஒரு நாள் கிரிக்கெட் (5 -1) தொடர் வெற்றி அண்மையில் முடிந்துதான்.

அதுவும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒட்டுமொத்தமாக சிறப்பாக இந்தியா வென்ற தொடரும் இதுதான். இந்தத் தொடருக்கு கேப்டனாக விராட் கோலி இருந்ததன் மூலம் அந்தப் பெருமையும் அவருக்கே கிடைத்திருக்கிறது. இதற்கு முந்தைய தொடர்களில் (1992 - அசாருதீன், 2001 - கங்குலி, 2006 - டிராவிட், 2011, 2014- டோனி) கேப்டன்களுக்குக் கிடைக்காத பெருமையும் அவருக்கே கிடைத்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x