Last Updated : 13 Feb, 2018 11:28 AM

 

Published : 13 Feb 2018 11:28 AM
Last Updated : 13 Feb 2018 11:28 AM

பிளஸ் டூ தேர்வுக்குத் தயாரா? - தேர்வறை பயம் தேவை இல்லை!

வெறுமனே காதால் கேட்டு மனப்பாடம் செய்யக்கூடிய பாடங்களுக்கு மத்தியில் புரிந்துகொள்ளுதல் கணிதப் பாடத்துக்கு அவசியம். துல்லியம், விரைவு, பிழைகளை எளிதில் அடையாளம் காணல் உள்ளிட்ட திறன்களை வளர்த்துக்கொள்ளும் மாணவர்கள் கணிதத்தில் முழு மதிப்பெண் பெறலாம்.

அடிக்கடி செய்யும் தவறு

நன்றாகப் படிப்பவர்கள்கூட கேள்வியை வாசித்ததும் உடனடியாக நினைவுக்கு வரும் விடையை அவசரமாக எழுதிவிடுகிறார்கள். உதாரணத்துக்கு 7-வது பாடத்தில் துணை அலகு சமன்பாடு குறித்த வினாவில் கேட்ட கேள்வியையும் தாண்டி மாணவர் தான் படித்ததைப் பதிலாக எழுதுவது நடக்கிறது. முதல் பாடத்தில் 3 மாறிகள் 3 சமன்பாடுகளாக இடம்பெறும் வினா, வெவ்வேறு விதங்களில் கேட்கப்படலாம்.

ஒரு மதிப்பெண் வினாவில் சிலர் ஆப்ஷன் சரியாகக் குறிப்பிட்டுவிட்டு விடையை மாற்றி எழுதிவிடுவார்கள். இரண்டுமே சரியாக எழுதினால் மட்டுமே முழு மதிப்பெண் கிடைக்கும். ஒரே விடையை இரு வேறு பக்கங்களில் எழுதுவது, அதிகப்படியாய் எழுதி நேர விரயமாவது, வினா எண் எழுதாது விடையளிப்பது போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்.

கணக்குகளைத் தீர்வு செய்தபின் சரிபார்க்கப்பட்டதை எடுத்து எழுத வேண்டும். இதற்கு ஒரு மதிப்பெண். இதன் மூலம் சூத்திரங்களை எழுதிக் கணக்குகளைத் தீர்ப்பதால் தவறுகள் தவிர்க்கப்படுவதுடன் விடை தவறாகிப் போனாலும் சூத்திரத்துக்கான ஒரு மதிப்பெண்ணையாவது பெற்றுத் தந்துவிடும். தேவையான படங்கள் வரைந்து அதில் குறிப்புகள் எழுதவேண்டும்.

கணிதக் குறிகளான மட்டு, வெக்டர் பெருக்கம் உள்ளிட்டவற்றைக் குறிப்பதில் நன்றாகப் படிப்பவர்களும் அவசரத்திலும் அலட்சியத்திலும் தவறிழைக்கிறார்கள். இத்தவறுகளை உணர்ந்து திருப்புதல்களில் கவனம் செலுத்தினால், பொதுத் தேர்வில் அவற்றைத் தவிர்க்க முடியும்.

நேர மேலாண்மை

தேர்வறையில் மேஜை லேசாக ஆடுகிறது, படித்த கேள்வியில் ஒன்று வரவில்லை போன்ற சாதாரணப் பிரச்சினைகளுக்குக்கூடப் பதற்றமாகி தேர்வு எழுத முடியாமல் தவித்த மாணவர்கள் உண்டு. எனவே திருப்புதலின்போதே கொடுக்கப்பட்ட நேரத்தில் தெளிவாகவும் விரைவாகவும் விடையளித்துப் பழகுதல் நல்லது. தேர்வுக்கு முந்தைய தினம் போதிய உறக்கமும் ஓய்வும் அவசியம். வினாத்தாள் வாசிப்பதற்கு எனக் கூடுதலாக வழங்கப்படும் 15 நிமிடத்தைச் சரியாகப் பயன்படுத்தப் பழகிக்கொண்டால் தேர்வறையைக் கண்டதும் ஏற்படும் பதற்றமும் பயமும் விலகும்.

நேர மேலாண்மை என்பது மற்றப் பாடங்களைவிட கணிதத்தில் மிகவும் முக்கியமானது. 40 வினாக்கள் அடங்கிய ஒரு மதிப்பெண் பகுதிக்கு மொத்தமாக 50 நிமிடம், ஒரு 6 மதிப்பெண் கேள்விக்கு அதிகபட்சம் 5 நிமிடங்கள், ஒரு 10 மதிப்பெண் கேள்விக்கு 8 அல்லது 9 நிமிடங்களில் விடையளித்துப் பழகுவது நல்லது.

150 மதிப்பெண்கள் எளிது

சுமாராகப் படிப்பவர்கள், கடைசி நேரத்தில் படிப்பவர்கள் ஆகியோரின் இலக்கு எப்படியும் 150 மதிப்பெண் பெற்றுவிட வேண்டும் என்பதுதான். இவர்களின் பலவீனம் குழப்பிக்கொள்வதாக இருக்கும். இவர்கள் முக்கிய பாடங்களில் அடிக்கடி கேட்கப்படும் வினாக்களைத் தேர்வுசெய்து படிப்பதுடன் கடைசி நேரத்தில் அவற்றில் மட்டுமே திருப்புதல் மேற்கொள்வது நல்லது.

2-வது பாடத்தில் உள்ள 20 பத்து மதிப்பெண் வினாக்களில் 2 வினாக்கள் தேர்வுக்குக் கேட்கப்படுகின்றன. இதேபோல 4வது பாடத்தின் 29 வினாக்களில் 3, 6-வது பாடத்தில் 10-ல் 1 எனவும் கேட்பார்கள். இவ்வாறு முக்கியப் பாடங்களின் முக்கிய வினாக்களோடு, பாடப் பயிற்சிகளில் முக்கியமானதைத் தேர்வு செய்து படிப்பதும் மதிப்பெண்களை உறுதி செய்யும்.

6 மதிப்பெண்களில் 1, 3, 9 பாடங்களிலிருந்து தலா இரண்டு, 2-வது பாடத்திலிருந்து 2 என மொத்தம் 8 வினாக்களை உறுதி செய்யலாம். ஒரு மதிப்பெண் பகுதியில் முன்பு குறிப்பிட்டதுபோல புத்தக வினாக்களை மட்டுமே படித்து 30 மதிப்பெண்கள் பெறலாம். அந்த வகைகளில் மொத்தம் 162 மதிப்பெண்கள் பெறுவது எளிதாகிறது. சூத்திரங்களைப் படிக்கையில் தொடர்புடைய மற்றச் சூத்திரங்களுடன் ஒப்பிட்டுப் படிப்பது குழப்பங்களைத் தவிர்க்கும்.

திருப்புதல்

தேர்வு நெருக்கத்தில் பாட வாரியாகத் திருப்புதல் மேற்கொள்வதைவிட முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்கள் உதவியுடன் அவற்றைச் செய்யலாம். அதிலும் மார்ச் வினாத்தாள்களுக்கு முன்னுரிமை தருவதும், அதன் பின்னர் ஜூன் மற்றும் அக்டோபர் வினாத்தாள்களுக்குச் செல்வதும் நல்லது. சூழல், மனம், உடல் அனைத்தும் புத்துணர்வாக இருக்கும் அதிகாலையில் கணிதம் பாடத்தைத் திருப்புதல் செய்யலாம்.

எந்தவொரு கணக்கையும் எழுதிப் பார்க்காது திருப்புதல் செய்யக் கூடாது. ஐயங்களைக் குறித்து வைத்துக்கொண்டு உடனுக்குடன் நிவர்த்தி பெற வேண்டும். கணிதத்தைச் சிரமாகக் கருதுபவர்கள், எளிதான பாடத்தில் தொடங்குவதும், குழுவாகச் சேர்ந்து படிப்பதும் உதவியாக அமையும்.

தேர்ச்சி எளிது

10 பாடங்களில் குறைந்தது 3 பாடங்களைத் தன்னம்பிக்கையுடன் திட்டமிட்டுப் படித்தாலே தேர்ச்சி பெறுவது எளிதாகும். இவற்றுடன் ஒரு மதிப்பெண்களுக்காகப் புத்தகத்தின் பயிற்சி வினாக்களில் தொடர்ந்து திருப்புதல் பெறுவதன் மூலம் 30 மதிப்பெண்கள் பெறலாம். 2-வது பாடத்தின் 20 கேள்விகளில் இருந்து 2, 4-வது பாடத்தின் 29 கேள்விகளில் 3 என 5 பத்து மதிப்பெண் கேள்விகளுக்குத் தயாராக முடியும்.

9-வது பாடத்தில் மெய் அட்டவணை படித்தாலே 2 ஆறு மதிப்பெண்களை எழுதலாம். இந்த வகையில் 92 மார்க் தேறும். இவற்றுடன் வினாக்கள் எதையும் தவிர்க்காமல் அவற்றின் முக்கியப் பகுதிகளை எழுதியும் கணிசமான மதிப்பெண் பெறலாம். 9-வது பாடத்தின் எபிலியன் குளம் கேள்வியில் விதிகள் எழுதினாலே 2 மார்க், 8-வது பாடத்தில் சூத்திரங்கள் எழுதினாலே 3 மார்க் உறுதி. இந்த வகைகளில் குறைந்தது 100 மதிப்பெண்களைப் பெறலாம்.

 

 

உச்ச மதிப்பெண்களுக்கு

நூற்றுக்கு நூறு பெற விரும்பும் மாணவர்கள், இழக்க வாய்ப்புள்ள ஓரிரு மதிப்பெண்களை அடையாளம் கண்டு அதில் கூடுதல் கவனம் செலுத்தலாம். சூத்திரங்கள், விடை போன்றவற்றைத் தனித்துக் காட்டுவது சிறப்பு. விடைகளுக்கு உரிய அலகுகளைக் குறிப்பிடுவதுடன் அவற்றை நிறைவாகச் சரிபார்ப்பதும் அவசியம்.

ஒரு மதிப்பெண் பகுதியில் 40-ல் 30 வினாக்கள் பாடத்தின் கடைசியிலிருக்கும் பயிற்சிகளில் இருந்தே கேட்கப்படுகின்றன. இந்த வகையில் 271 வினாக்களில் இருந்து இந்த 30 வினாக்களும், பெற்றோர் ஆசிரியர் கழகத் தயாரிப்பு நூலின் (COME Book) 380 வினாக்களில் இருந்து ஏனைய 10 வினாக்களும் கேட்கப்படுகிறது.

பொதுவாக 6 மதிப்பெண் பகுதியில் மாணவர்கள் மதிப்பெண்களை இழக்கிறார்கள். அதிலும் கட்டாய வினா கடினமாக இருப்பதாக உணர்கிறார்கள். எனவே அப்பகுதி தயாரிப்புகளுக்குக் கூடுதல் நேரம் ஒதுக்கலாம். என்ன படிக்கிறோம் என்பதைப் புரிந்து படிப்பதுடன், அதிலிருந்து கேட்க வாய்ப்புள்ள பல கேள்விகளை அசைபோட்டவாறே கணக்குகளைத் தீர்த்துப் பழக வேண்டும்.

குறைந்தது 8 பாடங்கள் பார்த்தாலேபோதும் என்றாலும், கட்டாய வினாவினை எதிர்கொள்வதற்காகக் கொடுக்கப்பட்டுள்ள 10 பாடங்களையும் படிக்குமாறு பரிந்துரைக்கிறோம்.

பாடக் குறிப்புகளை வழங்கியவர் செந்தமிழ்ச்செல்வி, முதுகலை கணித ஆசிரியர்,கனியம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி, வேலூர் மாவட்டம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x