திருநம்பியும் திருநங்கையும் - 18: அண்ணன் என்ன தம்பி என்ன?

திருநம்பியும் திருநங்கையும் - 18: அண்ணன் என்ன தம்பி என்ன?
Updated on
3 min read

“அண்ணா, நீ எப்படி இருந்தாலும் பரவாயில்லை. நம்ம வீட்டுக்கு வந்துடுண்ணா.”

“நான் அப்படி வர முடியாதுப்பா. இங்க எனக்குன்னு பெரிய சொந்தமே இருக்கு. அவங்கள விட்டுட்டு நான் வர முடியாது.”

“மம்மி.. பேசுறது உங்க தம்பிதானே? அவருதான் எவ்ளோ நாளா கூப்புடுறாரு. ஒரு தடவை போயிட்டு வாங்களேன்.”

“இல்லடி ரோஜா. நான் போறதைப் பத்தி ஒண்ணுமில்ல. நான் வீட்டைவிட்டு வந்து 30 வருஷம் ஆவுது. அவங்களும் விட்டுட்டாங்க. எங்கப்பா அம்மா ரெண்டு பேரு இறந்ததுக்கும் எனக்குச் சொல்லலை. மனசு வெறுத்துப் போச்சுடி.”

“மம்மி, உங்க அம்மாவுமா உங்களை வெறுத்தாங்க?”

“இல்லை. நம்ம திருநங்கைகள்ல பெத்த அம்மா மட்டும்தானே நமக்கு சப்போர்ட்டு. எங்கம்மா என்னைய வீட்டைவிட்டு அனுப்பக் கூடாதுன்னு எவ்வளவோ போராடுச்சி. ஆனா, எங்கப்பா ஜாதி பைத்தியம். நாங்க உயர்ந்த குலத்துல பொறந்தவங்களாம். நான் இப்படி மாறிட்டேன்னு தெரிஞ்சா அவங்க உறவினர்கள் அசிங்கமா நெனப்பாங்களாம். நான் இப்படின்னு தெரிஞ்சதும் என்னை மறைச்சி மறைச்சி வைக்க ஆரம்பிச்சாரு. அது பிடிக்காம நான் வீட்டை விட்டே ஓடிவந்துட்டேன்.”

“விடுங்க மம்மி. சாரி. உங்க பழைய கதையை ஞாபகப்படுத்திட்டேன். நாங்கல்லாம் உங்களுக்கு இருக்கோம் கவலைப்படாதீங்க.”

நம்ம தம்பி ரவியையும் அவன் பிள்ளைங்களையும் போய்ப் பார்த்துட்டு வந்தா என்ன என்று கமலத்துக்கு ஒரே யோசனையா இருந்தது. அவன் ரொம்ப பெரிய ஆளா இருப்பானோ? அவன் பொண்ணுக்கே கல்யாணம் பண்ணிட்டேன்னு சொல்றான். எனக்கே இப்போ 54 வயசாகுது.

நான் வீட்டைவிட்டு வெளில வரும்போது அவனுக்கு 20 வயசுதான் இருக்கும். அவனுக்கும் நம்மை விட்டா யாரு இருக்கா?

“அண்ணா, நீ வர்றேன்னு சொன்னது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். நாங்க எல்லாரும் உனக்காகக் காத்திருக்கோம் வா அண்ணா. என் பிள்ளைங்க, மருமகன், பேரப்புள்ளைங்க எல்லாரும் உன்னைப் பார்க்கணும்.”

ரயில்வே ஸ்டேஷனுக்கே வந்து என்னை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனான். “என்னைய மன்னிச்சுடுக்கா. நான் பழைய உறவுல உன்னை அண்ணன்னு சொல்லிட்டேன். நேர்ல உன்னைய பார்க்கும்போது என்ன சொல்றதுன்னு தெரியல. அப்படியே பொம்பள மாதிரி இருக்கே. இனி அக்கான்னுதான் கூப்பிடுவேன்.”

“நீ எப்படிக் கூப்பிட்டாலும் சரி. என்கூடப் பொறந்தவன். உன்னை நான் தப்பா நினைக்க மாட்டேன்.”

கதையல்ல நிஜம்

 இதுபோன்ற சம்பவங்களும் திருநங்கைகள் மத்தியில் நடந்துவருகின்றன. இந்தக் கதையில் வரும் தம்பி போன்றோர் சொத்துப் பிரச்சினை வந்துவிடக் கூடாது என்பதற்காக உடன்பிறந்த திருநங்கை சகோதரியிடம் இப்படி நடந்துகொள்கின்றனர்.

 தற்போதுள்ள இளம் திருநங்கைகள் படித்து வெளிவருகின்றனர். ஓரளவுக்குத் தெளிவு உள்ளது. மாற்றுப்பாலினத்தவர் குறித்த சட்டங்களையும் அறிந்து வைத்துள்ளனர். ஆனால், 20 வருடங்களுக்கு முன் 50 வயதையொட்டிய பல திருநங்கைகள் நீட்டிய பக்கங்களில் கையெழுத்துப் போட்டுள்ளனர்.

 சில திருநங்கைகள் கடை கடையாகக் காசு கேட்டுக் கஷ்டப்பட்டு உடன்பிறந்தோருக்குத் திருமணம், குழந்தை பிறப்பு, கல்வி போன்றவற்றுக்கு உதவுகின்றனர். ஆனால், அவர்களின் வயது முதிர்ந்து நிலையில் உதவிட பெரும்பான்மையான குடும்பங்கள் முன்வருவதில்லை.

 தமிழக அரசு தரும் உதவிப்பணம் 1,500 ரூபாயை மட்டும் நம்பி இருக்கும் திருநங்கைகளும் உண்டு. ஆனால், இவர்களின் இளமைக் காலத்தில் இவர்களை ஏமாற்றிப் பணம்பறித்தவர்கள் ஏராளமானோர்.

 யார் அன்பாக இருக்கிறார்களோ அவர்களே தனக்கு எல்லாம் என்று அன்பு ஒன்றையே எதிர்பார்த்து வாழும் திருநங்கையரைப் புரிந்துகொள்வோம்.

அவன் பிள்ளைங்க எல்லாரும் வரிசையா என் கால்ல விழுந்தாங்க. அவன் பொண்ணைப் பார்த்தால் அப்படியே எங்கம்மாதான். எனக்குக் கண்கலங்கியது.

“அத்தை அழாதீங்க. நாங்க எல்லாம் இருக்கும்போது நீங்க மும்பைல போய் ஏன் கஷ்டப்படணும்? நீங்க எங்ககூட இருங்க.”

அவள் குழந்தைகளும் என்னைப் பாட்டி என்று அழைத்தது எனக்கு வேறு ஓர் உலகில் இருக்கும் எண்ணத்தை ஏற்படுத்தியது.

“நீங்க எனக்கு அண்ணி முறை ஆவுது. ஆனால், நான் அம்மான்னுதான் கூப்பிடுவேன். ஏன்னா எனக்கு அம்மா இல்ல. அந்தக் குறைய உங்ககிட்ட தீர்த்துக்குறேன் அம்மா”ன்னு என் தம்பி மனைவி என்னிடம் சொல்லும்போது இரண்டாவது தடவை உடைந்து அழுதேன்.

இனி எதற்கு மும்பைக்குப் போகணும்? வேண்டவே வேண்டாம். ஆறு மாசத்துக்கு ஒருமுறை போய் எல்லாரையும் பார்த்துட்டு வருவோம் எனத் தீர்க்கமாய் முடிவுசெய்தேன். என் அப்பா என்னை வெறுத்தார். ஆனால், என் தம்பி என் மேல் அன்பாக இருக்கிறான்.

“அக்கா, உன்னைப் பார்க்கணும்னு நான் எவ்வளவோ முயற்சி பண்ணேன். ஆனா, முடியல. அப்பாதான் உன் பேச்சை எடுத்தா கோபப்படுவார். அதனாலேயே நான் அமைதியாகிடுவேன்.”

“சரி விடுப்பா. நடந்ததை மறந்துடுவோம். இனி சந்தோசமா இருப்போம்.”

வீட்டில் எல்லாவிதமான சமையலும் தடபுடலாகத் தயாரானது.

“அத்தை, நீங்களும் அப்பாவும் நாளைக்கு ரெஜிஸ்டர் ஆபீஸ் வரை வரணும். தாத்தா சொத்து உங்க ரெண்டு பேருக்கும் சரிபாதியா பிரிச்சதுல கையெழுத்துப் போடணும்.”

“அதுக்கெல்லாம் என்னம்மா அவசரம்? பொறுமையா பண்ணலாமே?”

“இல்ல அத்தை. உங்களுக்கு என்ன சேரணுமோ அதை உங்க பேர்ல மாத்தணும்.”

என் மருமகள் நீட்டிய அத்தனை பேப்பரிலும் கையெழுத்துப் போட்டேன். ரெண்டு அரசுப் பதிவு அலுவலகங்களுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. அங்கெல்லாம் நானும் என் தம்பியும் பக்கம் பக்கமாகக் கையெழுத்துப் போட்டோம்.

“நாளைக்கு நான் மும்பைக்குப் போய் என் திருநங்கை சொந்தங்கள் எல்லாரையும் பார்த்துட்டு நிரந்தரமா என் துணிமணிகளை எடுத்துட்டு வந்துடுறேன்பா.”

மும்பையில வந்து இறங்குனதும் தன் திருநங்கை பொண்ணுங்க எல்லார்கிட்டேயும் நடந்ததைச் சொல்லிச் சந்தோஷப்பட்டாள் கமலம்.

“ஏண்டி என் தம்பிக்கு போன் போக மாட்டேங்குது? இங்க வந்ததில் இருந்து அவனும் போன் பண்ணல. இது என்னானு பாருடி.”

“மம்மி, நீங்க கொடுத்த எல்லா நம்பரும் பிளாக்ல இருக்கு. இருங்க என் நம்பர்ல போடுறேன்.”

ரிங் போனது. ஸ்பீக்கரில் போட்டாள் ரோஜா.

“ஹலோ..”

“யாரு?”

“வணக்கம் மாமா. நான் மும்பைல இருந்து பேசுறேன். உங்கக்கா கமலம்மாவோட திருநங்கை மகள் நான். எப்படி இருக்கீங்க?”

“யாரு நீங்க? ராங் நம்பர். கமலம், கோமளம்னு யாரையும் எங்களுக்குத் தெரியாது.”

“ஐயோ மம்மி. நம்பர் தப்பா போட்டுட்டேன். மறுபடியும் நம்பர் சொல்லுங்க.”

“அடியே ரோஜா. அது என் தம்பிதாண்டி”

(தொடரும்)

கட்டுரையாளர், திருநர் செயற்பாட்டாளர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in