

இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் ஒடிசா மாநிலம் புரி நகரத்தில் அமைந்த ஸ்ரீ ஜெகந்நாதர் கோயில், சக்தி பீடங்களுள் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இத்தலத்தில் ஜெகந்நாதர் தனது சகோதரர் பலராமர், சகோதரி சுபத்ரா தேவியுடன் அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் உள்ள மூலவர் விக்கிரகங்கள் மரச் சிற்பங்களால் ஆனவை என்பது தனிச்சிறப்பு. ‘உத்கலம்’ என்று அழைக்கப்படும் ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ளது புரி நகரம். சோழ மன்னர் அனந்த வர்மன் சோதங்க தேவனால் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஸ்ரீ ஜெகந்நாதர் கோயில், இந்நகரத்துக்கு சிறப்பு சேர்க்கிறது.
தல வரலாறு: பாரதப் போர் நிறைவு பெற்ற பிறகு, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், யாதவர்களின் போக்கு பிடிக்காமல் தனித்து அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வேடன், மான் என்று நினைத்து அம்பு எய்தினான். அந்த அம்பு ஸ்ரீகிருஷ்ணரின் காலைத் தைத்தது. விபரம் அறிந்த வேடன் மனம் கலங்கினான்.
அவனுக்கு ஆறுதல் சொன்ன ஸ்ரீகிருஷ்ணர், ‘வேடனே வருந்த வேண்டாம். இச்சம்பவத்துக்கு நீ காரணமல்ல. நான் ஸ்ரீராமராக அவதாரம் எடுத்தபோது வாலியை மறைந்திருந்து அழிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. நானும் அவனை அழித்தேன். அதற்கான பலனே தற்போது எனக்கு கிடைத்துள்ளது’ என்று கூறி, திருமேனியை விட்டு விண்ணுலகம் கிளம்பினார்.
கலங்கிய கண்களுடன் வேடன், ஸ்ரீகிருஷ்ண ரின் உடலை தகனம் செய்தான். உடல் எரிந்து கொண்டிருக்கும்போதே, வேடன் அங்கிருந்து கிளம்பிவிட்டான். திடீரென்று பெய்த மழையால், ஸ்ரீகிருஷ்ணரின் உடல், வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது. மக்கள் அதைக் கண்டுபிடித்து, அது ஸ்ரீகிருஷ்ணரின் உடல் என்பதை அறிந்து, அங்கு கோயில் எழுப்பினர். இக்கோயிலே புரி ஜெகந்நாதர் கோயில் ஆகும்.
ஜெகந்நாதர் கோயில் 665 அடி நீளமும், 640 அடி அகலமும் கொண்டது. பிரகாரச் சுவர் 20 அடி முதல் 24 அடி உயரத்தைக் கொண்டது. இக்கோயிலில் 4 திசைகளிலும் நான்கு மகா துவாரங்கள் உள்ளன. ஸ்ரீஜெகந்நாதர் கோயில், விமானம், ஜகன் மோகனம், நிருத்ய மந்திரம், போக மந்திரம் என்று 4 பகுதிகளாக அமைந்துள்ளது. பிரதான மூர்த்திகள், 4 அடி உயரம் 16 அடி நீளமுள்ள ஒரு கல் மேடையின் (ரத்னவதி) மீது ஸ்தாபிக்கப்பட்டுள்ளனர்.
மேடையில் மேல் வடக்குப் பகுதியில் 6 அடி உயர சுதர்சன சக்கரம் அமைந்துள்ளது. சக்கரத்துக்கு தெற்குப் பகுதியில் ஸ்ரீ ஜெகந்நாதர், சுபத்திரை, பலபத்ரனின் மூர்த்திகள் நின்ற நிலையில் அருள்பாலிக்கின்றனர். சகோதரத்துவத்தை உணர்த்துவதாக இத்திருமேனிகள் அமைந் துள்ளன. ஜெகந்நாதருக்கு ஒருபுறம் லட்சுமி தேவியும், மறுபுறம் சத்தியபாமாவும் அருள்பாலிக்கின்றனர்.
இங்குள்ள முக்தி மண்டபத்தில் பண்டிதர்கள் சேர்ந்து பூஜை, பாடம் கற்பித்தல், சாஸ்திரம் தொடர்பான விவாதங்கள் நடைபெறும். அருகேயே 51 சக்தி பீடங்களில் ஒன்றான விமலா தேவி பீடம் (பைரவி பீடம்) அமைந்துள்ளது. புரி தலத்தின் பாதுகாவலராக விமலா தேவி விளங்குகிறார்.
ஜெகந்நாதர் கோயில் மூர்த்திகளுக்கு ஆரதி அலங்காரம், அவகாசர் அலங்காரம், ப்ரஹார அலங்காரம், தாமோதர அலங்காரம், வாமன அலங்காரம், சிருங்கார அலங்காரம், சந்தன அலங்காரம், பவுத்தாயர் அலங்காரம், கணேச அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.
மரச் சிற்பங்கள்: ஸ்ரீ ஜெகந்நாதர் 5 அடி உயரத்தில் நீல நிறத்தில் உள்ளார். சுபத்திரை பிரதிமை 4 அடி உயரத்தில் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. முன்பொரு காலத்தில் கடலில் மரத்துண்டுகள் மிதந்து வந்து கொண்டிருந்தன. அப்போது ஆட்சி புரிந்து கொண்டிருந்த மன்னர் இந்திரத்யும்னன் கனவில் இறைவன் தோன்றி, கடலில் மிதந்து வரும் மரத்துண்டுகளைப் பயன்படுத்தி தனது மூர்த்திகளை செதுக்கும்படி அருளினார். மன்னரும் அதை ஏற்று மரத்துண்டுகளை சேகரித்தார்.
அப்போது தேவலோக சிற்பி விஸ்வ கர்மாவே தச்சனாக வடிவம் கொண்டு மன்னர் முன்பு நின்றார். மன்னரும் மரத்துண்டுகளைக் கொண்டு தனக்கு இறை வடிவங்களை செதுக்கித் தருமாறு அவரைப் பணித்தார். அரசரின் கட்டளையை ஏற்ற தச்சன், இறைவடிவங்களை செய்து முடிக்க ஒரு மாதம் ஆகும் என்றும், அதுவரை கருவறையைத் திறக்க வேண்டாம் என்றும் கூறினார்.
ஒருமாத காலம் நிறைவடைய இன்னும் இரண்டொரு நாட்கள் இருந்த சமயத்தில், வேலை எந்த அளவுக்கு முடிந்துள்ளது என்பதை அறியும் ஆவலில், அரசர் கருவறையைத் திறந்துவிட்டார். தச்சனின் நிபந்தனையை அரசர் மீறியதால், வேலை அப்படியே நின்றுவிட்டது.
தச்சனும் அந்த இடத்தில் இருந்து மறைந்துவிட்டார். இதனால் இறை வடிவங்கள், கை, கால், மூக்கு, கண்கள் செதுக்கப்படாமலேயே நின்று போயின. இன்றளவும் இறைமூர்த்திகள் இங்கு அதே நிலையிலேயே உள்ளன. 36 ஆண்டுகளுக்கு ஒரு முறை இரண்டு ஆஷாட (ஆடி) மாதங்கள் வரும்போது, கடலில் 3 மரத்துண்டுகள் மிதந்து வருவதாக அறியப்படுகிறது.
அந்த மரத்துண்டுகளைப் பயன்படுத்தி, அவ்விதமே புதிய இறைவடிவங்களை செய்து, பழைய மூர்த்திகளுக்கு இடையே ஸ்தாபிப்பது வழக்கம். மூலவர் மூர்த்திகளின் வடிவங்கள் புனித வேப்பமரம் என்று அழைக்கப்படும் தாரு பிரமத்தால் செய்யப்படுகின்றன. இந்திரத்யும்ன மன்னருக்கு உலோகப் பிரதிமை அமைக்கப்பட்டுள்ளது.
கோயில் அதிசயங்கள்: திருமால் காலையில் ராமேசுவரத்தில் இருப்பதாகவும், மதியம் உணவருந்தும் பொருட்டு புரியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது, அதனால் இத்தலத்தில் மதிய உணவு சிறப்பாக தயாரிக்கப்படும். உணவுப் பாத்திரங்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி உணவு தயாரிக்கும்போது, மேலே உள்ள பாத்திரத்தில் இருக்கும் உணவு முதலில் வெந்துவிடுவதாக அறியப்படுகிறது. மேலும் இங்கு எவ்வளவு உணவு தயாரித்தாலும், அதில் எதுவும் வீணாவதில்லை. முதலில்விமலா தேவிக்கு நிவேதனம் செய்த பிறகே ஜெகந்நாதருக்கு நிவேதனம் செய்யப்படுகிறது.
ஜெகந்நாதர் கோயில் கோபுரத்தின் நிழல் கீழே விழுவதில்லை. பறவைகள் கோயிலின் மேல் பறப்பதில்லை. கோபுரத்தின் மீது எந்தப் பறவையும் அமர்வதில்லை. கோபுரத்தின் மீதுள்ள சுதர்சன சக்கரம், பக்தர்கள் எந்த திசையில் இருந்து பார்த்தாலும் ஒன்றுபோல காட்சியளிக்கும். கோபுரத்தின் மீதுள்ள கொடி காற்றடிக்கும் திசைக்கு எதிரான திசையில் பறக்கும். ஒவ்வொரு நாளும் மாலை வேளையில் இக்கொடி மாற்றப்படும்.
கோயிலில் கடலலை சப்தம் கேட்பதில்லை. ஆடி மாதத்தில் அமாவாசைக்குப் பிறகு வரும் துவாதசி தினத்தில் நடைபெறும் ரதோற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இத்தருணத்தில், மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், தங்க துடைப்பத்தால் சாலைகளை தூய்மைப்படுத்துவர். ஒவ்வொரு ஆண்டும் புதிய தேர்கள் செய்வது இங்கு வழக்கமாக உள்ளது. ஜெகந்நாதரின் தேர் 45 அடி, சுபத்திரையின் தேர் 43 அடி, பலபத்ரரின் தேர் 44 அடி உயரம் கொண்டதாக இருக்கும்.
- sundararaman.k@hindutamil.co.in